×

நகை பறிக்க சென்றபோது சத்தம் போட்டதால் மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்தோம்: கைதான 4 பேர் வாக்குமூலம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே நகை பறிக்க சென்றபோது சத்தம்போட்டதால், மூதாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து, நகையை பறித்து சென்றோம் என்று கைதான 4 பேர், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். கல்பாக்கம் அணுமின் நிலைய ஓய்வுபெற்ற ஊழியரான கண்ணன் என்பவரின் மனைவி கன்னியம்மாள் (70). இவரது கணவர் கண்ணன் இறந்துபோனநிலையில் இவர், பொம்மராஜபுரம் கிராமத்தில் ஒரு இடம் வாங்கி, சிறிய அளவில் வீடு கட்டி கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.

மேலும், தனது வாழ்வாதாரத்திற்காக வீட்டிலேயே இட்லி கடை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 16ம்தேதி வழக்கம்போல் இட்லி கடை நடத்திவிட்டு, மதியம் வீட்டிற்குள் தூங்குவதற்காக சென்றவர், இரவாகியும் மின்விளக்கு போடாமலும், கதவை திறக்காமலும் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தபோது, கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மூதாட்டி கன்னியம்மாள் இறந்து கிடந்தார். இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், மாமல்லபுரம் டிஎஸ்பி ரவி அபிராம், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குபதிவு செய்த போலீசார், சந்தேகத்திற்குரிய 10க்கும் மேற்பட்டோரை சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், நல்லாத்தூரை சேர்ந்த சச்சின் (24), பொம்மராஜபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (19), 17வயது சிறுவன், அஜித் (18) ஆகிய 4 பேர் மூதாட்டி கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் என்று உறுதிசெய்யப்பட்டது.

போலீசாரின் தீவிர விசாரணையில், ‘மூதாட்டியை மிரட்டி நகை பணம் பறிக்கத்தான் நாங்கள் சென்றோம். எங்களை பார்த்ததும் மூதாட்டி கன்னியம்மாள் கூச்சலிட்டதால், எங்கே நாங்கள் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் மூதாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு, மூதாட்டி அணிந்திருந்த 2 சவரன் நகைகளை பறித்துகொண்டு ஓடிவிட்டோம் என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, 4 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 பேரை சிறையில் அடைத்தனர். பின்னர் சிறுவனை சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நகை பறிக்க சென்றபோது சத்தம் போட்டதால் மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்தோம்: கைதான 4 பேர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Trincomalee ,Kannan ,Kalpakkam nuclear power plant ,
× RELATED தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்பனை