- ஐயப்ப அறிவோம் 33
- ராஜகுமரன்
- மணிகண்டன்
- நீலிமலை
- சபரிபீடம்
- சபரி அண்ணா
- துர்கா
- பைரவர்
- Sabarimalai
- பாஸ்மா
- ஐயப்பா அறிவோம்
மணிகண்டன் தொடர்ந்து மன்னரிடம், ‘‘நீலிமலை வந்தபிறகு, சபரி அன்னை முக்தியடைந்த சபரிபீடம் மற்றும் தாய் துர்க்கை மற்றும் பைரவரையும் வணங்கி, நான் குடிகொண்டிருக்கும் சபரிமலையை அடைய வேண்டும். பாவங்களை போக்கும் புண்ணிய பஸ்ம குளத்தில் நீராடி விட்டு 18 படிகள் முன் வந்தடைந்ததும், தந்தை சிவனின் அம்சத்தால் உருவாக்கப்பட்ட கருப்பண்ணசாமி, கொச்சு கடுத்தன், வலிய கடுத்தனையும் வணங்கினால் அவர்களின் பரிபூரண ஆசியும் கிடைக்கும். 18 சத்தியமயமான தத்துவங்களை வலியுறுத்தக்கூடிய 18 படிகளில் குடியிருக்கும் தெய்வங்களையும் வணங்கி அனுமதி பெற்று என்னை காண வரவேண்டும்.
உலக நன்மைக்காக தியான நிலையில் இருக்கும் நான், உனக்காக (பக்தர்) காத்திருப்பேன். ஏற்கனவே கூறியபடி உனது மகனாக, ராஜகுமாரனாக வளர்ந்ததாலும், நீ என்னை அரசனாக முடிசூடி பார்க்க விரும்பியதால், அன்றைய தினம் சபரிமலை கருவறையில், அரண்மனையில் உள்ள ஆடை ஆபரணங்களுடன் ராஜகுமாரராக காட்சியும் தருவேன். எனக்கான ஆடை ஆபரணங்கள் அரண்மனையில் இருந்து புறப்படும்போது, வழிகாட்டியாக விஷ்ணுவின் வாகனமான கருடன் வரும்.
தெய்வ அம்சமாக இருந்தாலும், உமது மகனாக வளர்ந்ததால், தந்தை முன் மகன் அமர்ந்திருக்கக் கூடாது என்ற சாஸ்திர விதி இருக்கிறது. நீங்கள் 18 படி வந்தடைந்ததும், நான் வந்து தந்தைக்கு செய்ய வேண்டிய பாத பூஜை செய்து உங்களை அழைத்து செல்வேன்’’ என்று கூறினார். (சபரிமலையில் இன்று வரை சுவாமி ஐயப்பனின் பிரதிநிதியாக கோயிலில் இருக்கும் நம்பூதிரி, மேல்சாந்திகள் 18 படிகள் வழியாக இறங்கி வந்து, பந்தள அரண்மனையிலிருந்து வரும் ராஜ பிரதிநிதிக்கு மரியாதை செலுத்தி ஐயப்பன் முன் அழைத்து செல்லும் வழக்கம் உள்ளது).
மேலும், கோயில் அமைதல், வழிபட வேண்டிய தெய்வங்கள், சபரிமலை யாத்திரையின்போது வரும் பாதை, கடைபிடிக்க வேண்டிய வழிமுறையை தொடர்ந்து பக்தர்கள் (தந்தை உட்பட), சபரிமலை வருவதற்கு கடைபிடிக்க வேண்டிய விரத நெறிமுறைகள், வழிபாட்டு முறைகள் உள்ளிட்ட அனைத்தையும் விளக்குகிறார் மணிகண்டன். ஐயப்பன் வழிபாடு, விரதமுறையை ஐயப்பனே நிர்ணயித்ததால் தான் அது மற்ற விரத முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, மூடநம்பிக்கையிலிருந்து மாறுபட்டு, மருத்துவம், அறிவியல் கலந்த கடும் பிரம்மச்சரியத்துடன் கூடிய சத்தியத்துடனும், தனித்துவமாகவும் அமைந்துள்ளது. சாமியே சரணம் ஐயப்பா
(நாளையும் தரிசிப்போம்).
சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு
The post ஐயப்பன் அறிவோம் 33: ராஜகுமாரன் appeared first on Dinakaran.