×
Saravana Stores

பெண் தாசில்தாருக்கு மிரட்டல்; நெல்லை பெண் போலி ஐஏஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு: பாஜ பிரமுகரும் கைது


நெல்லை: தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று நெல்லை தாழையூத்தைச் சேர்ந்த மங்கையர்க்கரசி(44) என்ற பெண் புகார் மனு கொடுக்க வந்தார். அவர் புதுக்கோட்டையை சேர்ந்த ஆல்வின் ஜெபஸ்டின் என்பவர் தனக்கு வேண்டிய ரூபி நாத்துக்கு(42) ரூ.6 லட்சம் தர வேண்டும் எனவும், நீண்ட நாட்களாக தராமல் இழுத்தடிப்பதால் வாங்கித் தர வேண்டும் என்று புகார் கொடுத்தார். மேலும் மங்கையர்க்கரசி தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக் கொண்டு, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்வித்துறையில் உதவிச் செயலாராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.

எனவே உடனடியாக பணத்தை மீட்டு தர வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து எஸ்பி அலுவலகத்தில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ சுசீலா எஸ்பியிடம் கூறியுள்ளார். இதையடுத்து மங்கையர்கரசியை அழைத்து அவரது அடையாள அட்டையை காட்டுமாறு எஸ்பி ஆல்பர்ட் ஜான் கூறினார். அவரிடம் அடையாள அட்டை இல்லாததால் சந்தேகமடைந்த எஸ்பி அவரிடம் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினார். அதற்கு மங்கையர்கரசி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். மங்கையர்க்கரசியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த எஸ்பி ஆல்பர்ட் ஜான் அவருடன் சென்ற ரூபிநாத் குறித்து கேள்விகள் கேட்டார்.

அப்போது அவர் நெல்லை மாவட்ட பாஜக இலக்கிய அணி தலைவராக உள்ளார் என்று கூறி அவருடன் எடுத்துக் கொண்ட செல்பி படத்தை காட்டினார். தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் மங்கையர்க்கரசி போலி ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி போலீசாரை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில் அரசு அதிகாரி வேடமிட்டு ஏமாற்றுதல் என 204, 217 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி சிப்காட் எஸ்ஐ தரன்யா வழக்குப் பதிவு செய்து மங்கையர்க்கரசியை கைது செய்தார். அவருடன் வந்த பாஜ பிரமுகர் ரூபிநாத்தும் கைது செய்யப்பட்டார். அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மங்கையர்கரசி கொக்கிரகுளம் பெண்கள் கிளைச் சிறையிலும், பாஜ பிரமுகர் ரூபிநாத் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி பேரூரணி சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் போலி ஐஏஎஸ் அதிகாரி நெல்லையிலும் மிரட்டல் விடுத்த சம்பவம் தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜ பிரமுகர் ரூபிநாத் துப்பாக்கி உரிமம் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பம் குறித்து விசாரணை நடத்த நெல்லை தாசில்தார் ஜெயலெட்சுமிக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து விஏஓ, நாரணம்மாள்புரம் விஏஓ பொன்னுமுத்து மற்றும் போலீசார் உதவியுடன் தாசில்தார் ஜெயலெட்சுமி அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது மங்கையர்க்கரசி, தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும், தன்னை விசாரணை நடத்த எப்படி வரலாம் எனவும், உடனடியாக பாஜ பிரமுகர் ரூபிநாத்துக்கு துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் எனக் கேட்டு தாசில்தாரை மிரட்டினாராம். அப்போது தான் மங்கையர்க்கரசி போலி ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தாழையூத்து போலீசில் நெல்லை தாசில்தார் ஜெயலெட்சுமி புகார் செய்தார். தாழையூத்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் தாசில்தாருக்கு மிரட்டல்; நெல்லை பெண் போலி ஐஏஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு: பாஜ பிரமுகரும் கைது appeared first on Dinakaran.

Tags : IAS ,Baja ,Nella ,Mangaikarasi ,Thalaiyut ,Tuthukudi SP ,Alvin Jebustin ,New Castle ,Ruby Nath ,
× RELATED திருக்குறுங்குடியில் யானை...