×

உலக தரத்தில் ஒலிம்பிக் அகாடமி, கிரிக்கெட், ஹாக்கி மைதானங்கள் உருவாக்கம்; விளையாட்டு வீரர்களின் சாதனை களமாக மாறும் தமிழ்நாடு: சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள், கோப்பைகள் வெல்ல முனைப்பு

செஸ் ஒலிம்பியாட், எப்-4 கார் ரேஸ், சர்வதேச ஹாக்கி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் என சர்வதேச மற்றும் நாட்டின் முக்கிய போட்டிகளை நடத்தி இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு உருவெடுத்து வருகிறது. மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தடம் பதித்து வருகின்றனர்.
அதே சமயம் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் தேசிய மற்றும் ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடிவதில்லை. விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஆசியப் போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டிக்குள் நுழைய வேண்டும் என்றால் தீவிர பயிற்சி மட்டுமின்றி சர்வதேச தரத்துடன் கூடிய விளையாட்டு மைதானங்கள் இருக்க வேண்டும். சர்வதேச தரம் வாய்ந்த மைதானங்களில் பயிற்சி பெறும்போதுதான் சிறந்த வீரர்கள் கிடைப்பர். இவ்வாறு சர்வதேச தர மைதானங்கள், திறமையான பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளால் ஆசியா மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் நுழையும் வாய்ப்புகளை எளிதில் பெற முடியும். தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெங்கும் உள்ள வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் பதக்கங்கள், கோப்பைகள் வென்று சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒலிம்பிக் அகாடமி, கிரிக்கெட் மைதானம், ஹாக்கி மைதானம் என பல்வேறு கட்டமைப்புகளை, துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் உருவாக்கி வருகிறார்.

அந்த வகையில் மதுரை, திருச்சியில் சர்வதேச தரத்திலான மைதானங்கள் அமைக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன்படி ஆசியா மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்குள் தமிழக வீரர்கள் நுழையும் கனவை நனவாக்கிடும் வகையில் மதுரையில் கால்பந்து மைதானத்துடன் கூடிய ஓடுதளம், ஒலிம்பிக் அகாடமி, வீரர்களின் உடல்திறனை சோதிக்கும் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் உள்ளிட்டவைகள் அமைகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரைக்கிளை சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானம் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து போன்றவற்றுக்கு ஏற்கனவே உள்விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. இங்கு ஏற்கனவே கால்பந்து மைதானம் நடுவில் இருக்க, சுற்றிலும் செயற்கையிழை ஓடுதளம் ரூ. 4 கோடியில் அமைக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் சேதமடைந்ததால் முழுவதுமாக மாற்றி புதிய சர்வதேச அளவிலான ஓடுதளம் ரூ. 8.25 கோடியில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. நடுவில் கால்பந்து மைதானம், அதனை சுற்றிலும் செயற்கையிழை ஓடுதளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மழை பெய்தால் தண்ணீர் வெளியேறும் வகையில் செயற்கையிழை ஓடுதளத்தை சுற்றிலும் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.

ஓடுதளத்தில் பழைய ரப்பர் மூலப்பொருட்கள் அகற்றப்பட்டு விட்டன. இதன் மேல் நவீன ரப்பர் மூலப்பொருள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணி முடிந்ததும் ஓடுதளம், நடுவே கால்பந்து மைதானம் 3 அடி ஆழத்திற்கு தோண்டப்பட உள்ளது. அந்த இடத்தில் வெளிநாட்டு புற்கள் வளரும் வகையில் செம்மண், உரம் உள்ளிட்ட மண் கலவை கொண்டு நிரப்பப்படும். அதன் மேல் பகுதியில் புற்கள் வளர்க்கப்பட உள்ளன. இதேபோல், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே சூரியூர் செல்லும் சாலையில் அரை வட்ட சாலை பகுதியில் 47 ஏக்கர் பரப்பளவில் ஒலிம்பிக் அகாடமி ரூ. 150 கோடியில் அமைய உள்ளது. சமீபத்தில் திருச்சி வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒலிம்பிக் அகாடமி அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து, மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா கூறுகையில், ‘‘வீரர்களுக்கு பயிற்சி முதலில் முக்கியம். கடந்த காலங்களில் விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், பயிற்சிக்காகவும் சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் அங்கு செல்ல முடியாத நிலை இருந்தது. சென்னையில் தங்கி பயிற்சி பெற வேண்டும் என்றால், பொருளாதார ரீதியாகவும் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது சர்வதேச தரத்துடன் திருச்சி, மதுரை ஒலிம்பிக் அகடாமி, விளையாட்டு மைதானங்கள் அமைய உள்ளதால் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பணிகள் முடிந்தால் தென் மாவட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்று ஒலிம்பிக்கில் ஜொலிக்க மதுரை சர்வதேச களமாக இருக்கும்’’ என்றார்.

 

The post உலக தரத்தில் ஒலிம்பிக் அகாடமி, கிரிக்கெட், ஹாக்கி மைதானங்கள் உருவாக்கம்; விளையாட்டு வீரர்களின் சாதனை களமாக மாறும் தமிழ்நாடு: சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள், கோப்பைகள் வெல்ல முனைப்பு appeared first on Dinakaran.

Tags : Olympic Academy ,Tamil Nadu ,India ,Chess Olympiad ,F-4 Car Race ,International Hockey ,Galo India Games ,Madurai ,Virudhunagar ,Theni ,Dindigul ,Sivaganga ,Nella ,World Class Olympic Academy ,Dinakaran ,
× RELATED வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில்...