×
Saravana Stores

ரயில் பிளாட்பாரத்தில் இட்லிக்கு கூடுதல் கட்டணம் ரயில்வே, கேட்டரிங் நிறுவனம் மீது விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில் புகார்

விழுப்புரம், செப். 25: ரயில் பிளாட் பாரத்தில் இட்லிக்கு கூடுதல் கட்டணம் வாங்கிய விவகாரத்தில் ரயில்வே, கேட்டரிங் நிறுவனம் மீது விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் வழுதரெட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் ஏறி விழுப்புரத்திற்கு பயணம் செய்துள்ளார். காலை 7.10 மணிக்கு மதுரையில் ஏறிய நிலையில் 9.30 மணி அளவில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது முதல் பிளாட்பாரத்தில் ரயில்வே அனுமதி பெற்று உணவு பொருள் தயாரித்து விற்பனை செய்த தனியார் கேட்டரிங் நிறுவனம் சார்பில் விற்கப்பட்ட தலா ரூ.30 வீதம் 2 இட்லி பார்சல் ரூ.60க்கும், இரண்டு வடை ரூ.20க்கும் என மொத்தம் ரூ.80 கொடுத்து வாங்கி உள்ளார்.

ரயிலில் கூட்ட நெரிசல் இருந்ததால் கீழே இறங்காமல் ரயிலில் இருந்தவாறு இட்லி, வடை பொட்டலத்தை வாங்கியுள்ளார். அப்போது ரசீது கேட்டபோது கேண்டின் ஊழியர் தர மறுத்துவிட்டார். மேலும் பார்சலை வாங்கி பார்த்தபோது அதன்மேல் எம்ஆர்பி விலை ரூ.26 என இருந்தது. இதனால் ஆரோக்கியசாமி விற்பனையாளரை அழைத்து எம்ஆர்பி விலையைவிட கூடுதலாக இரண்டு இட்லி பார்சலுக்கும் ரூ.8 வாங்கி உள்ளீர்கள். அதனை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டதற்கு அவர் அலட்சியமாக பேசிவிட்டு சென்றிருக்கிறாராம். மேலும் பார்சலை பிரித்து பார்த்தபோது சாம்பார் மட்டுமே இருந்தது. சட்னி இல்லை. அளவும் குறைவாக இருந்ததாம். வேறு வழி இல்லாமல் அதனை சாப்பிட்ட ஆரோக்கியசாமி 11.40 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர், ரயில்வே போலீசாரிடமும் புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து திருச்சி கோட்ட மேலாளர், கேட்டரிங் நிறுவன உரிமையாளருக்கும் கூடுதலாக வசூலித்த 8 ரூபாய் திருப்பி வழங்க கோரி புகார் மனு எழுத்து பூர்வமாக அளித்துள்ளார். அப்போது விசாரணை நடத்திய திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் சம்பந்தப்பட்ட கேட்டரிங் உணவகத்திடமிருந்து ரூ.1000 அபராதம் வசூலித்துள்ளனர். ஆனால் ஆரோக்கியசாமிக்கு கொடுக்க வேண்டிய 8 ரூபாய் கொடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆரோக்கியசாமி விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் இந்த புகார் பட்டியலிடப்பட்டு வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதன்படி நேற்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது திருச்சி கோட்ட ரயில்வே உதவி மேலாளர், சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜரானார்கள். தொடர்ந்து நீதிபதி சம்பந்தப்பட்ட கோட்ட ரயில்வே மேலாளர் ஏன் வரவில்லை என்று கூறி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

The post ரயில் பிளாட்பாரத்தில் இட்லிக்கு கூடுதல் கட்டணம் ரயில்வே, கேட்டரிங் நிறுவனம் மீது விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில் புகார் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,court ,Railways ,Villupuram consumer court ,Arogyaswamy ,Valuthareddy ,Dinakaran ,
× RELATED ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது...