சியோல்: வடகொரியா நடத்திய இரண்டு ஏவுகணை சோதனைகளை அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வை செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியா அண்டை நாடுகள் எதிர்ப்பை மீறியும் உலக நாடுகளின் கட்டுப்பாடுகளை மீறியும் அவ்வப்போது தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. எனினும் தடைகளுக்கு கட்டுப்பட மறுத்து வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரண்டு ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் ஏவுகணை சோதனைகளை மேற்பார்வையிட்டுள்ளார். குறுகிய தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை சோதனை செய்ததாக அண்டை நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடனான மோதல் வலுத்து வரும் நிலையில் தனது ஆயுத பலத்தை வடகொரியா விரிவுபடுத்துவதாக கூறப்படுகின்றது. அதிபர் கிம் ஜாங் உன், அணுசக்தியை வலுப்படுத்துவது மற்றும் வழக்கமான ஆயுதங்கள் துறையில் மிகப்பெரிய தாக்குதல் திறனை பெறுவது அவசியமாகும் என்று ராணுவத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் ராணுவ பலம் இருந்தால் மட்டுமே எதிரிகளின் படையெடுப்பை முறியடிக்க முடியும் என்றும் கிம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post வடகொரியாவில் அதிபர் கிம் மேற்பார்வையில் 2 ஏவுகணை சோதனை appeared first on Dinakaran.