*வனத்துறையினர் விசாரணை
வால்பாறை : வால்பாறை அடுத்துள்ள கேரளா மயிலாடும்பாறை எஸ்டேட்டில் நேற்று காலை தோட்ட பணியில் இருந்த பெண்களை ஒற்றை யானை துரத்தி தாக்கியதில் பெண் ஒருவர் காயம் அடைந்தார். மற்றொருவர் ஓடி தப்பியதில் கீழே விழுந்து காயம் அடைந்தார்.மயிலாடும்பாறை புதுக்காடு எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் வன எல்லையோரம் உள்ள தேயிலை தோட்டத்தில் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியைவிட்டு வெளியேறிய காட்டு யானை தேயிலை தோட்டத்திற்குள் வந்தது.
அங்கு, தேயிலை பறிக்கும் பணியில் இருந்த தோட்டத் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் ராஜலட்சுமி (57) என்பவர் காட்டு யானையிடம் சிக்கிக்கொண்டார். ராஜலட்சுமியை யானை தந்தத்தால் விலா பகுதியில் குத்தி தூக்கி வீசியது. அருகில் பணியில் இருந்த சூப்ரவைசர் ராதா (50) மற்றும் சிலரும் யானையிடம் தப்பிக்க ஓடியதில் கிழே விழுந்து காயம் அடைந்தனர்.
இந்நிலையில், காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் தேயிலைத்தோட்டத்திற்குள் நடமாடியது. அருகில் இருந்தவர்கள் சத்தம்போட்டு காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர், காயமடைந்தவர்களை மீட்டு உருளிக்கல் நிர்வாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், படுகாயமடைந்த ராஜலட்சுமியை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை காட்டு யானை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம் appeared first on Dinakaran.