சென்னை: கவர்னர் பதவியில் இருந்து கொண்டு ஆர்.என்.ரவி அரசியல்தான் செய்கிறார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: காந்தி மண்டப வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது என கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார். பாட்டில்கள் கிடந்திருக்கின்றன, அதை மதுபாட்டில்கள் என்கிறார். சென்னை மாநகரத்தை இரவு வேளையில் சுத்தம் செய்யும் பணிகளை மாநகராட்சி தீவிரமாக செய்து வருகிறது. காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடம் போன்ற இடங்களை பகல் நேரங்களில், அங்குள்ள தொழிலாளர்களை வைத்து சுத்தம் செய்து வருவது வழக்கமாகும்.
அதிக குப்பை சேரும் மெரினாவை கூட, சுத்தமாக வைத்துக் கொள்ள கூடிய அளவுக்கு திமுக அரசு செயலாற்றி வருகிறது. சுத்தத்துக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். வீட்டை நாம் பாதுகாப்பாக தான் வைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் திடீரென திருடன் நுழைந்து திருடிவிட்டால், அந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று சொல்லமுடியாது. எதனால் பாதுகாப்பு குறைவு? என்பதை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அதைவிடுத்து பாதுகாப்பு குறைவு என்று சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் கிடையாது.
திமுக அரசு எப்போதுமே மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு. அதேவேளையில் எல்லா மாநிலங்களும் ஒன்றிணைந்தால்தான் மதுவை ஒழிக்க முடியும். தமிழ்நாடு அரசு மட்டும் அதை ஒழிக்க முடியாது. நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக ஒரு கொள்கை கொண்டு வந்தால்தான் மதுவை ஒழிக்க முடியுமே தவிர, தமிழகத்தில் மட்டும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் அது முடியாது. எல்லா மாநிலங்களும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மதுவிலக்கு கொண்டு வர நாங்களும் தயார். தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு கொண்டு வந்தால், இங்கு கள்ளச்சாராயம்தான் பெருகும்.
எதிர்காலத்தில் இந்தியா கூட்டணி அரசு வரும் போது, எல்லா மாநில அரசுகளுடன் பேசி, மதுவிலக்கு குறித்த தீர்மானத்தை கொண்டு வர முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்வார். திமுக ஆட்சியில் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் ஆதிதிராவிட மக்கள் மீதான தாக்குதல் 40 சதவீதம் அதிகமாகி இருப்பதாகவும் கவர்னர் கூறியுள்ளார். தமிழகத்தில் அனைவரும் அண்ணன், தம்பியாக பழகுகிறார்கள். இந்தியாவில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே தூதுவராக கவர்னர் இருக்க வேண்டும். ஆனால் தனது பதவியில் இருந்து அவர் அரசியல் தான் செய்கிறார். அவர் அரசியல் செய்வதால் தான் பிரச்னை ஏற்படுகிறது. அவராகவே கூட்டங்கள் போடுகிறார். இந்தியாவில் எந்த கவர்னரும் இப்படி கிடையாது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
The post கவர்னர் பதவியில் இருந்து கொண்டு ஆர்.என்.ரவி அரசியல்தான் செய்கிறார்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.