×

ஏடுக்கும் சக்தி தந்த ஏக தந்தன்

பாரத தேசத்தில் ஓடும் அத்தனை ஆற்றங்கரைகளிலும் லட்சக்கணக்கான விநாயகர் கோயில்கள் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அவை அனைத்தையும் நம்மால் அறிந்து போற்றுதல் இயலாது. எடுத்துக்காட்டாக வைகை ஆற்றின் கரையிலுள்ள வாது வென்ற விநாயகரைக் கண்டு மகிழலாம்.மதுரையில் திருஞானசம்பந்தருக்கும், சமணர்களுக்கும் இடையே நடந்த சமயவாதத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க பாண்டிய மன்னன் அனல் வாதம், புனல்வாதம் ஆகியவற்றை ஏற்பாடு செய்தான்.

அனல் வாதத்தில் சமணர்கள் தோற்றனர். புனல் வாதம் தொடங்கியது. இருவரும் தத்தம் சமய மந்திரத்தை ஏட்டில் எழுதி வைகை ஆற்றில் இடுவதென்றும் எவருடைய ஏடுகள் ஆற்றை நீந்திச் செல்கிறதோ அவர்களே வென்றவர் என்றும் தீர்மானிக்கப்பட்டது. திருஞானசம்பந்தர் வாழ்க அந்தணர் என்ற வாழ்த்துப் பாடலைப் பாடி அதை ஓலையில் எழுதி ஆற்றில் இட்டார். சமணரும் தமது மந்திர ஓலையில் எழுதி ஆற்றில் இட்டார். சம்பந்தர் இட்ட ஓலை ஆற்றை எதிர்த்து நீந்தின. சமணர் இட்ட ஓலைகள் சுழிக்குள் அகப்பட்டது போல நீருள் மூழ்கின. எஞ்சியவை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

திருஞானசம்பந்தர் விடுத்த ஏட்டைத் தொடர்ந்து குலச்சிறையாரும் வீரர்களும் கரையோரமாகவே பயணித்தனர். ஏறத்தாழ பதினைந்து மைல்களுக்கு அப்பால் அந்த ஏடு நிலைபெற்றது. அப்போது விநாயகர் அந்த ஏட்டை எடுத்து, குலச்சிறையாரிடம் கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு அவர் மதுரையை அடைந்து வாதில் வெற்றி பெற்றதை அறிவித்தார் என்பது செவி வழிச் செய்தியாகும். அப்படி ஏடு அணைந்த இடம் இந்நாளில் திருஏடகம் என அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளி, பெருமானைப் பாடிப் பரவினார் என்பது வரலாறு.

திருஏடகம் வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது. அதன் படித்துறையில் சம்பந்தர் இட்ட ஓலையானது நாற்புறத்திலும் மீன்கள் சூழ நீந்திவருவது, விநாயகர் அதை எடுப்பது ஆகியவை புடைப்புச் சிற்பங்களாகச் ெசய்து பொருத்தப்பட்டுள்ளன. இங்கு பாண்டிய மன்னன் விநாயகருக்கு அமைத்த சிறிய ஆலயம் உள்ளது. அந்த விநாயகருக்கு வாது வென்ற பிள்ளையார் என்பது பெயராகும். வாதில் வென்றவர் திருஞான சம்பந்தர் என்றாலும் விநாயகர் அப்பெயரைத் தனதாக்கிக்கொண்டு வீற்றிருக்கின்றார்.

ஹரிக்கு விமோசனம் அளித்த கரிமுகன்

ஆதி கயிலாய மலையினில் ஒரு சமயம் ஆதிபரமேஸ்வரி, ஆதிசிவனுடன் அந்தி நல்ல வேளையிலே ஆடுகிறாள் பகடை. அப்போது அகிலாண்டேஸ்வரியின் அண்ணனான மகாவிஷ்ணு நடுவராக இருக்கிறார். இந்த பகடையில் பரமசிவன் வெற்றி பெற்றுவிடுகிறார். சூது செய்து தன்னை வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று சிவபெருமானிடம் சினம் கொள்கிறாள் சிவசக்தி. அதோடு நின்றுவிடாமல் அரனாரின் இந்த வெற்றிக்கு அண்ணன் அனந்தனே துணை போனதால் அண்ணன் என்றும் பாராமல் மகாவிஷ்ணுவை ‘‘பாம்பாக போகக்கடவாய்’’ என்று பார்வதிதேவி சபித்தாள்.

இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவது எப்படி என்று சிவனிடம் கேட்டார் விஷ்ணு. அதற்கு சிவபெருமான், தென்திசையில் ஆலவனமென்று ஒரு இடமிருக்கின்றது. அதில் மிகப் பெரிய ஒரு ஆலமரமுள்ளது. நீ அங்கே போய் அம்மரத்தடியிலுள்ள பொந்தொன்றில் இச்சாபம் நீங்கும்படி பெரும்தவம் செய்துகொண்டிரு. அங்கே நம்முடைய குமாரனாகிய விநாயகன் வருவான். நீ அவனை எதிர்கொண்டு தரிசிக்கும் பொழுது, உன்னுடைய இப்பாம்பு வடிவம் நீங்கும் என்று சொல்லி அருளினார். அதன்படி மகாவிஷ்ணு பாம்பு உருவத்துடன் ஆலவனத்திற்குப் போய் அங்குள்ள அரசமரத்தடி பொந்தில் தவம் செய்தார்.

விநாயகப்பெருமான் அவ்விடம் வருவதை அறிந்து மகாவிஷ்ணு எதிர் சென்று அவரை பூஜித்து வணங்கினார். அடுத்த கணமே, பாம்பு உருங்கொண்டிருந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற்றார். அனந்த என்றால் பாம்பு என்று பொருள். மகாவிஷ்ணுவின் பாம்பு (அனந்த) சாபத்திலிருந்து விமோசனம் அளித்ததால் விநாயகருக்கு ‘‘அனந்தசாப நிவாரண மூர்த்தி’’ என்ற பெயர் வந்தது. காக்கும் கடவுள் ஹரிக்கே விமோசனம் அளித்தவர் கரிமுகத்தான். கரி என்றால் யானை என்று பொருள்.

ஜெயசெல்வி

 

The post ஏடுக்கும் சக்தி தந்த ஏக தந்தன் appeared first on Dinakaran.

Tags : Ganesha ,India ,Vinayaka ,Vaigai river ,Madurai ,Thirunnasambandar ,
× RELATED விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா