×
Saravana Stores

அனுமனின் வாலுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வழிபடுவதேன்?

?ஒருவருடைய பெயர் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருமா?
– டி.நரசிம்மராஜ், மதுரை.

உண்மையான உழைப்பு ஒன்றே அதிர்ஷ்டத்தை உடன் அழைத்து வரும். பெயர் என்பது அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நினைப்பதைவிட அந்தப் பெயரை உச்சரிக்கும்போது மனதில் நேர்மறையான ஆற்றல் உண்டாகுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். பெயரை வைக்கும்போதே அதற்கான பொருள் என்ன என்பதை உணர்ந்து குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும். வலைத்தளங்களில் தேடி பொருளற்ற பெயர் அல்லது எதிர்மறையான பொருள் தரக்கூடிய பெயரை வைப்பதைவிட, நற்றமிழ் பெயராக அழகாக பொருள் புரியும்படியான பெயராக வைப்பதாலும் இறைவனின் திருநாமங்களைப் பெயராக வைப்பதாலும் மட்டுமே நற்பலனை அடைய முடியும்.

?அனுமனின் வாலுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வழிபடுவதேன்?
– அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

இது அவரவர்கள் நம்பிக்கை. இதற்கு சாஸ்திர ரீதியாக ஆதாரம் ஏதுமில்லை. பொதுவாக அனுமனை வழிபடுவதன் மூலம் மனச்சஞ்சலம் நீங்கி தன்னம்பிக்கை என்பது கூடும். தடுமாற்றமில்லாத சிந்தனைத் திறன் என்பது கூடுவதால் செய்யும் செயல்களில், காரிய ஜெயம் என்பது கிட்டும். அனுமனை வழிபடுவதன் மூலமாக தன்முயற்சியில் உண்டாகும் தடைகளைத் தகர்த்து வெற்றி காண இயலும் என்பதே உங்கள் கேள்விக்கான பதில்.

?குலதெய்வப்படத்தை கடையில் வைத்து வழிபடலாமா?
– வீரட்டலிங்கம், காஞ்சிபுரம்.

உங்களுக்குச் சொந்தமான கடையில் உங்களுடைய குலதெய்வத்தின் படத்தை வைத்து தாராளமாக வழிபடலாம். குலதெய்வம் என்பது நம்முடனேயே பயணிக்கக்கூடிய நம்முடைய மெய்க்காப்பாளர் போல என்று புரிந்துகொள்ள வேண்டும். எல்லா நேரத்திலும் எல்லா சூழலிலும் நம்மைக் காப்பது குலதெய்வத்தின் அருளே ஆகும்.

?ரிஷபராசி, கார்த்திகை நட்சத்திரம் உள்ளவருக்கு சனி தசையில் சுக்ரபுக்தி வந்தால் என்ன பலன் கிடைக்கும்?
– பா.வெற்றிவேல், புதுக்கோட்டை.

அது உங்கள் ஜாதக அமைப்பினைப் பொறுத்தது. இப்படி பொத்தாம் பொதுவாக வெறும் நட்சத்திரம் மற்றும் ராசியினை வைத்துக்கொண்டு பலன் சொல்வது என்பது முற்றிலும் தவறு. சனி தசையில் சுக்ரபுக்தி நடக்கிறது என்றால், சனியும் சுக்ரனும் லக்னத்தில் இருந்து எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறார்கள், எந்த கிரஹத்தினுடைய சாரம் பெற்றிருக்கிறார்கள், சாரத்தைத் தரும் கிரஹம் எந்த இடத்தில் அமர்ந்துள்ளது என்று பலன் சொல்வதற்கு நிறைய கணக்கீடுகள் என்பது உண்டு. உங்கள் குடும்ப ஜோதிடரிடம் காண்பித்து பலனைத் தெரிந்துகொள்வது நல்லது. சனி தசையில் சுக்ரபுக்தி என்று ஏதோ வாயில் வந்ததைச் சொல்வது உண்மையான ஜோதிடம் அல்ல. முறையாக கணக்கிட்டு பலனைச் சொல்வதே சரியானதாக இருக்கும்.

?தினசரி பகலில் சூரிய நமஸ்காரம் செய்வதைப் போல, இரவில் சந்திர நமஸ்காரம் செய்யலாமா?
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை துவிதியை திதி நாளன்று பஞ்சாங்கத்திலேயே சந்திரதரிசனம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அந்த நாளில் கண்டிப்பாக சந்திரதரிசனம் செய்ய வேண்டும். அதே போல, சங்கடஹரசதுர்த்தி நாளிலும் வளர்பிறை பிரதோஷ நாட்களிலும், பௌர்ணமி நாட்களிலும் சந்திரதரிசனம் செய்வதால் அளப்பரிய நன்மை உண்டாகும்.

?எங்கள் குடும்பத்தில் இதுவரை முன்னோர்களுக்கு அமாவாசை திதி கொடுத்ததே இல்லை. இரண்டு மூன்று தலைமுறைகளாக நாங்கள் இன்னும் துன்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களைக் கேட்டால், திதி கொடுக்கும் வழக்கம் இல்லை என்று சொல்கிறார்கள். அதனால் புதிதாக நாங்கள் திதி கொடுக்க ஆரம்பிக்கலாமா? அதனால் கெடுதல் வருமா?
– ரா.ராமநாதன், சேலம்.

நிச்சயமாக கெடுதல் வராது. மாறாக துன்பம் என்பது மறைந்து இன்பம் என்பது வந்து சேரும். குடும்பத்தில் வழக்கமில்லை என்று சொல்வது தற்போது சகஜம் ஆகிவிட்டது. மூன்று தலைமுறைக்கு முன்னால் குடும்பத்தில் பேண்ட் – சட்டை அணிவது என்பது வழக்கத்தில் இருந்ததா?, நைட்டி, சுடிதார், ஜீன்ஸ் பேண்ட் போன்றவற்றை அணிவது வழக்கத்தில் இருந்ததா?, சினிமா – டிவி பார்ப்பது, மிக்ஸி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், கேஸ் ஸ்டவ் உபயோகிப்பது எல்லாம் வழக்கத்தில் இருந்ததா? என்று யோசித்துப் பாருங்கள். எது நமக்கு நன்மையையும், மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகிறதோ, அதனை பழக்கத்தில் கொண்டுவருகிறோம்தானே, அது போல், முன்னோர் வழிபாடு என்பதும் நமக்கு நன்மையைத் தரும் என்று சாஸ்திரம் வலியுறுத்திச் சொல்வதால், அதனைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். குடும்பத்தில் வழக்கத்தில் இல்லை என்று சொல்வதெல்லாம் ஏதோ ஒரு சாக்குதானே தவிர வேறொன்றும் இல்லை. எந்தவிதமான சந்தேகமும் சஞ்சலமும் இன்றி முழுமையான ஈடுபாட்டுடன் முன்னோர் வழிபாட்டினை மேற்கொள்ளுங்கள். சர்வ நிச்சயமாக அதற்குரிய பலனை அனுபவ பூர்வமாக காண்பீர்கள்.

?சிலர் காக்கைக்கு பழைய சோற்றினை வைக்கிறார்களே, இது நல்லதா?
– வண்ணை கணேசன், சென்னை.

இல்லை. காக்கைக்கு பழைய சோற்றினை வைப்பதை சாஸ்திரம் ஏற்றுக்கொள்ளவில்லை. நாம் சாப்பிடுவதற்கு முன்பாக காக்கைக்கு சோறுவைத்துவிட வேண்டும். அதன்பின்புதான் நாம் சாப்பிட வேண்டும். அதுதான் முழுமையான பலனைத் தரும்.

?மாதர்கள் வழிபாட்டில் திருவிளக்கு பூஜை உள்ளதைப் போல ஆண்களுக்கு என்ன பூஜை உள்ளது?
– ஆர்.உமா காயத்ரி, நெல்லை.

பெண்கள் செய்யும் அனைத்து பூஜைகளுக்கும் பக்கபலமாக துணைநிற்பதே ஆண்களின் கடமை ஆகும். இதுபோக ஆலயங்களில் நடக்கும் அனைத்து உற்சவங்களிலும் ஆண்கள் பங்கேற்று தங்களுடைய உடல் உழைப்பினை நல்க வேண்டும். ஆவணி மாதம் அமாவாசையைத் தொடர்ந்து 14வது நாள் ஆகிய சதுர்த்தசி திதி அன்று வரக்கூடிய அனந்த விரதம் என்கிற நோன்பு ஆண்களுக்கான பிரத்யேகமான விரத பூஜை ஆகும். இழந்த சொத்துக்களை மீட்க வேண்டி, தொடர்ந்து 14 ஆண்டுகள் செய்ய வேண்டிய பூஜை என்பது இந்த அனந்தவிரத நோன்பின் சிறப்பம்சம் ஆகும்.

The post அனுமனின் வாலுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வழிபடுவதேன்? appeared first on Dinakaran.

Tags : Hanuman ,D. Narasimharaj ,Madurai ,
× RELATED மாடியில் இருந்து தவறி விழுந்து பள்ளி...