மாதவரம்: வியாசர்பாடி பொன்னப்பன் தெரு பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து (51). இவர் தனது குடும்பத்துடன் கீழ்த்தளம் மற்றும் முதல் தளத்தில் வசித்து வருகிறார். தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி செல்வி எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை 7.30 மணிக்கு இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர் அப்போது அதே குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசிக்கும் மாரிமுத்துவின் தம்பி மணிகண்டன் என்பவர் மதியம் மாரிமுத்துவை தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, மின்விளக்குகள் எரிந்து கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாரிமுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு மற்றும் படுக்கை அறையின் கதவு, பீரோ உள்ளிட்டவை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த சுமார் 58 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் முத்துக்குமார், புளியந்தோப்பு உதவி கமிஷனர் ராஜா மற்றும் வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
* மூதாட்டியிடம் செயின் பறிப்பு
குரோம்பேட்டை, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (57). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள அவரது தோழி வீட்டில் நடைபெற்ற வழிபாடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த நாலரை சவரன் தாலிச் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி சம்பவம் குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.
The post பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 58 சவரன் துணிகர கொள்ளை appeared first on Dinakaran.