×

ஐயப்பன் அறிவோம் 44: குருகுல கல்வி

சொரிமுத்து அய்யனார் கோயிலானது, தமிழ்நாடு, கேரளா எல்லையான மலைப்பகுதியில் அமைந்து இருந்ததால் மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் பாண்டியர்களும், சேரர்களும் வணிகரீதியில் பண்டமாற்றம் செய்துக் கொண்ட சந்தைப் பகுதியாக மாறியது. அதன்படி சுமை தூக்கும் காளை ஒன்றின் காலடி பட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. இதனை கண்ட வணிகர்கள் அச்சமடைந்தனர்.
அப்போது அங்கு வயதான முனிவர் தோற்றத்தில் வந்த அகத்தியர், இந்த இடத்தில் சிவலிங்கம், சாஸ்தா மற்றும் பரிவாரங்களின் சிலைகள் புதையுண்டு கிடக்கிறது. அதனை சீரமைக்குமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து வணிகர்கள், கிராம மக்கள், பாண்டிய மன்னனிடம் நடந்ததை கூறுகின்றனர். சிவ பக்தரான பாண்டிய மன்னர் ஒருவரின் உத்தரவின்படி, புதையுண்ட பகுதி தோண்டப்பட்டு, சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டு, சொரிமுத்து அய்யனார் மற்றும் மகாலிங்கம், காவல் தெய்வங்கள் உள்ளிட்ட பரிவாரங்களுடன் கோயில் அமைத்ததாக தலப்புராணம் கூறுகிறது. மணிகண்டன் அவதார நோக்கத்திற்காக, பாண்டிய தலைநகர் மதுரையை சேர்ந்த ஏழை சிவனடியாரான குரு (குருகுல ஆசிரியர்) ஒருவர் கனவில் சிவன் தோன்றி, பந்தள அரண்மனைக்கு சென்று ராஜசேகர பாண்டியனை சந்திக்குமாறு கூறுகிறார்.

மதுரையை சேர்ந்த அந்த குரு, பந்தள அரண்மனை வந்து மன்னரை சந்தித்தார். அப்போது மன்னர், மணிகண்டனுக்கு குருகுல கல்வி கற்றுத்தர சிறந்த ஒருவரை தேடிக் கொண்டிருந்தார். சிவனடியாரான குருவை கண்டதும், தனது மகன் மணிகண்டனுக்கு கல்வி, வீர விளையாட்டு உள்ளிட்ட குருகுல கல்வி கற்றுக் கொடுக்க கேட்டுக் கொண்டார். இது சிவனின் திருவிளையாடல் என நினைத்துக் கொண்ட அந்த சிவனடியாரும், குருகுல கல்வி கற்றுக் கொடுக்க சம்மதித்து, மணிகண்டனுக்கு குருவாகினார்.

மணிகண்டனுக்கு கற்றுக் கொடுப்பதற்காக தனது வாய் பேச முடியாத மகனுடன் பந்தள நாட்டிலியே தங்கினார் குரு. அப்போது குருகுலத்தில் கல்வி கற்றுக் கொடுத்தாலும், வீரவிளையாட்டுகளான குதிரை ஏற்றம், வாள்வீச்சு, களரி, வில்வித்தை, மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டுகளை சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியிலேயே கற்றுக் கொடுத்தார். அந்த வகையில் மணிகண்டன் விளையாடிய சிறப்புக்குரிய சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதி மணிகண்டனால் மீண்டும் பெருமையடைந்தது. சாமியே சரணம் ஐயப்பா நாளையும் தரிசிப்போம்.

The post ஐயப்பன் அறிவோம் 44: குருகுல கல்வி appeared first on Dinakaran.

Tags : Ayyappan Tanavom 44 ,Kurukula Education ,Sorimuthu Ayyanar Temple ,Tamil Nadu ,Kerala ,Pandyas ,Sareans ,Ayyappan Tanavom ,
× RELATED ஐயப்பன் அறிவோம் 45: அச்சன்கோயில்