×

முதல்வர் அறிவிக்கும் அரசு திட்டங்களை அதிகாரிகள் கொண்டு சேர்க்க வேண்டும்

*சுற்றுலா துறை அமைச்சர் வேண்டுகோள்

ஊட்டி : தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கும் அனைத்து அரசு திட்டங்களையும் தகுதி வாய்ந்த பயனாளிகள் அனைவருக்கும் கொண்டு சென்று அதிகாரிகள் சேர்க்க வேண்டும் என சுற்றுலா துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், சமூக நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, சுற்றுலா துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை (கட்டடம் மற்றும் கட்டுமானம்), பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு), மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இதர துறை அமைச்சர்கள் அறிவித்த திட்டங்களின் தற்போதை நிலை மற்றும் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், சமூக நலத்துறையின் சார்பில் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம், தோட்டக்கலை ஒருங்கிணைந்த மேம்பாட்டுத்திட்டம், தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில் கூட்டுப்பண்ணை திட்டம், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் நிலைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அடையாள அட்டை, நலவாரிய அட்டை, கல்வி உதவித்தொகை, சுய தொழில் வங்கி கடன், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக்கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம், சுற்றுலா துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (கலைஞர் மகளிர் உரிமைத்தொகை) உள்ளிட்ட துறைகளின் மூலம் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். துறை அலுவலர்களுடன் இதுபோன்ற ஆய்வுக்கூட்டத்தை நடத்தி நடைபெற்று வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இதுவரை தொடங்கப்படாத பணிகளை உடனடியாக தொடங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், நமது மாவட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடன் முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிக்கும் அனைத்து அரசு திட்டங்களும், தகுதி வாய்ந்த பயனாளிகள் எவரும் விடுபடாமல் அனைவருக்கும் சென்று சேர்க்க வேண்டும்.

அதற்கு களப்பணிகளை மேற்கொள்ளும் அரசுத்துறை அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளும் போது உரிய காலத்திற்குள் முடிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், தேசிய நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் எழில், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் சுரேஷ் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, வட்டாட்சியர்கள் உட்பட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post முதல்வர் அறிவிக்கும் அரசு திட்டங்களை அதிகாரிகள் கொண்டு சேர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister of Tourism ,Chief Minister of Tamil Nadu ,Tamil Nadu government ,
× RELATED சிறு வணிக கடன் பெறும் திட்டத்தில் எனது...