தர்மபுரி, செப்.21: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை கீழ்ராஜாதோப்பு பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன் மனைவி காவேரியம்மாள் (65). இவர் ஏலச்சீட்டு பணம் ₹2 லட்சத்தை வீட்டில் வைத்திருந்தார். அண்மையில் ₹1 லட்சத்தை மகன்களுக்கு பிரித்து கொடுத்தார். மீதமுள்ள ₹1 லட்சத்தை வீட்டின் பீரோவில் வைத்திருந்தார். நேற்று முன்தினம், காவேரியம்மாள் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் உங்களுக்கு ஆடு வாங்க லோன் அனுமதி கிடைத்துள்ளது. அதற்கான உரிய ஆவணங்களுடன், முக்கல்நாயக்கன்பட்டியில் உள்ள விஏஓ அலுவலகத்திற்கு வருமாறு கூறினர். இதையடுத்து அவர் விஏஓ அலுவலகத்திற்கு சென்று கேட்டார். ஆனால் அப்படி யாருக்கும் லோன் அனுமதி வரவில்லை என தெரிவித்தனர்.
பின்னர், காவேரியம்மாள் வீட்டுக்கு திரும்பி வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ₹1 லட்சத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், பணத்தை திருடியது அதே பகுதியை சேர்ந்த மாது மகன் தங்கம்(24) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, திருடிய பணத்தை பறிமுதல் செய்தனர்.
The post வீட்டின் பூட்டை உடைத்து ₹1 லட்சம் திருடியவர் கைது appeared first on Dinakaran.