×
Saravana Stores

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு மாற்று ஏற்பாடு: மாநகராட்சியிடம் அறிக்கை சமர்பிப்பு

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடு குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் மாநகராட்சிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி பல்வேறு சாலைகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளால் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளன. இதனால் கனமழை பெய்யும்போது வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இயல்பாகவே சென்னையில் சில மணி நேரங்களில் 5 செ.மீ. மழை பெய்தாலே பல இடங்களில் மழைநீர் தேங்கும். மெட்ரோ ரயில் பணிகளால் பல இடங்களில் மழைநீர் வழிந்தோடுவது தடைப்படும் நிலையில் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மெட்ரோ ரயில் பணிகளால் அண்ணாசாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை, ராஜிவ் காந்தி சாலை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதேநேரம் அதிக வாகன நெரிசல்கள் உள்ள பகுதிகளான வள்ளுவர்கோட்டம், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட இடங்களிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சென்னையில் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. சாலையில் இடையே மெட்ரோ பணிக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் சேதமடைந்த குறுகளான சாலைகளில் மழைநீர் தேங்கியும், பள்ளங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாட்டின் தற்போதைய நிலைகுறித்த அறிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாகம் மாநகராட்சிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் 25 இடங்களில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளின் காரணமாக, மழைநீர் வடிகால் கட்டமைப்பு சேதமடைந்துள்ளன. மழைநீர் வெளியேறும் கால்வாய்கள் மூடல் போன்ற பிரச்னைகளால் மழைநீர் தேங்கியது கண்டறியப்பட்டது. பருவமழை தொடங்கும் முன் சீர் செய்யாவிடில் தொடர் மழை பெய்யும் போது சென்னையில் முக்கிய இடங்களில் நீர் தேங்கும் அபாயம் இருந்தது. மழைநீர் தேங்குவதை தடுப்பது குறித்து மாநகராட்சி தொழில்நுட்ப வல்லுநர் குழு 25 இடங்களிலும் மாற்று ஏற்பாடுகள் செய்ய பரிந்துரைத்தது.

அனைத்து பணிகளையும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. மாநகராட்சி அறிவுறுத்தல்படி ஒக்கியம் மடுவு கால்வாய் நீர்வழி பாதை சீரமைப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. 18 இடங்களில் மழைநீர் வெளியேற கனரக மோட்டார்கள், குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட மாற்று ஏற்பாடு பணிகள் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு மாற்று ஏற்பாடு: மாநகராட்சியிடம் அறிக்கை சமர்பிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro Rail Administration ,Metro Rail ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல்...