சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் பேசும் தனிப்பட்ட நபர்கள், பத்திரிகையாளர்கள், யூடியூபர்கள் ஆகியோர் அரசின் குற்றங்களை வெளிக்கொண்டு வருகிறார்கள். இதனால், அவர்கள் அடக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இது போன்ற நபர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு தனி அமர்வை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனி அமர்வை அமைப்பதற்கு தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. யூடியூபர் சங்கர், பெலிஸ் ஜெரால்ட் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றை விரைந்து விசாரித்து முடிக்க தனி அமர்வை அமைக்க வேண்டும் என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், சிறப்பு அமர்வை அமைப்பதற்கான அதிகாரம் தலைமை நிதிபதிக்கு உள்ளது. எந்தெந்த வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு அமைக்க வேண்டும் என்பது அரசியலைப்பில் தலைமை நீதிபதிக்கு தரப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. பொதுநலன் கருதியதா என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில்தான் தலைமை நீதிபதி முடிவு செய்வார். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் கூறுவது போல் எண்ணிலடங்காத வழக்குகள் நிலுவையில் இல்லை. அதற்கான ஆதாரங்களையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை.
பொதுநல வழக்கு என்பது முக்கியமான ஆயுதம் என்பதும் சமூக நீதியை மேம்படுத்தும் கருவி என்பதும் சட்டத்தில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் எந்த ஆதாரங்களும் இல்லாமல் பொதுநல வழக்கு தொடர்வது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகும். மனுதாரர் கூறுவதைபோல் யூடியூபர் சங்கரும், ரெட்பிக்ஸ் மீடியா எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டும் அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள உரிமை குறித்து அறியாதவர்கள் இல்லை. இதுபோன்ற நபர்கள் சிறப்பு அமர்வு கோரி உச்ச நீதிமன்றத்தை கூட அணுகுவார்கள். மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு மற்றும் கோரும் நிவாரணம் என்பதை ஏற்க முடியாது. மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு ெதளிவில்லாத குற்றச்சாட்டாகும். அதற்கான ஆதாரங்களும் தரப்படவில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
The post யூடியூபர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க முடியாது: பொதுநல வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.