×

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய வழக்கு: புதுவையில் மேலும் 4 பேர் மீது சிபிஐ விசாரணை

புதுச்சேரி, செப். 27: புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதிக்கு லஞ்சம் அளித்தது தொடர்பான வழக்கில் துறை அதிகாரி மற்றும் நிறுவன இயக்குனர் உட்பட 5 பேர் மீது சென்னை சிபிஐயின் ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குபதிந்து உள்ளனர். புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறையில் அறிவியல் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் சீனிவாச ராவ். தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் இவர் லஞ்சம் பெறுவதாக சிபிஐ அதிகாரிகளுக்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி லஞ்சம் வாங்கும் போது அறிவியல் அதிகாரி சீனிவாச ராவை சிபிஐ அதிகாரிகள் கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அலுவலகத்தில் உள்ள கோப்புகள், மற்ற அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது லிங்காரெட்டிபாளையத்தை சேர்ந்த தனியார் மதுபான நிறுவனம் சுற்றுச்சூழல் துறையில் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், அனுமதி வழங்குவதற்கு முன் தொழிற்சாலையை ஆய்வு செய்யும் பொறுப்பு சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. அனுமதி வழங்குவதற்கு அவர் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், மற்றவர்கள் லஞ்சம் கொடுக்க ஏற்பாடு செய்ததாகவும் சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற தனியார் நிறுவனத்தின் இயக்குனர் ரவிச்சந்திரன் அரவிந்த், கோவை சேர்ந்த ரமேஷ் கண்ணன், புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் சிவானந்தம் ஆகியோர் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஊழல் தடுப்பு சட்டம், 1988-ன் கீழ் சிபிஐ ஊழல் தடுப்புப்பிரிவு போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய வழக்கு: புதுவையில் மேலும் 4 பேர் மீது சிபிஐ விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pollution Control Board ,CBI ,Puduvai Puducherry ,Chennai ,Puducherry Pollution Control Board ,Puducherry ,Dinakaran ,
× RELATED நெல்லை அருகே மருத்துவ கழிவுகள்...