ஒடிசா: ஒடிசாவில் சுபத்ரா யோஜனா திட்டத்தில் வரவு வைக்கப்பட்ட பணத்தை எடுக்க ஏடிஎம் மையங்கள் முன்பு ஒரே நேரத்தில் குவிந்த பெண்களால் நெரிசல் ஏற்பட்டது. ஒடிசாவில் சட்டப்பேரவை தேர்தலின் போது பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் பாஜக அரசு சுபத்ரா யோஜனா என பெயரிடப்பட்ட திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தில் நடப்பாண்டிற்கான முதல் தவணை தொகையான ரூ.5000 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
இந்த பணத்தை எடுப்பதற்காக ஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையங்களிலும், வங்கி கிளைகளிலும் பெண்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக பலியாப்பால் என்ற இடத்தில் மாடி மீது இருந்த இந்தியன் வங்கி கிளையில் பணம் எடுக்க படிக்கட்டுகளில் ஒரே நேரத்தில் ஏராளமான பெண்கள் ஆபத்தான நிலையில் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜாப்பூரை போன்று பல மாவட்டங்களில் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முன்பு பெண்கள் உட்பட ஏராளமானோர் திரண்டனர். சுபத்ரா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் பலரிடம் டெபிட் கார்ட் இல்லாததால் பணத்தை எடுக்க வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
The post ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கும் சுபத்ரா யோஜனா திட்டம்: முதல் தவணை பணத்தை எடுக்க வங்கி, ஏடிஎம் மையங்களில் திரண்ட பெண்கள் appeared first on Dinakaran.