×
Saravana Stores

அரசுப்பள்ளி மாணவர்களின் கலங்கரை விளக்கம் நான் முதல்வன் திட்டம் 2.20 லட்சம் பேருக்கு இதுவரை வேலைவாய்ப்பு: 28.3 லட்சம் மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி

* 6 லட்சம் மாணவர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு, தமிழ்நாடு அரசு தகவல்

தமிழ்நாடு அரசினால் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், மாணவர்களுக்கு வெற்றிகரமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து கலங்கரைவிளக்கமாகத் திகழ்கிறது. இத்திட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம், மாணவர்களுக்கு அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தந்ததுடன், தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டிற்காக பயிற்சிகள் அளித்து சாதனை புரிந்துள்ளன. இந்த திட்டத்தின்மூலம் இதுவரை 28.3 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள் 2.2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. 2027ம் ஆண்டுக்குள் 6 லட்சம் பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி ஸ்டார்ட்அப்களை உருவாக்கவும் பயிற்சி அளிக்கிறது. 50 மாணவர்கள் முன்னிறுத்திய ஸ்டார்ட் அப் திட்டங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக மாறி உள்ளன. மாணவர்கள் பலருக்கு புதிய வாய்ப்புகளை இந்த திட்டம் வழங்கி வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை விட, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நான் முதல்வர் திட்டம் மூலம் பெரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நான் முதல்வன் திட்டம் மூலம், பல்வேறு படிப்புகள் பற்றிய சமீபத்திய தகவல்கள், தொழில்துறைகளுக்கு தேவையான குறிப்பிட்ட திறன்கள் குறித்து பிரத்யேக தளத்தில் கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இதனால் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் பயிற்சி பெற உதவும். மேலும் தொழில்துறைகளில் தற்போதுள்ள பணி இடைவெளிகளை நிரப்ப திறன் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்க பல்வேறு திறன் பயிற்சிகளும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக தளத்தில் 2,000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், 300க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

நமது நாட்டின் 4 தூண்களில் ஊடகத்துறை முக்கியமான ஒன்று என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி கூறுவார். வளர்ந்து வரும் இந்த ஊடகத் துறையில், ஆர்வமுள்ள இளம் ஊடக ஆர்வலர்களை தயார்படுத்தும் வகையில், திறன் மேம்பாட்டு கழகம் மூலம் 2 சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 1 படிப்பு மட்டுமே அளிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஏஐ படிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை லயோலா கல்லூரியுடன் இணைந்து, பயன்பாட்டு இதழியல் (Applied Journalism) மற்றும் ஊடகத்திற்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence For Media) ஆகிய சான்றிதழ் படிப்புகள் 6 மாத காலத்திற்கு கற்பிக்கப்பட உள்ளது. இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. இளங்கலையில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த, 20 முதல் 25 வயதிற்குள் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 6 மாத காலங்கள் பயிற்சி முடிந்த பின்னர் முன்னணி ஊடக நிறுவனங்களில் இண்டர்ன்ஷிப் வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.

வருகிற 17ம் தேதியுடன் இதற்கான விண்ணப்ப பதிவு நிறைவடைகிறது. விரும்பம் உள்ளவர்கள் https://finance.tnskill.tn.gov.in/skillwallet/course/1680 மற்றும் https://finance.tnskill.tn.gov.in/skillwallet/course/1679 என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஊடகம் மற்றும் பத்திரிக்கையில், நிபுணர், எடிட்டர், எழுத்தாளர், செய்தி வாசிப்பவர், டிசைனர், சமூக ஊடக நிர்வாகி, வீடியோ எடிட்டர், ஆடியோ எடிட்டர் உள்ளிட்ட பணி வாய்ப்புகள் உள்ளன. பயிற்சியை சிற்ப்பாக முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.

கடந்த ஆண்டு இந்த படிப்பிற்கு 1,801 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 571 பேர் மட்டுமே தகுதியுடைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பயிற்சியை முழுமையாக முடித்த 100 நபர்களில் 70க்கும் அதிமானவர்கள் ஊடகத்துறையில் பணியில் சேர்ந்துள்ளனர்.

* 4 வழிகளில் பயனளிக்கும் திட்டம்
2022-23 மற்றும் 2023-24 ஆகிய கல்வியாண்டுகளில் 28.3 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். நடப்பாண்டு 11 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதல் ஆண்டில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் பாடங்களில் கவனம் செலுத்தப்பட்டது. 2ம் ஆண்டில் ஐடிஐ, பாலிடெக்னிக் ஆகிய பாடங்களை சேர்த்துக் கொள்ளப்பட்டது. 3ம் ஆண்டில் பாராமெடிக்கல் படிப்புகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டமானது மாணவர்களுக்கு 4 வழிகளில் பயனளிக்கிறது. வேலைவாய்ப்பு, உயர்கல்வி, போட்டி தேர்வுகள், தொழில்முனைவோர் ஆகியவை ஆகும்.

ஐடி, சுகாதாரம், ஆட்டோமோட்டிவ், உற்பத்தி, எலக்ட்ரானிக் வாகனம், சேவை, சுற்றுலா என அனைத்து துறைகளிலும் பாடங்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் டிசிஎஸ், விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் ஆட்டோமோட்டிவ், உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். மேலும் பெங்களூருவில் உள்ள ஜிசிசி, ஹைதராபாத், புனே ஆகியவற்றில் உள்ள நிறுவனங்களிலும் சேர்ந்துள்ளனர். கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் 2.2 லட்சம் பேர் வேலை பெற்றுள்ளனர். அடுத்து 3 ஆண்டுகளில் மொத்தமாக 6 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள்.

* திறமையான மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி
நடப்பாண்டில் ஓலா, தனது எலக்ட்ரிக் வாகன ஆலைகளுக்கு பாலிடெக்னிக் மாணவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. அது போல் அக்சன்சர், அமேசான், அசோக் லேண்ட், பாஷ், கேட்டர்பில்லர் இந்தியா, ஹச்.சி.எல், உள்ளிட்ட நிறுவனங்களும் பாலிடெக்னிக் மாணவர்களை வேலைக்கு சேர்த்துள்ளன. இவர்களுக்கு ஆண்டு வருமானமாக ரூ 2 லட்சம் முதல் ரூ 8லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். தமிழக மாணவர்களுக்காக லண்டனின் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒரு வாரம் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரிட்டிஷ் கவுன்சிலுடன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொண்டது. இதற்காக ஏஐ, டேட்டா சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஜூன் 9ம் தேதி அவர்கள் லண்டன் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து இதுபோன்ற திறமையான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

The post அரசுப்பள்ளி மாணவர்களின் கலங்கரை விளக்கம் நான் முதல்வன் திட்டம் 2.20 லட்சம் பேருக்கு இதுவரை வேலைவாய்ப்பு: 28.3 லட்சம் மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil Nadu government ,Tamil ,Nadu ,Chief Minister ,
× RELATED பாம்பு கடி தொடர்பான சிகிச்சை...