மதுரை: டூவீலர்களிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்தக் கோரிய வழக்கில், அப்படி உத்தரவு பிறப்பித்தால் யாரும் பின்பற்றப்போவதில்லை என்று ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘அதிகவேகத்தில் வாகனங்களை இயக்குவது, போதையில் வாகனம் இயக்குவது உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது.
எனவே, அனைத்து டூவீலர்களிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துமாறும், அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்களை தண்டிக்க வேகத்தை துல்லியமாக கணிக்கும் கருவிகளை பயன்படுத்துமாறும், சாலை விதிகளை மீறுபவர்களுக்கு சட்டப்படி கடும் தண்டனை வழங்குமாறும் உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், ‘தற்போதைய சூழலில் மனுதாரர் கோரிக்கை சாத்தியமானதாக தெரியவில்லை.
இது போன்ற விவகாரங்களில் பிறப்பிக்கும் உத்தரவுகளை யாரும் பின்பற்றப் போவதுமில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு சோதனைச்சாவடி அமைக்க வேண்டும். இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று. இது போன்ற பொதுநல வழக்குகளை தாக்கல் செய்வதை தவிர்த்துக் கொள்ளலாம்’ என்றனர். பின்னர் மனுவிற்கு ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post டூவீலரில் வேகக்கட்டுப்பாட்டு கருவி யாரும் பின்பற்றப்போவதில்லை: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.