×
Saravana Stores

திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை

உலகில் எத்தனையோ மலைகள் இருந்தாலும், திருப்பதியில் இருக்கும் `திருமலை’ என்று சொன்னால் மனதிற்குள் ஒருவித உற்சாகம் பிறந்திடும். காரணம், அங்கு வீற்றிருக்கும் திருமலைவாசன்…வேங்கடவன்..ஆபத்பாந்தவன்.. அநாதரட்சகன்..கோவிந்தான்.. நமது உடல் கவலைகளையும், மனக் கவலைகளையும் போக்கி அருள்வான் என்கின்ற திடமான நம்பிக்கையாகும். பலருக்கும் குலதெய்வமாக தனது அருட்கடாட்சத்தை பொழிந்து வரும் திருமலை வேங்கடவனை தரிசிக்க பேருந்துகள் மூலமாக, ரயில் பாதைகள் மூலமாக, ஆகாயத்தில் விமானம் மூலமும் அல்லது தனியாக கார் போன்ற வாகனம் மூலமாகவும் திருப்பதிக்கு செல்லலாம். காரில் சென்றால், நேரடியாக திருமலைக்கே சென்றுவிடலாம். அதாவது, திருப்பதியில் வேங்கடவனின் கோயில் கிடையாது. திருப்பதியில் வேங்கடாத்ரி, கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, சேஷாத்திரி என ஏழு மலை கொண்ட “திருமலை’’ என்னும் மலையின் மீதே வேங்கடவன் கோயில் கொண்டுள்ளான். சிலர், திருப்பதியில் இருப்பதாக தவறாக புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆக, ரயில், பேருந்துகள் மூலமாக வருபவர்கள், திருப்பதியில் இருந்து மீண்டும் பேருந்துகளிலோ அல்லது ஜீப், கார் மூலமாகவோ திருமலைக்கு செல்லலாம்.

இதுதான் தற்போதைய நடைமுறை. சற்று நாம் பின்னோக்கி செல்வோம். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல ஒரு காலத்தில் கார், ஜீப், பஸ் போன்ற வசதிகள் எல்லாம் கிடையாது. ஏன்..! சாலை வசதிகள்கூட கிடையாது. கீழ்த் திருப்பதியில் இருந்து அதாவது திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல படிகள் வழியே நடந்து செல்ல வேண்டும். இப்போதுள்ளதைப் போல் அப்போது இத்தகைய நெருசல்களான பக்தர்களின் கூட்டங்கள் கிடையாது. ஆகையால், ஏழுமலையானைத் தரிசிக்க வெறும் ஐந்து நிமிடங்கள் போதும். ஐந்து நிமிடமா! ஆச்சரியமாக இருக்கிறதா… இவைகளை என் தாத்தா, பாட்டி கூறும்போதும் எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.அப்போதெல்லாம் ஏழுமலையானை தரிசிக்க, எந்த ஒரு க்யூ சிஸ்டமும் இல்லை. செக்யூரிட்டி ரீசனை காரணம் காட்டி செக்கிங் தொந்தரவுகள் இல்லை. நேராக சென்று ஏழுமலையானை தரிசித்துவிட்டு, லட்டுகளை பெற்று திருமலையில் இருந்து மீண்டும் படி வழியாக கீழ்த் திருப்பதிக்கு வந்துவிடுவார்கள்.

ஏழுமலையான் வாசம் செய்யும் மொத்தமுள்ள ஏழு மலைகளும், நம் வீட்டில் பூஜை செய்யும் சாளக்கிராமத்தில் இருக்கும் சாந்நித்தியம் எந்தளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்கின்றதோ, அதே போல், ஏழுமலைகளுக் குள்ளும் இருக்கிறது. அதனால், முன்னொரு காலத்தில் இயற்கை உபாதைகள் வந்தால்கூட திருமலையில் கழிக்க மாட்டார்கள். கீழே இறங்கிய பின்புதான் மற்றவைகள் எல்லாமே.ஆகையால் அந்த காலத்தில், கீழ் திருப்பதியில் இருந்து நடைபயணம் செய்து திருமலைக்குச் சென்று முடி காணிக்கை, மாவிளக்கு இடுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், போன்ற வேண்டுதல்களையெல்லாம் முடித்துக் கொண்டு, திருமலையப்பனை தரிசித்து, லட்டினை பெற்றுக் கொண்டு, மீண்டும் நடைப்பயணத்தை மேற்கொண்டு, கீழ்த் திருப்பதிக்கு வந்துவிடவேண்டும். இவைகளுக்கெல்லாம், ஒரு நாள்கள்கூட கிடையாது. காலை முதல் மாலை ஆறு ஏழிற்குள் முடித்துவிடவேண்டும். முடிந்தும் விடும்.இப்போதெல்லாம் இவைகள் சாத்தியமில்லை. திருமலைக்கு சென்றுவர மூன்று நாள்கள் தேவைப்படுகிறது. திருப்பதிக்கு அருகில் வசிப்பவர்களுக்குகூட குறைந்தது இரண்டு நாட்கள் ஆகிறது.

ஆனால் பாருங்கள்! என்னதான் நாம் திருமலைக்கு ஜீப், கார் என்று சென்றாலும், நடைபாதை மூலமாக படிகளை ஏறி கோவிந்த கோஷத்துடன் பயணித்து, ஏழுமலையானை தரிசிப்பது என்பது தனி அனுபவம்தான். மேலும், படிகள் மூலமாகப் பயணித்தால் அனுபவம் மட்டும் கிடைக்கப் போவதில்லை, கூடவே அந்த அநாதரட்சனின் பரிபூரணமான கடாட்சமும்தான். என்னதான் இன்று திருமலைக்கு செல்ல எண்ணற்ற பல போக்குவரத்துகள் இருந்தாலும், ஏழுமலைவாசனின் முழு அருள் வாசனை கிடைக்க இன்றும் படிகள் மூலமாக நாள் ஒன்றுக்கு பல லட்சம் பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்கள். முடியவில்லை என்றாலும், வேங்கட வனின் மீது அன்பு கொண்டு, தன்னையே வருத்திக்கொண்டு பயணிப்பவர்களும் இருக்கிறார்கள். புதியதாக திருமலைக்கு செல்பவர்களும் நடைபாதையினை பயன்படுத்தி வருகிறார்கள். இப்படி பலரும் இன்றளவும்கூட படிகளை ஏறி ஏழுமலைகளை கடந்து நிவாசப் பெருமானை தரிசித்து வருபவர்களுக்கு இந்த தொகுப்பு மிக பயனுள்ளதாக இருக்கப் போகிறது.

அதுவும் இவ்வருட புரட்டாசி முதல் சனிக்கிழமையில் இந்த வித்தியாசமான இந்த தொகுப்பு வெளிவருவதும், ஒரு புனித பயணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். கீழ்த் திருப்பதியில் இருந்து திருமலைக்கு படிகள் மூலமாக எப்படி பயணிப்பது? என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும், போன்ற பயனுள்ள தகவல்களின் தொகுப்பே இது… வாருங்கள்….

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் மதியம் 02.25 மணிக்கு, திருப்பதிக்கு புறப்படும் `திருப்பதி எக்ஸ்பிரஸ்’ ரயிலில் ஏறி, மிக சரியாக மாலை 05.05 மணிக்கு திருப்பதியை அடைந்துவிட்டோம். கடும்குளிர் என்று சொல்ல முடியாது, ஆனால் மிதமான குளிர் இருந்தது. ஆகையால், இறங்கியதும் அனைவரும் டீ அருந்திவிட்டு, திருப்பதி ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். `சார்.. திருமலைக்கு செல்ல வேண்டுமா?… வாங்க ஜீப் இருக்கு’ என்று தெலுங்கில்கூறி, ஈ மொய்ப்பதை போன்று மொய்க்க தொடங்கினார்கள், ஜீப் ஓட்டிகள். திருமலைக்கு செல்ல பஸ், வேன், எண்ணற்ற பல கார்கள் இருந்தாலும், அங்குள்ள ஜீப்பில் செல்லும் அனுபவமே தனி அனுபவம்தான். ஜீப்பின் மேல் கூரையில் நம் பெட்டிகளை வைத்துவிட்டு, ஜீப்பின் உள்ளே அமர்ந்து கொண்டால், ஜீப்பை சுற்றிலும் கலர் கலராக எரியும் குட்டிக் குட்டி விளக்குகள், ஜீப்பின் நடுவில் வெங்கடாஜலபதியின் அரை உருவம் பொதிந்த சிறிய வடிவிலான விளக்கு ஒன்று எரிந்துகொண்டு இருக்கும். அதன் அருகிலேயே நான்கு ஊதுபத்திகள் லேசாக பற்றிக் கொண்டு, ஜீப் முழுவதிலும் நறுமணம் வீசும், “னிவாசம் ஸ்ரீவெங்கடேசம்’’ என்னும் பாடல் அதிகப்படி ஒலியில்லாமல், மெதுவாக காதில் கேட்கும். அடடா… என்னஅனுபவம்! சரி.. விஷயத்திற்கு வருவோம். நாம்தான் சாலைவழிப் பயணத்தை மேற்கொள்ளப்போவதில்லையே! இதனை சொன்னதும், ஜீப் ஓட்டிகள் கலைந்து சென்றுவிட்டார்கள். அதன் பின், ஒரு ஆட்டோவைப் பிடித்து, திருமலைக்கு நடந்துசெல்ல ஆரம்பமாகும் அலிபிரி என்னும் இடத்திற்கு செல்ல ஆயத்தமானோம்.

அலிபிரி வாக்

திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணித்தால், `அலிபிரி வாக்’ என்னும் இடம் வந்துவிடும். அதாவது, இங்கிருந்துதான் திருமலைக்கு செல்லும் முதல் படி ஆரம்பமாகும் இடம். திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து அலிபிரி வாக் இடத்திற்கு ஆட்டோவில் செல்ல ஒரு நபருக்கு 50 ரூபாய் வாங்குகிறார்கள். அலிபிரி வாக் இடத்தை நோக்கி அருகில் வரவர, ஏழுமலைகளின் அழகிய தோற்றமும், மலைகளின் நடுவில் மிக பெரிய விளக்கினால் ஆன திருநாமம் சாற்றிய ஒரு கோபுரமும் காட்சி தருகிறது. அந்த கோபுரத்தை “காளி கோபுரம்’’ என்று கூறுகிறார்கள். ஏன் அந்த கோபுரத்திற்கு காளி என்று பெயர் வந்ததை பின்னால் வரும் தொகுப்பில் காணலாம்.

நாம் செல்லும்போது, மழையானது பெய்து ஓய்ந்திருக்கவேண்டும். காரணம், மழைத் துளிகள் ஆங்காங்கே சொட்டிக்கொண்டிருந்தன. நம் வீட்டு வாசல்களில் தண்ணீர் தெளித்து, கோலம் போடுவோமல்லவா..! அது போன்று சாலை முழுவதிலும் தண்ணீர் தெளித்தது போன்றிருந்தது. மழை பெய்து ஓய்ந்த மண்ணின் வாசனை ஒரு பக்கம் என்றால், கற்பூர வாசனை மறுபக்கம். எங்கே?.. கமகம என்று கற்பூர வாசனை வருகிறது என்று திரும்பிப் பார்த்தால், திருமலைக்கு நடைப்பயணம் மேற்கொள்பவர்கள், முதல்படிக்கு முன்பாக இருக்கும் ஒரு இடத்தில் கற்பூரமேற்றி வழிபாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். “சார்.. இங்கே இருந்துதான் நீங்கள் திருமலைக்கு நடந்து சொல்லணும் இறங்குங்க..’’ என்றார் ஆட்டோ ஓட்டுநர்.

முதல் படி

அங்கு விற்கப்படும், கற்பூரத்தை வாங்கிக் கொண்டு, கற்பூரத்தை ஏற்றி வைத்து, பயணம் நல்லபடியாக அமைய ஏழுமலையானை பிரார்த்தனை செய்தோம். தற்போது மணி சரியாக காலை 4.30 மணி. செப்டம்பர் மாதம் என்பதால் குளிர் அவ்வளவாக இல்லை என்றாலும், மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. சுற்றிலும் பக்தர்களின் “கோவிந்தா… கோவிந்தா…’’ என்ற கோஷம். நாமும் நம்மை அறியாது கோவிந்த… னிவாச… என்று சொல்லிக்கொண்டே பயணத்தைத் தொடங்கினோம். சற்று தொலைவிலேயே விநாயகப் பெருமானின் சிறிய ஆலயம் ஒன்று இருக்கிறது. விநாயகரையும் வேண்டிக்கொண்டு, மேலும் சில தூரம் பயணம் செய்தோமேயானால், மச்சாவதாரத்தோடு பகவான் விஷ்ணு காட்சி தரும் அழகிய சிற்பம் காணப்படுகிறது. திருமலை ஏறஏற ஒவ்வொரு பகவானின் அவதாரங்கள் இருக்கப் போகிறது என்று அந்த சிற்பத்தை பார்த்தவுடனே புரிந்து கொண்டோம். அதுபோலவே, திருமலை ஏறியதும் கடைசி அவதாரமான கல்கி அவதாரம் இருந்தது. ஒவ்வொரு அவதாரமும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

700 படிகள் கடக்கவே சிரமப்பட்டோம்

மொத்தமுள்ள 3550 படிக்கட்டுகளில், 700 படிகளை மட்டுமே நாம் கடந்துள்ளோம். ஆனால், அதற்கே மூச்சு வாங்கியது. நமக்கு மட்டும் அல்ல. நம்மைவிட வயதில் குறைந்த நபர்களும், மிகவும் ஒல்லியாக இருக்கும் நபர்களும் `தஸ்ஸு…. புஸ்ஸு…’ என்று மூச்சு இரைக்க படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்த உடனே, நமக்குள் ஒன்று தோன்றியது. நாம் சொன்னது போல, முன்னொரு காலத்தில் திருமலைக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் கிடையாது. ஏன்.. சாலைகள்கூட கிடையாது. படிகளிலேயே ஏறி இறங்கி வேங்கடவனை தரிசிக்க வேண்டும். அதுவும் ஒரே நாளில் தரிசித்து கீழே இறங்கிவிடவேண்டும். இப்போதுபோல் இரண்டு நாட்கள் – மூன்று நாட்கள் என்றெல்லாம் தங்க முடியாது. தங்கவும்கூடாது. (ஏன்.. தங்க கூடாது என்று பின் வரும் தொகுப்பில் காணலாம்)

அப்படி இருக்கும் சூழலில், நம் முன்னோர்கள் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்களே! நமக்கு 700 படிகள் ஏறவே உடலானது திணறுகிறது. அவர்கள் எப்படி சென்றிருக்கிறார்கள்? என்று யோசித்தோம். ஒரே ஒரு விடை கிடைத்தது. அதுதான் “ஆரோக்கியமான சுத்தமான கலப்படமில்லாத உணவு’’. ஆம்.. அவர்கள் உண்ட உணவை நாம் நிச்சயம் உண்ணவில்லை. 4 – 5 வயது குழந்தைகள்கூட இன்று மிக பெரிய கண்ணாடியினை அணிகிறார்கள். 30 வயதினர்கள் இன்று பெரும்பாலும், வயிறு ஊதியே இருக்கிறார்கள். 35 – 45 வயதினருக்கு சர்வ சாதாரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. இன்னும் எண்ணிலடங்காத பல பிரச்னைகள், இளம் வயதினரையே தாக்குகின்றன. அதற்கு ஒரு மிக பெரிய காரணம் உணவும், உணவு பழக்க முறைகளும்தான். அப்போது போல், நாம் மீண்டும் கேழ்வரகு, கம்பங்கூழ், தானியவகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், அடுத்த தலைமுறையினரையாவது காப்பாற்றலாம்.

சரி..! 700 படிகள் ஏறிய களைப்பில், அருகில் இருபுறமும் அமரக்கூடிய பெரிய கல்லினால் அமைக்கப்பட்ட திண்ணைகள் இருந்தன. அங்கு சற்று அமர்ந்துக் கொண்டோம். அங்கு ஜூஸ் கடைகள், பழக்கடைகள், தின்பண்ட கடைகள் என இருந்தன. இங்கு மட்டுமில்ல, அடிவாரம் முதல் திருமலை வரை வழிகள் எங்கும் கடைகள் நிறைந்திருந்தன. அதில், ஒரு குளுக்கோஸ் ஜூஸை வாங்கிக் குடித்தோம். (இந்த ஜூஸுக்கும் ஒரு கதை இருக்கிறது பின் தொகுப்பில் காணலாம்) இன்னும் 2850 படிகளை எப்படி ஏறப் போகிறோம் என்ற மலைப்பு ஏற்பட்டது. இருந்தாலும், நம்பிக்கையோடு னிவாசனை மனதில் நினைத்துக் கொண்டு மேலும் பயணத்தை தொடங்கினோம்.

படிகளுக்கு பூஜை செய்தல்

நம்மால், படிகளில் ஏறுவதே சிரமமாக இருக்கும்போது, பல பக்தர்கள், ஒவ்வொரு படிகளுக்கும் மஞ்சள் – குங்குமம் இட்டு கோவிந்தா… கோஷத்துடன் பயணிப்பதை பார்க்க முடிந்தது. அதனை கண்டு பிரம்மித்துவிட்டோம். அந்த பகவான், னிவாசனின் மீது மிகப் பெரிய பக்தி இருந்தால் மட்டுமே இத்தகைய கடினமான பூஜையினை செய்ய முடியும். நடைப் பாதை முழுவதிலும் ஊர் காவலர்களும், மத்திய பாதுகாப்பு துறையினரும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதால், எவ்வித அச்சமும் இன்றி பயணிக்கலாம். சிறிய உபாதைகள் என்றாலும், அவர்களாகவே நம் அருகே வந்து “மே ஐ ஹெல்ப் யூ’’ என்று கேட்கிறார்கள். அந்த அளவிற்கு பாதுகாப்பு உச்சபட்சமாக இருக்கிறது, பயமின்றி பயணிக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக ஏழுமலைவாசன் நம்முடனே பயணிக்கும்போது, நமக்கு என்ன பயம்?!
(பயணம் தொடரும்)

 

The post திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை appeared first on Dinakaran.

Tags : Tirupathi Alibri ,Matrimal ,Tirupati ,Tirumali ,
× RELATED திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை