- விருதுநகர்
- பாஜக அரசு
- தமிழ்நாடு அரசு
- இந்தியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தெலுங்கானா
- கர்நாடக
- மகாராஷ்டிரா
- குஜராத்
- மத்தியப் பிரதேசம்
- உத்திரப்பிரதேசம்
* 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் மெகா திட்டம், ரூ.300 கோடி தமிழக அரசு நிதியில் பணிகள் துவக்கம், தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படும்
இந்தியாவில் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பிஎம் மித்ரா திட்டத்தில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. முதல் கட்டமாக தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இ.குமாரலிங்கபுரத்தில் சிப்காட் நிலத்தில் ஜவுளி பூங்கா அமைய உள்ளது. 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் மெகா திட்டமான இப்பூங்காவுக்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய பாஜ அரசு இழுத்தடித்து வருகிறது. இதனால் மாநில அரசின் ரூ.300 கோடி நிதியில் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.
விருதுநகர் ஜவுளி பூங்காவிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மார்ச் 22ல் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் கையழுத்தானது. 1,052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இ.குமாரலிங்கபுரத்தை மையமாக வைத்து அச்சம்பட்டி, கோவில் புலிக்குத்தி கிராமங்கள் வரை இந்த மெகா ஜவுளி பூங்கா அமைகிறது. இதனுடன் ராஜபாளையம், தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் ஆகிய ஜவுளி முனையங்களும் இயற்கையாகவே இணைப்பு பெறும்.
அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் துணிகள் உற்பத்திக்கான சிறப்பு வசதிகள், வணிக மையம், பொது அடிப்படை வசதிகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு துணியை உருவாக்க அனைத்து வசதிகளுடன் கூடிய ஆலைகள் அமைக்கப்படும். தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில் கூடங்களும் பூங்காவில் அமைகிறது. ஒன்றிய, மாநில அரசின் நிதியில் இந்த பூங்கா உருவாக வேண்டும்.
ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் ஜவுளி பூங்காவிற்காக, தற்போது மாநில அரசின் நிதியில் இருந்து, விருதுநகர் நான்குவழிச்சாலையில் இருந்து குமாரலிங்கபுரத்திற்கு செல்லும் சாலை ரூ.26.50 கோடியில் அகலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இந்த சாலையின் இடையில் 5 இடங்களில் பாலங்கள் அமைகின்றன. ஒரு ஏக்கரில் சிப்காட் அலுவலகம் ரூ.1.71 கோடியில் கட்டும் பணிகள் வேகம் பெற்றுள்ளன. ஊழியர்களுக்கான குடியிருப்புகளும் கட்டப்பட உள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய ஜவுளி பூங்காவாக இது அமைகிறது.
இங்கு முதல்கட்டமாக அமையும் தொழிற்சாலைகள் மூலம் 70 ஆயிரம் பேருக்கும், அடுத்த கட்டமாக தொழிற்சாலைகள் அதிகரித்ததும் 2 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதன்மூலம் தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி பெறும். தமிழகம் ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலமாக வளரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஜவுளி பூங்காவில் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதிக்கான போக்குவரத்து வசதிகள் அனுகூலமாக உள்ளன.
ஜவுளி பூங்காவில் இருந்து மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை 400 மீட்டரிலும், சாத்தூர் ரயில் நிலையம் 8 கி.மீட்டரிலும், அனுப்பன்குளம் துணைமின்நிலையம் 4 கி.மீட்டரிலும், மதுரை விமான நிலையம் 75 கி.மீட்டரிலும், தூத்துக்குடி விமான நிலையம் 112 கி.மீ, தூத்துக்குடி துறைமுகம் 106 கி.மீட்டரிலும், இருக்கன்குடி அணைக்கட்டு 14 கி.மீட்டர், மதுரை 70 கி.மீ, விருதுநகர் 18 கி.மீ, திருநெல்வேலி 93 கி.மீயிலும் அமைந்துள்ளன. ரூ.2 ஆயிரம் கோடி திட்ட செலவினத்தில் ஒன்றிய அரசு 51 சதவீதம், மாநில அரசு 49 சதவீதம் நிதி வழங்க ஒப்புதல் தெரிவித்து துவங்கப்பட்டது.
இதன்படி ஒன்றிய அரசு ரூ.1,020 கோடி, மாநில அரசு ரூ.980 கோடி நிதி வழங்க வேண்டும். தற்போது வரை மாநில அரசு நான்கு வழிச்சாலை இணைப்பு சாலை போடுவதற்கு ரூ.26 கோடி, தாமிரபரணி கூட்டுக் குடிநீருக்கு ரூ.36 கோடி, சிப்காட் திட்ட அலுவலக கட்டுமான பணிக்கு ரூ.2 கோடி நிதி வழங்கி பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. வளாகத்திற்குள் 21 கிளைச் சாலைகள் அமைக்கும் பணிக்கு ரூ.220 கோடியில் டெண்டர் விடும் பணியை செய்து வருகிறது.
மாநில அரசு சுமார் ரூ.300 கோடி வரை ஒதுக்கி உள்ள நிலையில், ஒன்றிய அரசு தனது பங்கில் இதுவரை ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது வருத்தம் தருவதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மதுரை எய்ம்ஸ் போல் காலதாமதம் ஏற்படுமோ என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே ஒன்றிய அரசும் விரைவில் நிதியை ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சிப்காட் அதிகாரிகள் கூறுகையில், ‘‘திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி 11.7.2023ல் பெறப்பட்டது.
ரூ.1.71 கோடியில் சிப்காட் நிர்வாக கட்டிடம் கட்டுமான பணிகள் 2025 பிப்ரவரியில் நிறைவடையும். உள்கட்டமைப்பு பணிகள் அனைத்தும் வரும் 2025 மே மாதத்திற்குள் நிறைவடையும். அதை தொடர்ந்து நிலத்திற்கான மதிப்பை அரசு நிர்ணயித்து ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுக்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தங்களுக்கான கட்டுமான பணிகளை 2025 ஜூன் முதல் துவங்கும்.
ஜவுளி பூங்கா முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வந்ததும் குமாரலிங்காபுரம், கோவில்புலிக்குத்தி கிராம துவக்கப்பள்ளிகள் தத்தெடுக்கப்பட்டு பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல், சிப்காட் தொழிற் பூங்காவை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்பாடுத்தாமல் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் ஜவுளி பூங்கா செயல்படும்’’ என்றனர்.
* 25 கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு
ஜவுளிப்பூங்கா மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மணிப்பாரைப்பட்டி, துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட 25 கிராமங்களில் வசிக்கும் மக்கள் உட்பட மாவட்டம் முழுவதும் முதல்கட்டமாக 70 ஆயிரம் பேரும், படிப்படியாக 2 லட்சம் பேர் வரையும் வேலைவாய்ப்பை பெற உள்ளனர்.
* 99 வருட குத்தகை
ஜவுளி பூங்காவில் தொழிற்சாலைகள் அமைக்க முதல்கட்டமாக 11 முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை 99 வருட குத்தகைக்கு சிப்காட் நிறுவனம் வழங்கும். தொழிற்சாலைகளுக்கான சாலை வசதி, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை வழங்கி சிப்காட் கண்காணிக்கும். ஒப்பந்தத்தை மீறி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுவது, விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும்.
* 11 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கெய்னப் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா பிரைவேட் லிட் ரூ.100 கோடியில் ப்ராசசிங் யூனிட், கர்த்யா டெக்ஸ்டைல் பி.லிட் ரூ.150 கோடியில் நூற்பு மற்றும் ஆடை உற்பத்தி பிரிவு, ராஜபாளையம் மில்ஸ் லிட் ரூ.600 கோடியில் ஸ்பின்னிங் யூனிட், பாரமவுண்ட் டெக்ஸ்டைல் மில்ஸ் பி.லிட் ரூ.125 கோடியில் ஈரமான செயலாக்க அலகு, தியாகராஜர் மில்ஸ் பி.லிட் ரூ.100 கோடியில் வெட் பிராசசிங் யூனிட், கே.ஆர்.எல் டெக்ஸ்டைல் மில் லிட் ரூ.65 கோடியில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப ஜவுளி உற்பத்தி அலகு,
அஸ்மின் டவல்ஸ் பி.லிட் ரூ.10 கோடியில் கூட்டு ஜவுளி உற்பத்தி அலகு, சென்னை ஹெல்த் கேர் நிறுவனம் ரூ.10 கோடியில் சானிட்டரி நாப்கின் மற்றும் மூலப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை, சென்னை இன்ப்ரா ப்ராஜெக்ட் நிறுவனம் ரூ.10 கோடியில் தென்னை நார் ஜியோ டெக்ஸ்டைல் மற்றும் தென்னை நார் உற்பத்தி அலகு, சென்னை தேஜோமயா சொல்யூஷன்ஸ் எல்எல்பி மூலம் ரூ.10 கோடியில் இயற்கை இழைகளில் இருந்து நூல் தயாரிக்கும் ஆலை என 11 நிறுவனங்கள் முதல்கட்டமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளன.
* தொடர் சிக்கல் நீங்கும்
வானம் பார்த்த வறண்ட கந்தக பூமியான விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம் பொய்த்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக பட்டாசு தொழில் ஒரு லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி தொழில் சீன லைட்டர்களால் முடங்கி விட்டது.
பட்டாசு தொழிலுக்கு ஒன்றிய அரசு கொடுத்து வரும் பல்வேறு நெருக்கடி மற்றும் தொடர் விபத்துக்களால் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. பட்டாசு தொழிலை நம்பி இருக்கும் மக்கள் தொடர்ச்சியாக வேலை கிடைக்காமல் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் மெகா ஜவுளி பூங்கா முழுமையாக நடைமுறைக்கு வரும் போது சுமார் 2 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது.
The post விருதுநகர் அருகே ரூ.2,000 கோடியில் பிரமாண்டமாக அமைகிறது ஜவுளி பூங்காவிற்கு நிதி ஒதுக்காமல் ஜவ்வாய் இழுத்தடிக்கும் பாஜ அரசு appeared first on Dinakaran.