சென்னை: புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலமே வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிறைக் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் உள்ள கைதிகளுடன் இண்டர்காமில் மட்டுமே பேச வேண்டும் எனக் கூறுவதன் மூலம், அந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறதோ என்ற அச்சம் கைதிகள் மத்தியில் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், இண்டர்காம் உரையாடல்கள் எதுவும் பதிவு செய்யப்படுவதில்லை. தற்போது கைதிகள் இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீண்டும் பழைய நடைமுறையே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், ஒரு நேரத்தில் ஒரே ஒரு கைதியை மட்டுமே அனுமதிப்பதாகவும், அதனை அதிகரிக்க வேண்டுமென்று கோரினார். அப்போது, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்க செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், மூத்த செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி, கைதிகளின் உரிமை விஷயத்தில் சிறைத்துறை கவனமுடன் செயல்பட வேண்டும். அவர்கள் விசாரணை கைதிகள்தான், தண்டிக்கப்படவில்லை.
அவர்களுக்கு நிவாரணம் வழக்கறிஞர்கள் மூலம்தான். எனவே, புதிய நடைமுறைகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ஒரே நேரத்தில் ஐந்து கைதிகளை சந்திக்க அனுமதி அளிக்கப்படும். கைதிகளை சந்திக்க வரும் பெண் வழக்கறிஞர்களுக்கு கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது செய்யப்பட்டுள்ள கழிப்பிட வசதியை முறையாக பராமரிக்க வேண்டும். வட மாநிலங்களை விட தமிழகத்தில் சிறை வசதிகள் சிறப்பாக உள்ளது. வழக்கறிஞர்களும் சிறை அதிகாரிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post புழல் சிறையில் விசாரணை கைதிகள் வழக்கறிஞரிடம் இன்டர்காம் மூலம் பேசும் நடைமுறை வாபஸ்: சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல் appeared first on Dinakaran.