×
Saravana Stores

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டியின் 5வது சுற்றில் எலைட் டி பிரிவில் உள்ள ரயில்வே-தமிழ்நாடு அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி அபாரமாக ஆடி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் ரயில்வே 229ரன் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக சைப் 60, பார்கவ் 53, சூரஜ் 52 ரன் எடுத்தனர். தமிழ்நாடு தரப்பில் அஜித்ராம் 4 விக்கெட் அள்ள, குர்ஜப்னீத் சிங், சோனு யாதவ், லக்‌ஷயா ஜெயின் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

அதனையடுத்து முகமது அலி 91, ஷாருக்கான் 86, ஆந்த்ரே சித்தார்த் 78, கேப்டன் ஜெகதீசன் 56 ரன் விளாச தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 438ரன் குவித்தது. ரயில்வே தரப்பில் குணால் யாதவ் 5, சிவம் சவுத்ரி 3 விக்கெட்களை வாரினர். தொடர்ந்து 209 ரன் பின்தங்கிய நிலையில் ரயில்வே 2வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் விவேக் சிங் 63, சூரஜ் 36, சைப் 52 ரன் அடிக்க, நேற்று முன்தினம் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ரயில்வே 5 விக்கெட் இழப்புக்கு 169ரன் எடுத்திருந்தது. களத்தில் இருந்த ரயில்வே வீரர்கள் சைப் 52, சிவம் 12 ரன்னுடன் கடைசி நாளான நேற்று 2வது இன்னிங்சை தொடர்ந்தனர்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே 41ரன் எடுக்க வேண்டிய நிலையில் சைப் ரன் ஏதும் எடுக்காமல் 52ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களும் வந்த வேகத்தில் வெளியேற ரயில்வே 184ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனால் தமிழ்நாடு ஒரு இன்னிங்ஸ் 25ரன் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பெற்றது. தமிழ்நாட்டின் அஜித்ராம் , சோனு யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகனாக முகமது அலி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளை பெற்ற தமிழ்நாடு 18 புள்ளிகளுடன் டி பிரிவு புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த சுற்று லீக் ஆட்டம் 2 மாதங்களுக்கு பின், வரும் ஜன. 23ம் தேதி தொடங்குகிறது. அதில் தமிழ்நாடு-சண்டீகர் அணிகள் மோத உள்ளன.

The post ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Ranji Cup Cricket ,Tamil Nadu ,AHMEDABAD ,Ranji Cup Test ,Ahmedabad, Gujarat ,Railways ,Dinakaran ,
× RELATED ரஞ்சி கோப்பை கிரிக்கெட் முன்னிலை பெற்றது தமிழ்நாடு