×

மண் வளத்தை காக்க சணப்பு; மடக்கி உழுதல் அவசியம்

மன்னார்குடி, அக். 1: மண்வளத்தை காக்க சணப்பு மடக்கி உழவேண்டுமென வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மன்னார்குடி வேளாண் உதவி இயக்குனர் இளம்பூரணார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண்மையில் உணவு உற்பத்தியை பெருக்கவும், அதிகமகசூல் பெறுவதற்கும் ரசாயன உரங்கள், பூச்சி, நோய் மற்றும் களைக்கொல்லி மருந்துகள் தொடர்ந்து தேவைக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இதனால் வேளாண்மைக்கு அடிப்படையான மண்ணிலுள்ள பொளதிக, ரசாயன மற்றும் உயிரியல் பண்புகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து, கரிமப்பொருட்களின் அளவு குறைந்துவிடுவதால் மண்ணின் வளமும் குறைகிறது. மேலும் இயற்கை உரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு மற்றும் அதிகவிலை காரணமாக இயற்கை உரங்களின் பயன்பாடு குறைகிறது.

மண்வளத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பசுந்தாள் பயிர்களான சணப்பு மற்றும் தக்கைபூண்டு ஆகியற்றின் விதைகளை விதைத்து அதனை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் வாயிலாக மண்ணில் அங்ககச்சத்து அதிகரிக்கும். மண்ணின் வளம் பெருகும். பசுந்தாள் பயிர்களானது வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனை தங்களது வேர் முடிச்சுகளில் நிலைநிறுத்தி, மடக்கி உழுவும்போது தழைச்சத்தை மண்ணிற்கு அளிக்கின்றன. இவற்றை விதைத்த 45 முதல் 60 நாட்களுக்குள் மடக்கி உழவேண்டும்.

சணப்பானது 1 முதல் 2 மீட்டர் உயரம் வளரக் கூடிய பசுந்தாள் மற்றும் நார்ப்பயிராகும். இது வண்டல் மண் நிலத்திற்கு மிகவும் ஏற்றது. ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 டன் பசுந்தாள் உரச்சத்தை அளிக்க வல்லது. உலர் நிலையில் 2.30 சத தழைச்சத்து, 0.50 சத மணிச்சத்து மற்றும் 1.80 சத சாம்பல் சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது, இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் இளம்பூரணார் தெரிவித்துள்ளார்.

The post மண் வளத்தை காக்க சணப்பு; மடக்கி உழுதல் அவசியம் appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Assistant Director of Agriculture ,Assistant Director ,Yumpuranar ,Dinakaran ,
× RELATED பூச்சிக்கொல்லி மருந்து விற்க உரிமம்...