×

தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் சரக்குகளை கையாள ஓசூர்-பரந்தூரில் கார்கோ கிராமம்: பன்முக லாஜிஸ்டிக்ஸ் பூங்காவும் அமைக்க திட்டம்

தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2023க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, பல உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சென்னை பரந்தூர் விமான நிலையத்தில் புதிதாக ஒரு சேவையைக் கொண்டு வரத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை மையங்களான ஓசூர் மற்றும் சென்னை பரந்தூர் ஆகிய இரு நகரங்களில், தமிழக அரசு சார்பில் புதிய விமான நிலையங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேடி வரும் வேளையிலும், சென்னை பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்க பலதரப்பட்ட அனுமதிகள் பெற்று தயாராக இருக்கும் வேளையில், இந்த இரு விமான நிலையங்களிலும் டிட்கோ (TIDCO) முக்கியமான திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இந்த அமைப்பின் தலைமையில் தான், இந்த இரு விமான நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது ஓசூர் மற்றும் சென்னை தொழிற்துறை பகுதியில் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இரண்டிலும் சரக்கு கிராமங்களை (கார்கோ கிராமம்) நிறுவ திட்டமிடப்பட்டு வருகிறது. சரக்கு கிராமம் என்பது தேசிய மற்றும் சர்வதேச சரக்கு விமான போக்குவரத்துக்கான பொருட்களின் போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகிப்பதற்காக உருவாக்கப்படும் ஒரு சிறப்பு பகுதியாகும்.

சரக்கு கிராமத்தில் கிடங்கு, பிரேக்-பல்க் சென்டர்கள், சேமிப்பு பகுதிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற வசதிகள் மொத்தமாக சரக்கு போக்குவரத்துக்கான கட்டமைப்புகள் இருக்கும். டிட்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் நந்தூரி, பரந்தூர் விமான நிலையத்திற்கான இந்த புதிய திட்டத்தை சமீபத்தில் அறிவித்தார். இது ஒரு மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டது. இந்த சரக்கு கிராமத்தில், சரக்கு போக்குவரத்திற்குத் தேவையான மொத்த உட்கட்டமைப்பும் இருக்கும்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தின், தற்போதைய சரக்கு உள்கட்டமைப்பில் உள்ள பிரச்னைகளையும், விரிவாக்கம் செய்ய முடியாத நிலையைக் கருத்தில் கொண்டு, புதிதாக கட்டப்படும் இரு விமான நிலையத்திலும் இந்த சரக்கு கிராம கட்டமைப்பை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக பரந்தூர் சரக்கு கிராமம் கட்டமைப்பு, திருவள்ளூர் மாவட்டத்தில் பன்முக லாஜிஸ்டிக்ஸ் பூங்காவுடன் இணைக்கப்படும் என்று சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இதன் மூலம் அதிக அளவிலான சரக்குகளை விமான போக்குவரத்தில் கையாள முடியும் என்பது முக்கியமான விஷயம். இந்த கட்டமைப்பு ஏற்றுமதிக்கு மட்டுமல்லாமல், இறக்குமதிக்கும் அதிக அளவில் பயன்படும். அதே போல், ஓசூர் விமான நிலையமும், உற்பத்தி, எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் செமிகண்டக்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை மேற்கொள்ளும் இடமாக இருக்கும் என்ற காரணத்தால் இங்கும் சரக்கு கிராமம் அமைக்கப்படுவதன் மூலம் வேகமாக சரக்குகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கு அனுப்ப முடியும்.

டிட்கோ தற்போது இரண்டு விமான நிலையங்களுக்கும் மாஸ்டர் பிளான் உருவாக்கியுள்ளது. இவ்விரு சந்தைகளின் எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், வலுவான சரக்கு உள்கட்டமைப்பை உருவாக்க கவனம் செலுத்தி வருகிறது. ஒருபக்கம் விமான பயணிகள் சேவைகள் மேம்படுத்தப்பட்டாலும், சரக்கு போக்குவரத்து என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

* ரயில் தடங்களும் ஆய்வு
தமிழ்நாடு அரசு, இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து உயர் திறன் கொண்ட ரயில் மற்றும் சரக்கு வழித்தடங்களை உருவாக்கும் வழித்தடங்களை ஆராய்ந்து வருகிறது. மதுரை, சென்னை, ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல வழித்தடங்களை ஆய்வு செய்து வருகிறது.

* 3 வழி சரக்கு போக்குவரத்துக்கு முக்கியத்துவம்
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான துறைமுகத்தில், சரக்கு கையாளும் அளவும், முறையும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொருட்களைத் தயாரிக்க வெளிநாட்டில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் துவங்கி, தமிழ்நாட்டில் தயாரிக்கும் பொருட்களை வெளிநாடுகளுக்கும், நாட்டின் பிற நகரங்களுக்கும் வேகமாக சப்ளை செய்வதன் மூலம் அதிகப்படியான உற்பத்தி திறனை எட்ட முடியும். இதனை அடையவே தமிழ்நாடு அரசு விமானம், ரயில், கப்பல் என 3 வழிகளிலும் சரக்கு போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதில் மேம்பட்ட சேவைகளை அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

* ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த, தமிழ்நாடு சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் கூறியதாவது: உற்பத்தி, வேலைவாய்ப்பு மட்டும் இல்லாமல், இங்கு தொழில் நடத்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், சாலை, குடிநீர், தொழிலாளர்களுக்கான குடியிருப்பு, போக்குவரத்து வசதி போன்றவை இருந்தால்தான் தொழில் மேம்படும். உற்பத்தி செலவை குறைக்கவும், பெரிய வளர்ச்சிக்கும் போக்குவரத்து மிகவும் முக்கியம்.

ஓசூர் பகுதியை பொருத்தவரை ஆண்டிற்கு ரூ.3 லட்சம் கோடிக்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால், சாலை போக்குவரத்து தவிர, ரயில் மற்றும் விமான போக்குவரத்து மிகவும் அவசியம். தற்போது ஓசூரில் கார்கோ கிராமம் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், இம்மாவட்டத்தில் அதிக அளவில் மாம்பழ கூழ், ஆட்டோ மொபைல் தளவாட பொருட்கள், மலர்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் உற்பத்தி செய்யும் பொருட்களை பாதுகாக்க, கச்சா பொருட்கள் உற்பத்தி செலவை குறைக்கவும் உதவும். இதனால் தொழிற்சாலைகள் மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவார்கள். எனவே, கார்கோ கிராம அறிவிப்பை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் சரக்குகளை கையாள ஓசூர்-பரந்தூரில் கார்கோ கிராமம்: பன்முக லாஜிஸ்டிக்ஸ் பூங்காவும் அமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Cargo ,Village ,Hosur-Barandur ,Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,Krishnagiri… ,Cargo village ,Dinakaran ,
× RELATED ஜோடியாக சுற்றிய பெண் ஏட்டு, காவலர்...