×
Saravana Stores

வெல்லும் முனைப்பில் இந்தியா: இன்று கான்பூரில் 2வது டெஸ்ட்

கான்பூர்: இந்தியா வந்துள்ள வங்கதேசம் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில், ஒன்றரை நாள் ஆட்டம் எஞ்சியருந்த நிலையில் இந்தியா 280ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. அதனால் 2ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 2வது டெஸ்ட் இன்று கான்பூரில் தொடங்குகிறது.

சென்னையில் கிடைத்த வெற்றியின் உற்சாகத்துடன் ரோகித சர்மா தலைமையில் இந்திய அணி, தொடரை கைப்பற்றும் முனைப்பில் களம் காணுகிறது. முதல் டெஸ்ட்டின் 2 இன்னிங்சிலும் ரோகித், கோஹ்லி ஆகியோரை தவிர மற்றவர்கள் பேட்டிங்கில், பந்து வீச்சில் பொறுப்புடன் பங்காற்றினர். அதிலும் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 144ரன் என்ற பரிதாப நிலையில் இருந்த இந்தியாவை அஸ்வின்-ஜடேஜா இணை அதிரடியாக விளையாடி மீட்டதுடன், வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர். எனவே மாற்றம் ஏதுமின்றி அதே அணி களம் காண வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில் நஜ்மல் உசைன் தலைமையிலான வங்கம் வெற்றிக்கான மாற்றங்களுடன் கான்பூரில் முதல் முறையாக களம் காண உள்ளது. வங்கத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. பேட்டிங்கில் தடுமாறினாலும் பந்து வீச்சில் தஸ்கின் அகமது, ஹசன் முகமது, நஹித் ராணா ஆகியோர் மிரட்டுகின்றனர். கூடவே பேட்டிங்கிலும் மீண்டு வந்தால் இந்தியா வெற்றிக்காக போராட வேண்டியிருக்கும். அதனால் இன்று தொடங்கும் 2வது டெஸ்ட் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அணி விவரம்
* இந்தியா: ரோகித் சர்மா(கேப்டன்), கே.எல்.ராகுல், துருவ் ஜூரல், ரிஷப் பன்ட்(விக்கெட் கீப்பர்கள்), ஆர்.அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், விராத் கோஹ்லி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சர்பராஸ் கான், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, ஆகாஷ் தீப், யாஷ் தயாள்

* வங்கதேசம்: நஜ்மல் உசைன் ஷான்டோ(கேப்டன்), முஸ்ஃபிகுர் ரகீம், லிட்டன் தாஸ், ஜாகர் அலி, ஜாகீர் ஹசன்(விக்கெட் கீப்பர்கள்), ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், மஹமதுல் ஹசன் ஜாய், மோமினுல் ஹக், ஷத்மன் இஸ்லாம், ஹசன் மஹமத், கலீல் அகமது, நஹித் ராணா, நயீம் ஹசன், தைஜூல் இஸ்லாம், தஸ்கின் அகமது

கான்பூர் களம்
* கான்பூரில் இதுவரை இந்தியா 23 டெஸ்ட்களில் விளையாடி உள்ளது. அதில் 3 டெஸ்ட்களில் மட்டும் தோல்வியை சந்தித்த இந்தியா 7 டெஸ்ட்களில் வெற்றியை ருசித்துள்ளது. கூடவே 13 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.

* கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் 1952ம் ஆண்டு இங்கிலாந்திடம் 8விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

* தொடர்ந்து 1958ம் ஆண்டு நடந்த 2வது டெஸ்ட்டில் மேற்கு இந்தியத் தீவுகளிடம் 203ரன் வித்தியாசத்தில் தோற்றது.

* 1959ம் ஆண்டு நடந்த 3வது ஆட்டத்தில் ஆஸியை 119ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா முதல் வெற்றியை கான்பூரில் பெற்றது.

* அடுத்து 1983ம் ஆண்டு மீண்டும் மேற்கு இந்தியத் தீவுகள் ஒரு இன்னிங்ஸ், 83ரன்னில் வித்தியாசத்தில் வென்றது.

* இங்கு நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத்தீவுகள் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுடன் இந்தியா களம் கண்டுள்ளது.

 

The post வெல்லும் முனைப்பில் இந்தியா: இன்று கான்பூரில் 2வது டெஸ்ட் appeared first on Dinakaran.

Tags : India ,Kanpur ,Bangladesh ,T20I ,Chennai, ,
× RELATED துளித் துளியாய்…