×

பனிக்காலத்தில் ஏற்படும் சரும பிரச்னைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? மருத்துவர்கள் ஆலோசனை

* சிறப்பு செய்தி
நா ட்டில் பருவ நிலை மாற்றத்தால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கோடை காலங்களில் அதிகமான வெயிலும், மழைக்காலத்தில் அதிகமான மழைப்பொழிவும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு முறையும் பருவநிலை மாற்றம் ஏற்படும்போது மனிதர்களுக்கு பல்வேறு இணை நோய்கள் ஏற்படுகிறது. இதனால் அதிலிருந்து வெளியே வருவதற்கு கிட்டத்தட்ட அவர்களுக்கு ஒரு மாதம் வரை ஆகிவிடுகிறது. கோடை காலத்தில் இருந்து மழைக்காலத்திற்கும், மழைக்காலத்திலிருந்து குளிர்காலத்திற்கும், மீண்டும் குளிர்காலத்திலிருந்து படிப்படியாக கோடை காலத்திற்கும் மனிதர்கள் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு காலநிலை மாற்றங்கள் ஏற்படும்போது மனிதர்கள் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கடுமையான உடல் நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. கோடை காலத்தில் அதிகப்படியான வெயில் காரணமாக உஷ்ணம் அதிகரித்து பலரும் தோல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள், கண் எரிச்சல் போன்ற பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அதேபோல மழை காலங்களில் சளி, இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இதிலிருந்து வெளியே வருவதற்கே பொதுமக்களுக்கு ஒரு மாதம் ஆகிவிடுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு காலகட்டங்களிலும் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அதில் மாட்டிக்கொண்டு அதன் பிறகு மருத்துவரிடம் சென்று அதிலிருந்து படிப்படியாக வெளியே வருகின்றனர். தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இன்று முதல் மார்கழி மாதம் தொடங்குகிறது. பொதுவாக மார்கழி மாதம் என்றாலே பனி அதிகமாக இருக்கும். தமிழகத்தில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தற்போது பனிக்காலத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக பனிக் காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஜலதோஷம் அதிகரிக்கும். மேலும் சளி, தொண்டை கரகரப்பு போன்ற பிரச்னைகளும் வரும். இவை பொதுவாக அனைவருக்கும் ஏற்படுகின்ற ஒரு சில குறைபாடுகள். ஆனால் பனிக்காலத்தில் தோல் சம்பந்தமான நோய்களும் அதிகளவில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கோடைகாலத்தில் எப்படி வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தோல்கள் சுருங்கி வறண்டு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறதோ, அதேபோன்று பனி காலங்களிலும் தோல் சம்பந்தமான பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றை ஆரம்ப நிலையிலேயே கவனிக்கவில்லை என்றால் தோல் சம்பந்தமான பல்வேறு பிரச்னைகள் படிப்படியாக அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் தோல் நோய் மற்றும் அழகியல் துறை தலைமை மருத்துவர் ஆனந்தன் கூறுகையில், வழக்கமாக பனிக்காலத்தில் மனிதர்களின் தோல் வறண்டு விடும். அவ்வாறு வறண்டு விட்டால் அரிப்பு ஏற்படும். சிலருக்கு இது அதிகப்படியாக இருக்கும். அவ்வாறு அரிப்பு ஏற்படும்போது அவர்கள் அதை சொரிந்துவிட்டால் இன்பெக்சன் ஏற்படும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இந்த இன்பெக்சன் சற்று அதிகமாக ஏற்படும். சில குழந்தைகளுக்கு ஸ்கின் ட்ரை ஆகி விட்டது என்றால் கொசு அதிகமாக கடிக்கும்.

ஏற்கனவே ஸ்கின் ட்ரையாக இருக்கும்போது கொசு கடித்தால் இது தோலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இவையெல்லாம் பொதுவாக பனி காலத்தில் நடைபெறும் பிரச்னைகள். பொதுவாகவே பனிக்காலத்தில் சிலருக்கு ஸ்கின் ட்ரையாகிவிடும். அதனால் மேற்கண்ட பிரச்னைகள் ஏற்படும். இதனை போக்குவதற்கு பனிக்காலத்திலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நமது தோல் எதுபோன்ற தோல் என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற தரமான மாய்ச்சரேசஸ் கிரீம்களை பயன்படுத்தலாம். தோலுக்கு ஏற்ற வகையில் தரமான சோப்புகளை பயன்படுத்த வேண்டும்.

ஆனால் இதுபோன்ற கிரீம்கள் மற்றும் லோசன்களை பயன்படுத்துவதால் மூன்று மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரம் மட்டுமே அது நமது தோலில் வேலை செய்யும். அதன் பிறகு நாம் அதை மீண்டும் பயன்படுத்த வேண்டியது இருக்கும். அதே நேரத்திற்கு அதை அதிகமாக பயன்படுத்தினாலும் பிரச்னை. எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி எந்த கிரீம்களாக இருந்தாலும் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். பனிக்காலத்தில் ஸ்கின் பிரச்னை உள்ளவர்கள் வெளியே செல்லும்போது முடிந்தவரை சற்று திக்கான உடைகளை அணிந்து செல்லலாம்.

மஞ்சள் கிருமி நாசனி என்றாலும் தற்போது மஞ்சளில் நிறைய கலப்படம் ஏற்படுவதால் அதுவே நிறைய பேருக்கு அலர்ஜி பிரச்னையை கொண்டு வந்து விடுகிறது. இதேபோல் சிலர் வேப்பிலை பயன்படுத்துகின்றனர். அதுவும் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. எனவே நமது ஸ்கின் எதை ஏற்றுக் கொள்ளும் என்பதை நன்கு உணர்ந்து அதற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும். மேலும் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் தாங்களாகவே கிரீம்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தக் கூடாது என என்றார்.

* கெமிக்கல் வேண்டாம்
பெரும்பாலும் மழைக்காலம் மற்றும் கோடை காலத்தில் மனிதர்களின் தோல்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு ஒரு சில நாட்களில் அது பழகிவிடும். சிலருக்கு அந்த சீர்தோச நிலை முடியும் வரை தொடர்ந்து, அவர்கள் மருந்து மாத்திரைகள் மற்றும் கீரீம்களை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அவ்வாறு பலர் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு அழகு சாதனப் பொருளை வாங்கும்போதும் அதில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, எவ்வளவு கெமிக்கல் உள்ளது என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அதனை 90 சதவீத மக்கள் பார்ப்பது கிடையாது. நாம் வாங்கும் கிரீம்களில் அந்த விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றால் கண்டிப்பாக பொதுமக்கள் அந்த கிரீம்களை வாங்கக்கூடாது. அனைவருக்கும் ஒரே விதமான ஸ்கின் இருப்பது கிடையாது. ஒவ்வொருவருக்கும் தோலின் தன்மை, உடல் நிலை மாறுபடும். எனவே அதற்கு ஏற்ற வகையில் அழகு சாதனப் பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் பிரச்னைகள் கண்டிப்பாக வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

* அலட்சியம் கூடாது
பொதுவாக ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏற்படும் பிரச்னைகளுக்கு யூடியூபில் பலரும் மருத்துவ குறிப்புகளை கூறுவார்கள். அந்த வகையில் பனிக்காலத்திற்கு முகத்திற்கு இது போன்ற கிரீம்களை பயன்படுத்துங்கள், வீட்டிலேயே இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துங்கள் என பலரும் மருத்துவ குறிப்புகளை கூறி வருகின்றனர். ஆனால் மனிதர்களின் தோல் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. மனிதர்களின் உடம்பில் ஆறு விதமான ஸ்கின் உள்ளது. ஒவ்வொரு தோலுக்கும் என்ன தன்மை உள்ளது என்பதை மருத்துவர்கள் மூலம் அறிந்து அதற்கு ஏற்ற வகையில் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். யூடியூப் பார்த்து அல்லது நண்பர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று மலிவான கிரீம்களை பயன்படுத்தினால், அதனால் பல பிரச்னைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

* விளம்பரத்தை நம்பி மோசம்
முகப்பொலிவுக்கு பல்வேறு அழகு சாதன பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, முகத்தை வெள்ளையாக மாற்றுவதாக கூறி பல நிறுவனங்கள் தங்களது கிரீம்களை விளம்பரம் செய்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விளம்பரத்தில் தெரிவித்ததைப்போல் முகத்தை பொலிவாக்கத் தவறியதாகக் கூறி பிரபல தனியார் கிரீம் நிறுவனத்துக்கு டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் ரூ.15 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் வழக்கு தொடர்ந்த நபர், குறிப்பிட்ட அந்த கிரீமை, தான் கடந்த 2013ல் இருந்தே உபயோகித்து வருவதாகவும், இதனால் தனக்கு முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். வாடிக்கையாளரை ஏமாற்றும் விதமாக விளம்பரம் செய்ததற்காக அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

The post பனிக்காலத்தில் ஏற்படும் சரும பிரச்னைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? மருத்துவர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஐயப்பன் அறிவோம் 36: சுவாமி ஐயப்பன்