×

சிவகங்கையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை, அக். 5: சிவகங்கையில் இன்று (அக். 5) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.

சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெறும். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 3000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8ம் வகுப்பு முதல் 10மற்றும் 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்துகொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் முகாமில் பங்கேற்கலாம். இம்முகாமில் வேலைவாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கையில் இன்று வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Sivakanga ,Sivaganga ,Asha Ajit ,Employment and Training Department ,Sivakangai ,
× RELATED சிங்கம்புணரி -சிவபுரிபட்டியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு ..!!