×

சேமிப்பு நீர் குறைவு, வறட்சி காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி; 90 ஆண்டுகளில் முதன்முறையாக மேட்டூர் அணையை தூர்வார நடவடிக்கை

* சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதி பெற டெண்டர் வெளியீடு

மேட்டூர் அணை கர்நாடக மாநிலம் குடகு மலையில் உள்ள மெக்காரா என்ற இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றம் தமிழகத்தின் வழியாக பாய்ந்தோடி வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் வழியாக 800 கிலோ மீட்டர் தூரம் கடந்து காவிரி ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் முடிய பெய்யும் பருவமழையிலான காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது.

இதனால் விவசாய பயிர்கள் நாசம் அடைவதை தடுப்பதற்காக ஆங்கிலேயர்களால் 1925ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு 1934ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை கட்டப்பட்ட போது அப்போதைய செலவுத்தொகை ரூ.4.80 கோடி ஆகும். இதனை அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டான்லி அணையை திறந்து வைத்தார்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் உள்பட 12 டெல்டா மாவட்டங்களின் பாசன தேவை மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் ேமட்டூர் அணை உயிர் நாடியாக விளங்குகிறது. மேட்டூர் அணையின் நீளம் 5300 அடி, மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பரப்பு 59.25 சதுர மைல் ஆகும். மேட்டூர் அணையில் 93.47 டி.எம்.சி தண்ணீரை சேமிக்க முடியும். அணையின் உச்ச நீர்மட்டம் 120 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடுவதற்காக அணையின் நீர்மட்ட அளவை பொறுத்து மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு, மின் நிலை மதகு என 3 நிலை மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. அணையின் இடது கரைப்பகுதியில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் நிலையில் உபரி நீர் திறந்து விடுவதற்காக 16 கண் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மதகும் 20 அடி உயரமும், 60 அடி நீளமும் கொண்டதாகும். இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் அதற்குரிய தளவாடங்கள் அனைத்தும் இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டன.

ஆண்டு தோறும் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த பாசனத்தின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கடலூர், மயிலாடுதுறை உள்பட 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதேபோல் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுப்பதற்காக மேட்டூர் அணையின் உபரி நீர் திட்டம் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட தாலுகாவை சேர்ந்த சுமார் 100 ஏரிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று நிரப்புவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது. கடந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்ட நேரங்களில் இந்த உபரிநீர் திட்டத்தின் மூலம் பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்து செல்லப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் காவிரியில் ஏற்படும் பெரு வெள்ளம் காரணமாக, காடு, மலைகளை கடந்து தண்ணீர் வரும்போது மண், மணல் மற்றும் பல்வேறு பொருட்களை இழுத்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப்பரப்பில் வண்டல் மண் அதிக அளவில் தேங்கி உள்ளது.

இதனால் மேட்டூர் அணையில் சேமிக்கப்படும் நீரின் அளவு குறைந்து போனது. இதன் காரணமாக வறட்சி காலங்களில், பெரும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேட்டூர் அணையில் தூர்வாரி அதில் நீரை தேக்க 2014ம் ஆண்டு வாப்கோர்ஸ் நிறுவனம் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நீர்த்தேக்க பரப்பு முழுவதும் படகில் சென்று ஒவ்வோர் இடத்திலும் மண், மணல், பாறைகள், ஜல்லிகள் அளவு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2018ம் ஆண்டு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஆய்வில் மொத்த கொள்ளளவில் 20 சதவீதம் வண்டல் படிந்திருப்பது தெரியவந்தது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 60 அடிக்கு கீழே வரும்போதுதான் வண்டல் படிந்திருப்பதும் தெரியவந்தது. அணையின் நீர் தேக்கப்பகுதி 59.25 சதுரமைல் பரப்பு இருந்தால், இதில் 30 சதுர மைல் பரப்பிற்கு தூர் வார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியில் 60 அடிக்கு மேல் உள்ள பரப்பில் ஆக்கிரமித்து விவசாயம் செய்வோர், வேறு பகுதிகளில் இருந்து மண்ணை அள்ளி வந்து அப்பகுதியில் கொட்டி சமன் படுத்துவதாலும் அப்பகுதியில் மண் படிகிறது.

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு மே 27ம் தேதி தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. பருவமழை தொடங்கியதால் பின்னர் அப்பணி தடைபட்டது. 2023ம் ஆண்டு முன்று நாட்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. பின்னர் பல்வேறு காரணங்களால் அப்பணியும் தடைபட்டது. விவசாயத்திற்கும், செங்கல் சூளைகளுக்கும், மண்பாண்டம் செய்யவும் வண்டல் மண் பயன்படும். வண்டல் மண் அள்ள வேண்டுமானால், பிரதான சாலையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் வரை பிரத்யேக சாலை அமைக்க வேண்டும்.

பெரிய டிப்பர் லாரிகள் மூலம் வண்டல் மண் அள்ளப்பட்டால் மட்டுமே, விரைந்து பணிகளை முடிக்க முடியும். அதனால் தற்போதுள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும். இல்லையானால் சாலைகள் சேதம் அடைந்து போக்குவரத்தும் பாதிக்கும். அணையை தூர் வாரினாலும் பருவமழை காலங்களில் மீண்டும் வண்டல் படியும். அதற்காக தொடர்ந்து வருடந்தோறும், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 60 அடிக்கு கீழே சரிந்தால், வண்டல் மண் அப்புறப்படுத்த வேண்டும்.

ஒரு டி.எம்.சி தண்ணீரை தேக்க சுமார் 1 கோடி டிராக்டர் வண்டல் மண் அள்ளப்பட வேண்டும். நீர்தேக்கப்பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதை முற்றிலும் தடுக்க வேண்டும். அப்போதுதான் நீர்தேக்கத்தில் வண்டல் படிவதை ஒரு பகுதியை தடுப்பதோடு விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் ரசாயன உரங்களால், காவிரி நீர் மாசடைவதையும் கட்டுப்படுத்த முடியும். அணை கட்டி 90 ஆண்டுகளில் முதன்முறையாக இப்போது அணையை தூர்வார அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்போது நீர்வளத்துறை அறிவித்துள்ள டெண்டர், மேட்டூர் அணை தூர் வாருவதற்கு வனத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தடையில்லா சான்று பெறுவதற்கான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்காக ஆலோசகர்களை நியமிக்கவே. இது தூர்வாரும் பணியின் பூர்வாங்க பணிகளில் ஒன்று என்று, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் காவிரியில் ஏற்படும் பெரு வெள்ளம் காரணமாக, காடு, மலைகளை கடந்து தண்ணீர் வரும்போது மண், மணல் மற்றும் பல்வேறு பொருட்களை இழுத்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப்பரப்பில் வண்டல் மண் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதனால் மேட்டூர் அணையில் சேமிக்கப்படும் நீரின் அளவு குறைந்து போனது. இதன் காரணமாக வறட்சி காலங்களில், பெரும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

* மேட்டூர் அணை பாசனம் மூலம் 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

* ஒரு டி.எம்.சி தண்ணீரை தேக்க சுமார் 1 கோடி டிராக்டர் வண்டல் மண் அள்ளப்பட வேண்டும்.

* அணையை தூர் வாரினாலும் பருவமழை காலங்களில் மீண்டும் வண்டல் படியும். அதற்காக வருடந்தோறும், அணையின் நீர் மட்டம் 60 அடிக்கு கீழே சரிந்தால், வண்டல் மண் அப்புறப்படுத்த வேண்டும்.

* ரூ.3000 கோடியில் தூர்வாரும் பணி: கூடுதலாக 30 டிஎம்சி தண்ணீர் சேமிக்கலாம்
நீர்வளத்துறை அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், ‘கடந்தாண்டு நீர் மற்றும் மின்சாரம் ஆலோசனை சேவை மையமும், நீர்வளத்துறையும் இணைந்து, மேட்டூர், அமராவதி, பேச்சுப்பாறை, வைகை அணைகளை தூர்வாருவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தாயர் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது நிதி ஒதுக்கீடுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பல்வேறு அணைகளை ஆய்வு செய்தபோது நீர்வளத்துறைக்கு மேட்டூர் அணையைத்தான் முதலில் தூர்வார வேண்டும் என்ற முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக அதன் நீர் கொள்ளளவு வெகுவாகக் குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். அதன்படி தமிழக அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு பெற்றவுடன் தூர்வாரும் பணி தொடங்கப்படும். மேட்டூர் அணையை தூர்வார வேண்டுமென்றால் ரூ.3,000 கோடி தேவைப்படும். இந்த பணி 2030ம் ஆண்டு நிறைவடையும்.

அணை தூர்வாரும் பணி நிறைவு பெற்றதும் அடுத்த ஆறு ஆண்டுகளில் மேட்டூர் அணையில் கூடுதலாக 30 டிஎம்சி தண்ணீர் தேக்க முடிவும். மேட்டூர் அணையில் முதற்கட்டமாக அகற்ற உத்தேசிப்பட்டுள்ள 14,14,194 யூனிட் வண்டல் படிவங்கள், களிமண், சாதாரான மணல் மற்றும் சரளை அகற்றப்பட்டு மேட்டூர் அணையின் கொள்ளளவில் 141.50 மி கன அடி அளவுக்கு மீட்டெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சேமிப்பு நீர் குறைவு, வறட்சி காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி; 90 ஆண்டுகளில் முதன்முறையாக மேட்டூர் அணையை தூர்வார நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஐயப்பன் அறிவோம் 49: முக்குழியில் தங்கினார்