கூடுவாஞ்சேரி: வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனைக்காண தினம்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டு களித்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், அண்ணா உயிரியல் பூங்காவில், கடந்த 25ம் தேதி முதல் இன்று 27ம் தேதி வரை புதுடெல்லியின் உயிரியல் பூங்கா ஆணையத்தின் நிதி உதவியின் கீழ் ‘வனவிலங்கு மருத்துவத்தில் மேம்பட்ட நோய் அறிதல், சிக்கலான பராமரிப்பு மற்றும் மருத்துவ நடைமுறைகள்’ என்ற தலைப்பில் கால்நடை மருத்துவர்களுக்கான தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், இந்தியாவில் உள்ள 30 உயிரியல் பூங்காக்களை சேர்ந்த 30 மருத்துவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்று உள்ளனர். இந்த பயிற்சியில் நேரடியாக பங்கேற்க முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் பங்கேற்றுள்ளனர். மேலும், கால்நடை மருத்துவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவும், உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மேம்பட்ட கால்நடை குறித்தான விவரங்களை ஆராய்வதன் மூலம் கால்நடை மருத்துவர்களின் திறன் மற்றும் அறிவை மேம்படுத்துவதே இந்த பயிற்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்த கூட்டத்தில், உயிரியல் பூங்கா அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி கூட்டம் appeared first on Dinakaran.