×

காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி போன்ற ஆயுத குழுக்களுக்கு ஆதரவு கொடுத்து சிக்கிக்கொண்ட ஈரான்: இஸ்ரேலிய ராணுவம் தெற்கு லெபனானுக்குள் நுழைந்தது


தெஹ்ரான்: காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதிக்கு ஆதரவு அளித்து வந்த ஈரானுக்கு நெருக்கடிகள் முற்றி வருகிறது. மேலும் இஸ்ரேலிய ராணுவம் தெற்கு லெபனானுக்குள் நுழைந்தது. இதற்கிடையே ரஷ்யா பிரதமர் ஈரான் வருகையால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 2023 அக். 7ம் தேதி சம்பவத்திற்கு பின் இஸ்ரேல் – காசா இடையிலான போர் உச்சத்தை எட்டிய நிலையில், கடந்த 2 வாரமாக இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர், வாக்கி டாக்கி போன்ற கருவிகளை வெடிக்க செய்து நடத்திய தாக்குதலை தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் தீவிரமடைந்தது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 1,300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பெய்ரூட்டில் பதுங்கியிருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல் மூலம் கொன்றது. அவருடன் சேர்ந்து ஹிஸ்புல்லாவின் தளபதிகளையும், வீரர்களையும் கொன்றது.

இதற்கிடையில், தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் படைகள் வரையறுக்கப்பட்ட தரைவழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. எனவே, லெபனான், ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுவான ஹிஸ்புல்லாவுக்கு எதிராக புதிய போர்முனை இஸ்ரேல் திறந்துள்ளது என்கின்றனர். தரைவழி தாக்குதல் தொடங்கிய சில மணிநேரங்களில், தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளுக்கு எதிராக துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இலக்குகள் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் அமைந்துள்ளன; இதனால் வடக்கு இஸ்ரேலில் வசிக்கும் இஸ்ரேல் மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே தனது குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்புவதற்கும் தேவையான உதவிகளை இஸ்ரேல் படைகள் மேற்கொண்டுள்ளன.

இஸ்ரேல் விமானப்படை மற்றும் ஐடிஎப் பீரங்கிகள் துல்லியமான தாக்குதலுக்கு தயாராகி வருகின்றன. ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்குதல் தொடங்கியது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், ‘இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளின் மீது இஸ்ரேல் படைகளின் தரைவழிப்படை முன்னேறி வருகிறது. அதேநேரம் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையேயான போர்நிறுத்தத்தை அமெரிக்கா ஆதரித்து வருகிறது. ராணுவம் மூலம் கொடுக்கப்படும் அழுத்தம், சில சமயங்களில் ராஜதந்திரத்திற்கு வழிவகுக்கும். மத்திய கிழக்கில் முழுமையான போர் தவிர்க்கப்பட வேண்டும் என்று அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசியுள்ளார்’ என்றார்.
இதற்கிடையில், துருக்கி அதிபர் எர்டோகன் அளித்த பேட்டியில், ‘இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபை தனது அதிகார பலத்தை பயன்படுத்த பரிந்துரைக்க வேண்டும். ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் தீயில் எரித்துள்ள இஸ்ரேலின் கொள்ளை குறித்து சர்வதேச சமூகம் இனியும் மவுனமாக இருக்க முடியாது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில், இவ்விசயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றார். மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலைமை மோசமடைந்து வரும் சூழ்நிலைக்கு மத்தியில், ரஷ்ய பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் சந்தித்தார்.

இஸ்ரேல் தனது தரைப்படைகளை லெபனானுக்கு அனுப்பிய நிலையில், ரஷ்ய பிரதமர் ஈரான் பிரதமரை சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்தது. மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்று ரஷ்யா தரப்பில் கூறப்பட்டது. ஈரானை தனது நட்பு பட்டியலில் ரஷ்யா வைத்துள்ளதால், லெபனான் விசயத்தில் ஈரானுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அந்த நேரத்தில் ரஷ்யா ஈரானுக்கு உதவி செய்யும். அவ்வாறு ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்யும் போது, அது அமெரிக்காவுக்கு எதிரானதாக அமையும். ஏனெனில் இஸ்ரேலுக்கு நேரடியாகவே அமெரிக்கா ராணுவம் உள்ளிட்ட பல வகைகளில் உதவியளித்து வருகிறது. காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி என்று தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் களத்தில் இறங்கியுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த விசயத்தில் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்ற அமைப்புகளுக்கு வெளிப்படையாகவே ஈரான் ஆதரவு அளித்து வருவதால், இஸ்ரேலின் அடுத்தகட்ட நகர்வு ஈரானை நோக்கிய நேரடி நடவடிக்கையாக அமையலாம் என்கின்றனர். அதே பட்டியலில் சிரியாவையும் இஸ்ரேலும், அமெரிக்காவும் வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

 

 

The post காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி போன்ற ஆயுத குழுக்களுக்கு ஆதரவு கொடுத்து சிக்கிக்கொண்ட ஈரான்: இஸ்ரேலிய ராணுவம் தெற்கு லெபனானுக்குள் நுழைந்தது appeared first on Dinakaran.

Tags : Iran ,Hamas ,Gaza ,Hizbullah ,Lebanon ,Houthi ,Yemen ,southern Lebanon ,Tehran ,Houthis ,Hezbollah ,Russia ,
× RELATED காசாவில் இஸ்ரேல் தாக்குதல் உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 18 பேர் பலி