- கம்பர்நத்தம் கோயில்
- திருவூர்
- கம்பர்நத்தம்
- Saliyamangalam
- பாபநாசம்
- தஞ்சாவூர் மாவட்டம்
- கம்பர் நதம்
- கம்பயநத்தம்
- தஞ்சாவூர்
- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை
- சலியமங்கலம்
- அருந்தவபுரம்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் சாலியமங்கலத்திற்கு அருகில் கம்பர்நத்தம் எனும் பழம்பெருமை வாய்ந்த திருவூர் உள்ளது. மக்கள் வழக்கில் கம்பர் நத்தம் எனும் இவ்வூரை கம்பயநத்தம் எனக் கூறுவர். தஞ்சாவூர் – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திலிருந்து பிரியும் அருந்தவபுரம் செல்லும் சாலையில் இயற்கை அழகோடு இத்திருவூர் காட்சியளிக்கின்றது.
மாமன்னன் ராஜராஜ சோழன் சோழநாட்டை பல வளநாடுகளாகப் பகுத்தபோது காவிரிக்கும் வெண்ணாற்றுக்கும் இடைப்பட்ட ஒரு பகுதிக்கு நித்த விநோத வளநாடு எனப் பெயரிட்டான். அவ்வளநாட்டில் ஆவூர் கூற்றம், காந்தார நாடு, கறம்பை நாடு, கிழார் கூற்றம், முடிச்சோழ நாடு, நல்லூர் நாடு, பாம்புணிக் கூற்றம், தஞ்சாவூர் கூற்றம், வெண்ணிக் கூற்றம், வீரசோழ வளநாடு என்ற பத்து உட்பிரிவுகள் அடங்கியிருந்தன.
இவற்றில் ஒன்றான காந்தார நாட்டில், விஜயாலய சதுர்வேதி மங்கலம் (சாலியமங்கலம்) ராஜமகேந்திர சதுர்வேதி மங்கலம், ரவிக்குல மாணிக்க நல்லூர், கோனூர் ஆகிய ஊர்கள் இருந்தனவாக சோழர் கல்வெட்டுகள் குறிக்கின்றன. கங்கை கொண்ட ராஜேந்திர சோழனின் புத்தூர் செப்பேடு என்னும் கரந்தை செப்பேட்டுச் சாசனத்தையும், ராஜேந்திரனுக்குப் பின்னர் வந்த சோழ அரசர்களின் கல்வெட்டு சாசனங்களையும் தொகுத்து நோக்கும்போது,
1. விஜயலாயசோழ சதுர்வேதிமங்கலம் (சாலியமங்கலம்)
2. வடசாத்தாங்குடி (வடபாதி)
3. ராஜமகேந்திர சதுர்வேதி மங்கலம் (கம்பர்நத்தம்)
4. அரிஞ்சிகைபுரம் (அருந்தவபுரம்)
ஆகிய ஊர்கள் அருகருகே திகழ்ந்த ஊர்கள் என்பதும் இவை நித்த விநோத வளநாட்டுக் காந்தார நாட்டில் இருந்த ஊர்கள் என்பதும் அறியமுடிகிறது. கம்பர் நத்தம் என்னும் இவ்வூரின் பழம்பெயர் கறம்பை நத்தம் அல்லது கம்பர் நத்தம் என்றே இருந்திருத்தல் வேண்டும். கவிச்சக்கரவர்த்தி கம்பரோடு தொடர்புபடுத்திக்கூட பிற்காலத்தில் கம்பர்நத்தம் என்றே அழைத்திருக்கலாம். முதலாம் ராஜராஜ சோழனின் கொள்ளுப்பேரனும், கங்கை கொண்ட ராஜேந்திர சோழனின் பேரனும், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகனுமான ராஜமகேந்திரன் காலத்தில் இவ்வூர் ராஜமகேந்திர சதுர்வேதி மங்கலம் எனப் பெயர் மாற்றம் அடைந்தது. சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பெறும் ஊர்கள் நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர்கள் மிகுந்து வாழும் ஊர்களாகும். ராஜமகேந்திர சோழன் தன் பெயரால் நான்கு வேதங் களிலும் வல்ல அந்தணர்களுக்கு இவ்வூரை வழங்கியதால் கம்பர்நத்தம் என்றும் இப்பழமையான ஊர் அவன் காலத்திலிருந்து ராஜமகேந்திர சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பெற்றது.
இவ்வூர் பற்றியும், இவ்வூரில் திகழும் விஷ்ணு ஆலயம் பற்றியும் குறிப்பிடும் கல்வெட்டுச் சாசனம் திருவரங்கம் (ரங்கம்) ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்து நான்காம் பிராகாரத்தில் வடபுறச் சுவரில் சொர்க்க வாசலின் இடப்புறம் உள்ளது. இச்சாசனம், முதலாம் குலோத்துங்க சோழனின் 11ஆம் ஆட்சியாண்டான கி.பி. 1081ல் பொறிக்கப்பெற்றதாகும். அச்சோழப் பேரரசனின் மெய்க்கீர்த்திப் பாடலுடன் காணப்பெறும் அக்கல்வெட்டில் ராஜமகேந்திர சதுர்வேதி மங்கலத்தில் உள்ள விஷ்ணு ஆலயத்தினை திருமேற்கோயிலான ‘‘ஸ்ரீ மும்முடிச் சோழ விண்ணகரம்’’ என்று குறிப்பிடுகின்றது.
திருமேற்கோயிலான ஸ்ரீ மும்முடிச் சோழ விண்ணகரம் என்பது ஊரின் மேற்குத்திசையில் அமைந்த விஷ்ணு ஆலயமாகும். ஊரின் நடுவணோ அல்லது கீழ்திசையிலோ சிவாலயம் ஒன்று திகழ்ந்திருந்தது என்பது இதனால் அறிய முடிகிறது. முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் ஏற்பட்ட இடங்கை வலங்கை சாதியாரிடையே ஏற்பட்ட பூசல்களாலும், திருடர்கள் கோயில் பண்டாரத்திலிருந்த திரவியங்களையும், இறைத் திருமேனிகளையும் களவாடியதாலும் திருக்கோயில்களை ஊரார் புனர் நிர்மாணம் செய்தனர் என்பதை கி.பி. 1081ல் பொறிக்கப்பெற்ற திருவரங்கம் அரங்கன் கோயிலில் உள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது.
இவ்வாறு கலவரத்திற்குப் பிறகு புனர் நிர்மாணம் பெற்ற சிவாலயம் பிற்காலத்தில் மீண்டும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில், கோயில் திருமேனிகளைப்பூமியில் வைத்துப் புதைத்துப் பாதுகாக்க முனைந்துள்ளனர். அண்மையில் கம்பர்நத்தத்தில் கோயிலை ஒட்டிய இடத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட பூமியைத் தோண்டியபோது, நான்கு செப்புத் திருமேனிகள் புதையுண்டு வெளிப்பட்டன. நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டீசர், திருஞானசம்பந்தர் அல்லது மணிவாசகர் செப்புத் திருமேனிகளே அவ்வாறு வெளிப்பட்டவையாகும். நடராஜர் திருமேனியின் திருவாசியில் ஒரு பகுதி தோண்டும்போது சிதைந்துவிட்டது. இத்திருமேனிகள் அனைத்தும் கி.பி. 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் கால கலைப்பாணியில் உள்ளமையால், இவை அனைத்தும் ராஜ மகேந்திர சோழனால் கம்பர்நத்தம் சிவாலயத்திற்கென வடிக்கப்பெற்றவையாகும்.
செப்புத் திருமேனிகள் தவிர, இவ்வூரில் சிவாலயம் இருந்த இடத்தில் சிவலிங்கம், உமாபரமேஸ்வரி, இடபம், கணபதி போன்ற கல் திருமேனிகள் கிடைத்துள்ளன. படுத்த கோலத்தில் திகழும் இந்த இடபம் (நந்தி) கழுத்தில் சலங்கையுடன் ஈசனை நோக்கியவாறு திகழ்கின்றது. இத்திருவுருவம், கோயிலின் மூல நந்தியாகும். வட்ட ஆவுடையாருடன் லிங்கத் திருமேனி திகழ்கின்றது.
அதோபத்மம், ஊர்த்துவ பத்மம் ஆகிய வேலைப்பாடுகளுடன் பீடம் இரு பகுதி களாக அமைந்துள்ளது.
பீடத்தின் நடுவே சதுரம், எண்பட்டை, விருத்தம் ஆகிய வேலைப்பாடுகளுடன் லிங்கபாணம் அமைந்து திகழ்கின்றது. இத்திருமேனியும் சோழர்கால கலை அம்சத்துடன் விளங்கு கின்றது. நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் உமாதேவி காட்சி நல்குகிறார். முன்னிரு கரங்கள் அபயவரதம் காட்ட பின்னிரு கரங்களில் அக்கமாலையும், பாசமும் ஏந்திய வகையில் இத்திருமேனி வடிக்கப்பட்டுள்ளது. உமா பரமேஸ்வரியின் இத்திருமேனிதான் கம்பர்நத்தம் சிவாலயத்தின் காமகோட்டத்து நாச்சியார் திருவுருவமாகும். சோழர்கால கலைப் பாணியுடன் இத்திருமேனி விளங்குகின்றது.
இவ்வாலயத்து கணபதி திருமேனி, நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளது. இட பின்கரம் சற்று சிதைவு பெற்றுள்ளது என்றாலும், இத்திருமேனி கி.பி. 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர்கால வடிவமாகும். பின்னிரு கரங்களில் பாசம்,அங்குசம் ஏந்த முன்னிரு கரங்களில் தந்தமும், பழமும் காணப் பெறுகின்றன. இவ்வூரிலிருந்து கிடைத்துள்ள செப்புத் திருமேனிகளும், கல் திருமேனிகளும் ராஜமகேந்திர சோழன் காலத்தில் (கி.பி. 11ஆம் நூற்றாண்டு) வடிக்கப்பெற்ற எழில்மிகு கலைப்பொக்கிஷங்கள் என்பதில் ஐயமில்லை.
எனவே, விஷ்ணு ஆலயம் போன்றே சிவாலயமும் சிறப்புடன் இருந்திருக்கிறது. தற்போது பாலாலயம் போன்ற கொட்டகையில் உள்ள கல்திருமேனிகளைப் புதிய ஆலயம் எழுப்பி அங்கு பிரதிட்டை செய்ய வேண்டும். அஷ்ட பரிவாரங்களான கணபதி, முருகன், துர்க்கை, அம்பாள், சண்டீசர், பைரவர், சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்களைப் புதிய ஆலயத்தில் நிர்மாணம் செய்ய வேண்டும். இவ்வூரிலிருந்து புதையுண்டு வெளிப்பட்ட செப்புத் திருமேனிகள் தற்போது அரசின் பொறுப்பில் உள்ளன. அவற்றை மீண்டும் புதிய ஆலயத்தில் வைத்து பூசிக்க வேண்டும். புதிய ஆலயக் கட்டுமானத்திற்குப் பூமியைத் தோண்ட முற்படும்போது, மேலும் சில திருமேனிகள் கிடைக்க வாய்ப்புண்டு.
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
The post கம்பர்நத்தம் சிவாலயம் appeared first on Dinakaran.