×
Saravana Stores

வேலூர் அடுத்த அகரம்சேரியில் 85 ஏக்கரில் அமைகிறது: தமிழ்நாட்டின் மிகப்பெரிய தோட்டக்கலை பூங்கா

* மூலிகை பொருட்கள் குறைந்த விலையில் வாங்கலாம்
* விவசாயிகளுக்கு தரமான நாற்றுகள், செடிகள் விற்பனை

வேலூர் மாவட்டம் கடந்த 2019 நவம்பர் 28ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் என்று 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. பின்னர், இம்மாவட்டத்தில் இருந்த நவ்லாக் அரசு தோட்டக்கலைப் பண்ணை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. எனவே, வேலூர் மாவட்டத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணையுடன் கூடிய பொழுதுபோக்குப் பூங்கா ஒன்றினை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி வேலூர் மாவட்டம், அகரம்சேரி கிராமத்தில் சுமார் 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினருக்கு நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குடியாத்தம் தாலுகாவில் வரும் அகரம்சேரி கிராமத்தில் தற்பொழுது அமைய உள்ள இந்த பூங்கா பரப்பளவில் பெரியதாகவும், அதிகமான சிறப்பினங்களை உள்ளடக்கிய உலக தரமான பூங்காவாகவும் விளங்கும். இப்பூங்கா அமைவதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் தற்போது உள்ள அரசு தாவரவியல் பூங்காக்களில் உதகை பூங்காவின் பரப்பளவு 55 ஏக்கர், ஊட்டி ரோஸ் கார்டன் 10 ஏக்கர், குன்னூர் சிம்ஸ் பூங்காவின் பரப்பளவு 30 ஏக்கர், ஏற்காட்டில் உள்ள பூங்காவின் பரப்பளவு 20.50 ஏக்கர் மட்டுமே. அதன்படி அகரம்சேரியில் 85 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள இப்பூங்காவுக்கு மாநிலத்திலேயே மிகப்பெரிய பூங்கா என்ற பெருமை கிடைக்கும்.

இந்த பூங்காவில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய பாரம்பரிய மருத்துவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அரிய வகை மரங்கள், செடிகள், மூலிகைப் பயிர்கள் அடங்கிய செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்கள், வேளாண் பெருமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். மேலும் இந்த பொழுபோக்குப் பூங்காவில் தோட்டக்கலையில் உள்ள அனைத்து தாவரங்களும் அடங்கிய பல பயிர்ப் பூங்கா, நாட்டுத் தாவரங்கள் அடங்கிய பூங்கா, பல்லடுக்குப் பூங்கா, புல்தரை, நீண்ட நெடிய நடைபாதை, நட்சத்திரப் பூங்கா, போகன் வில்லா பூங்கா, செம்பருத்திப் பூங்கா, சிறிய நிழற்குடில்கள், அலங்கார வளைவுகள், வெளிக் கூட்டரங்கங்கள், உள் கூட்டரங்கங்கள், தாமரைத் தடாகம் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்தப் பூங்கா திகழும்.

மேலும் செயற்கை நீரூற்றுகள், குளங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், குழந்தைகளுக்கென சிறிய புகை வண்டி, மின்கலனால் இயக்கப்படும் ஊர்திகள் முதலிய அம்சங்களுடன் அமைக்கப்படுகிறது. அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மா, கொய்யா, சப்போட்டா, பலா, நாவல், எலுமிச்சை, மாதுளை, சீதா, கொடுக்காய்புளி போன்ற பழப் பயிர்களும், தென்னை நாற்றுகளும், காய்கறி நாற்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மானியத்திலும் குறைந்த விலையிலும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் பூங்காவில் மூலிகை செடிகளின் குணங்களை அறிந்து வாங்கவும், பொழுது போக்கவும், விவசாயிகள் தரமான நாற்றுகள் வாங்கவும் ஆர்வமுடன் இருக்கின்றனர். இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த பூங்காவில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பூங்காவில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.40 லட்சம் கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், மீதமுள்ள பணிகள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’ என்றனர்.

The post வேலூர் அடுத்த அகரம்சேரியில் 85 ஏக்கரில் அமைகிறது: தமிழ்நாட்டின் மிகப்பெரிய தோட்டக்கலை பூங்கா appeared first on Dinakaran.

Tags : Vellore ,Agaramsery ,Tamil Nadu ,Vellore district ,Ranipet ,Tirupattur ,Navlak ,
× RELATED வேலூர்-காட்பாடி சாலையில் புதிய...