×
Saravana Stores

20 ஆண்டுகளுக்கு பிறகு களத்துக்கு வந்த 58 வயது மைக் டைசனை வீழ்த்தினார் 27 வயது ஜாக் பால் : வெறும் 4 புள்ளிகள்தான் வித்தியாசம்

டெக்சாஸ்: ஹெவிவெயிட் குத்துச் சண்டைப் போட்டியில் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன், இளம் வீரர் ஜாக் பாலிடம் தோல்வியை சந்திதத்ார்.அதிரடியான குத்துச்சண்டைக்கும், அடாவடி சர்ச்சைக்கும் பெயர் போனவர் மைக் டைசன்(58). அமெரிக்காவைச் சேர்ந்த அவர், 1987 முதல் 1990 வரை வீழ்த்த முடியாத ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனாக திகழ்ந்தார். மேலும் 19 தொழில்முறை போட்டிகளில் நாக் அவுட் முறையில் வென்று இருக்கிறார். அதிலும் மைக்கேல் ஸ்பின்க்சை முதல் சுற்றிலேயே 91விநாடிகளில் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

அதே போல் பஸ்டர் டக்ளசிடம், 1990ம் ஆண்டு நாக் அவுட் முறையில் வீழ்ந்ததுதான் அவரது மிகப்பெரிய தோல்வியாகும். அதன் பிறகு மீண்டும் வெற்றி, சிறை, தோல்விகளால் வளையத்துக்கு உள்ளே வெளியே வந்து போய்க் கொண்டிருந்தவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 2005ல் ஓய்வை அறிவித்தார். ஆனால் சர்ச்சையான பேச்சு, பேட்டிகளுக்கு குறைவில்லாமல் ‘பிரபல’ வெளிச்சத்தில் நீடித்து வந்தார்.இந்நிலையில் மீண்டும் குத்துச்சண்டை வளையத்துக்குள் வர இருப்பதாக இந்த ஆண்டு அறிவித்தார்.

அதன் படி இளம் வீரர் ஜாக் பால்(27) உடன் மே மாதம் மோத தயாராக இருப்பதாக மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. பிறகு நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. தொழில்முறை குத்துச் சண்டை வீரரான ஜாக் இதற்கு முன்பு 13 முறை களம் கண்டு, 12 முறை வெற்றி வாகை சூடியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு 3 நாட்களுக்கு முன்பு நடந்த போது, ஜாக்கின் சேட்டைகளால் எரிச்சலான டைசன் மேடையிலேயே அவரை ‘பளாரென’ அறைந்து மீண்டும் சர்ச்சை வளையத்துக்குள் வந்தார். இந்நிலையில் அறிவித்தபடி இந்திய நேரப்படி இன்று காலை டெக்சாஸ், ஆர்லிங்டன் நகரில் தொழில்முறை ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் டைசன்-ஜாக் களமிறங்கினர்.

மீண்டும் டைசன் களமிறங்குவதால் போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட்கள் பல மடங்கு விலைக்கு விற்கப்பட்டன. ஆனாலும் அரங்கம் நிரம்பி வழிந்தது. விதிமுறைகளின் படி அறிவிக்கப்பட்ட தலா 2 நிமிடங்கள் கொண்ட 8 சுற்றுகளிலும் இருவரும் முழுமையாக விளையாடினர். வயதானதால் டைசன் நாக் அவுட் முறையில் 2 அல்லது 3வது சுற்றிலேயே வீழ்ந்து விடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மாறாக 8 சுற்றுகளிலும் ஜாக்கை சமாளித்து டைசன் புள்ளிகளை குவித்தார். இருப்பினும் 78-74 என வெறும் 4 புள்ளி வித்தியாசத்தில் ஜாக் வெற்றிப் பெற்றார்.

கூடவே போட்டியில் தோற்றால் கடுப்பாகும் டைசன் வழக்கத்துக்கு மாறாக ஜாக்கை அரவணைத்துப் பாராட்டினார். கூடவே ‘ஜாக் ஒரு சிறந்த போராளி, அவர் இந்த வெற்றிக்கு தகுதியானவர்’ என்றும் பாராட்டினார். அதேபோல் ஜாக்கும், ‘அவர் விளையாட்டில் மிகச் சிறந்தவர்’ என்று டைசனை கொண்டாடினார். இருவருக்கும் இடையில் 31 ஆண்டுகள் இடைவெளி. இதேபோல் 1963ம் ஆண்டு மோதிய ஆர்ச்சி மூர்(49), மைக் டிபியாஸ்(25) இடையே 24 ஆண்டுகள் வித்தியாசம் இருந்தது.

The post 20 ஆண்டுகளுக்கு பிறகு களத்துக்கு வந்த 58 வயது மைக் டைசனை வீழ்த்தினார் 27 வயது ஜாக் பால் : வெறும் 4 புள்ளிகள்தான் வித்தியாசம் appeared first on Dinakaran.

Tags : Jack Paul ,Texas ,Mike Tyson ,Jack Ballydam ,United States ,Dinakaran ,
× RELATED உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...