- பாஜக
- DMK கூட்டணி
- திருவண்ணாமலை
- சிபிஎம்
- மாநில செயலாளர்
- K.Balakrishnan
- திமுக
- தமிழ்நாடு மின் வாரியம்
- ஓய்வுபெற்ற பெற்றோர் நல அமைப்பு 9வது மாநில மாநாடு
- திருவண்ணாமலை
- தின மலர்
திருவண்ணாமலை, செப்.27: திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த நினைக்கும் பாஜவுக்கு தீனி போடும் வகையில் விவாதங்கள் இருக்கக்கூடாது என திருவண்ணாமலையில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு 9வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் நேற்று நடந்தது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில்பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. நாடு முழுவதும் பல தலைவர்களை பாஜ அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி, இதுபோல சிறையில் அடைத்து உள்ளது. யார் மீது வழக்கு இருந்தாலும், அது தொடர்ந்து நடக்கட்டும். வழக்கை நீதிமன்றம் விசாரிக்கட்டும். ஆனால், குற்றச்சாட்டை பதிவு செய்யாமல், கைது செய்து ஆண்டுக்கணக்கில் சிறையில் வைத்திருப்பது என்ன நியாயம். பழிவாங்கும் நோக்கத்தோடு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றை ஒன்றிய அரசு பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
செந்தில்பாலாஜி வழக்கை நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு சொல்லட்டும். அதற்கு முன்பாக அரசாங்கமே தண்டனை வழங்குவது எப்படி நியாயமாகும். நடப்பது சட்டத்தின் ஆட்சியா என்ற கேள்வி எழுகிறது. அராஜகமான, மனித உரிமைகளை பறிக்கிற ஜனநாயக உரிமைகளை மீறுகிற ஆட்சியைதான் ஒன்றிய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. அதிகார பகிர்வு குறித்து தற்போது பேசப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக இப்பிரச்னையை கிளப்பி இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் அந்த சர்ச்சை தேவையா என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேள்வியாகும். எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு காலத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்றுதான் செயல்படுகிறது. ஆனால், அது எப்போது என்பதுதான் கேள்வி. நேரடியாக அதிகாரத்திற்கு வர முடியுமா என்பது தான் கேள்வி ஆகும்.
பாஜவை எதிர்த்து திமுக கூட்டணியில் உறுதியான போராட்டத்தை நடத்தி வருகிறோம். கடந்த தேர்தலில் 40க்கு 40 எனும் வெற்றியை இந்த அணி வென்று நாட்டிற்கு முன்னுதாரணமாக அமைந்தது. இந்த கூட்டணிக்குள் பலவித குழப்பங்களை ஏற்படுத்த பாஜ முயற்சிகளை செய்யக்கூடும். அதற்கு தீனி போடும் வகையில் இதுபோன்ற சர்ச்சைகள், விவாதங்கள் இருந்து விடக்கூடாது. மந்திரி சபையில் பங்கு பெறுவது மட்டுமே ஆட்சிக்கு, அதிகாரத்திற்கு வருவது என்பது அல்ல. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, அதை அமல்படுத்தும் கட்சிகளின் ஒருங்கிணைப்பில் ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் உண்மையான அதிகார பகிர்வாக இருக்கும் என சிபிஎம் கருதுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவகுமார், மாவட்ட குழு உறுப்பினர் வீரபத்திரன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
The post பாஜவுக்கு தீனி போடும் வகையில் விவாதங்கள் இருக்கக்கூடாது திருவண்ணாமலையில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த நினைக்கும் appeared first on Dinakaran.