ஹைதராபாத்: இந்திய திரையுலகில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடனத்திற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. 1978ம் ஆண்டு செப்டம்பர் 22ல் வெளியான ‘பிராணம் கரீது’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் சிரஞ்சீவி. இவர் கருப்பு வெள்ளை படக்காலத்தில் தொடங்கி இன்றளவும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது ‘விஸ்வம்பரா’ என்ற தலைப்பில் தனது 156வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி அறிமுகமான அதே தேதியில் அவருக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவி இதுவரை 24000 நடன ஸ்டெப்புகளை 537 பாடல்களில் 156 படங்களில் 45 வருடங்களுக்குள் செய்ததால் இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளனர். ஹைதராபாத்தில் நேற்று நடந்த கின்னஸ் உலக சாதனை விருது நிகழ்ச்சியில், அவரை கெளரவித்து இந்த கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை பாலிவுட் நடிகர் அமீர் கான் கொடுக்க சிரஞ்சீவி பெற்றுக் கொண்டார்.
விருதை பெற்ற சிரஞ்சீவி ” என்னுடைய சினிமா பயணத்தில் நான் கின்னஸ் சாதனையெல்லாம் செய்வேன் என எதிர்பார்த்தது இல்லை. இது தற்செயலாக அமைந்த ஒன்று. என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு, இயக்குனர்களுக்கு மற்றும் என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு நடிப்பதைவிட நடனத்தில் ஆர்வம் அதிகம். அதனால் கூட எனக்கு இந்த விருது கிடைத்திருக்கலாம்.” என கூறினார்.
அதைத் தொடர்ந்து கின்னஸ் சாதனை பெற்ற சிரஞ்சீவியை, தெலுங்கனா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்தினர். மேலும் ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
The post இந்தியாவின் படைப்பாற்றல் மிக்க நடிகா்: நடனத்திற்காக கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!! appeared first on Dinakaran.