மாதவரம்: கிரீன்வேஸ் சாலை நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரை அடையாறு ஆற்றின் குறுக்கே சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது, என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல் சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது.
இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன. இதில், வழித்தடம் 3ல், கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரை, அடையாறு ஆற்றின் குறுக்கே சுரங்கப்பாதை பணிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன.
ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 1228 மீட்டர் ஆகும். சுரங்கப்பாதைகள் அடையாறு ஆற்றின் கீழ் 300 மீட்டர் நீளத்திற்கு 10-13 மீட்டர் தரைமட்டத்திற்கு கீழ் அமைக்கப்பட்டு வந்தது. காவேரி மற்றும் அடையாறு என்ற 2 பூமி அழுத்த சமநிலை சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் இந்த பணியில் ஈடுபட்டன. இதில், காவேரி இயந்திரம் வெற்றிகரமாக சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு அடையாறு நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், சுரங்கத்தின் அடிப்பகுதி பாறை மற்றும் மேற்பகுதி மணல் போன்ற கலப்பு புவியியல் நிலைமைகளைக் கடந்து வந்துள்ளது.
மேலும், அடையாறு ஆற்றின் சில பகுதிகளின் கீழ் கடினமான பாறைகளின் வழியாகவும் சுரங்கப்பாதையை அமைத்தது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முகப்பில் உள்ள வெட்டும் கருவிகள் 65 முறை சீரமைக்கப்பட்டு சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளுக்கு மட்டும் 178 நாட்கள் தேவைப்பட்டது. காவேரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் சில பெட்ரோல் பங்குகள், எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி, ஆந்திர சபா மருத்துவமனை, துர்காபாய் தேஷ்முக் சாலை மற்றும் அடையாறு பாலம் கீழேயும் கடந்து சென்றது. 2வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு, தற்போது அடையாறு நிலையத்திலிருந்து 277 மீட்டர் தொலைவில் உள்ளது மற்றும் நவம்பர் 2024க்குள் அடையாறு நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், பொது மேலாளர்கள் ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி (சுரங்கப்பாதை கட்டுமானம்), ரவிச்சந்திரன் (சுரங்கப்பாதை கட்டுமானம்), லார்சன், டூப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் ஜெயராம், திட்ட இயக்குநர் அஹ்மத், பொது ஆலோசகர் நிறுவனத்தின் அணித்தலைவர் டோனி புர்செல், பொது ஆலோசகர் நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் சஞ்சீவ் மண்டல், சுரங்கப்பாதை நிபுணர் ஆலன் சார்லஸ் மே, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.
The post மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு: கடும் சவால்களை கடந்து காவேரி இயந்திரம் அசத்தல் appeared first on Dinakaran.