×

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவின் அறிக்கைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, புதிய அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் முதல் பொதுத் தேர்தல் கடந்த 1952ம் ஆண்டு நடத்தப்பட்டது. அது முதல் 1967 வரை மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர், ஆட்சிக் கவிழ்ப்பு உள்ளிட்ட காரணங்களால் சில மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது. தற்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்படுகின்றன. இதனால், அரசுக்கு அதிக செலவாகிறது. தேர்தல் பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்களின் நேரமும் விரயமாகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதால், வளர்ச்சித் திட்ட பணிகளிலும் இடையூறு ஏற்படுவதாக பாஜ கூறி வருகிறது.

18,626 பக்க அறிக்கை

எனவே மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு கடந்த 2014ம் ஆண்டிலிருந்தே வலியுறுத்தி வருகிறது. இது பாஜவின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. இதற்காக, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி உயர்மட்டகுழு அமைக்கப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அடங்கிய இக்குழு, தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆலோசனைகளை பெற்றது. 191 நாட்கள் இதற்கான பணிகளை மேற்கொண்ட குழு, அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கடந்த மார்ச்சில் சமர்ப்பித்தது.

அமைச்சரவை ஒப்புதல்

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு அளித்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஒன்றியத்தில் 3வது முறையாக பாஜ கூட்டணி அரசு பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ள நிலையில், நடப்பு ஆட்சிக் காலத்திலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், உயர்மட்ட குழுவின் அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்தது என்ன?

இது குறித்து, கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கை அமைச்சரவை முன்பாக தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற குழு அமைக்கப்படும். அதைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தளங்களில் விரிவான ஆலோசனைகள் நடத்தப்படும். ஆலோசனைகள் முடிந்த பின், நடைமுறைப்படுத்துதல் நடவடிக்கைகள் பின்பற்றப்படும். மசோதா உருவாக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதலுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த விவகாரத்தில் சட்ட அமைச்சகமும் தனியாக அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளது. அதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றுவார்’’ என்றார்.

மசோதா எப்போது?

இந்த பரிந்துரைகளை எப்போது அமல்படுத்தலாம், வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வரப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் வைஷ்ணவ் நேரடியாக பதில் சொல்லாமல் தவிர்த்தார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது போல, நடப்பு ஆட்சியின் பதவிக்காலத்தில், அதாவது 2029க்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்படும் என்பதை சுட்டிக் காட்டினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எதிர்க்கும் கட்சிகளின் நிலைப்பாடு மாறும்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது குறித்து ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பரவலான ஆதரவு இருக்கிறது. ஏற்கனவே பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, இப்போது எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள், பலதரப்பு ஆதரவுகளால், அவர்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள அழுத்தம் ஏற்படும். இந்த விஷயத்தில் அடுத்த சில மாதங்களில் ஒருமித்த கருத்தை உருவாக்குவது அரசின் முயற்சியாக இருக்கும்’’ என்றார்.

நடைமுறை சாத்தியமில்லை

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமில்லாத செயல். தேர்தல் நெருங்கும் போது உண்மையான பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே பாஜ கட்சி இதுபோன்ற விஷயங்களைக் கொண்டு வருகிறது’’ என குற்றம்சாட்டினார்.

ஜனநாயகத்தை துடிப்பானதாக்கும்

பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்த முயற்சியை முன்னெடுத்துச் சென்றதற்காகவும், பலதரப்பினரிடம் ஆலோசனை நடத்தியதற்காகவும் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது, இந்தியாவின் ஜனநாயகத்தை இன்னும் துடிப்பாகவும், பங்களிப்புடனும் மாற்றுவதற்கான ஒரு முக்கிய படியாகும்’’ என்றார்.

100 நாளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது 2 கட்டமாக நடத்தப்படும். முதல் கட்டமாக மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும். 2ம் கட்டமாக நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இவை இரண்டும் 100 நாளில் முடிக்கப்படும். தற்போது மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களை தேர்தல் ஆணையமும், உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் கமிஷன்களும் நடத்துகின்றன.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : One Country One Election Union Cabinet ,New Delhi ,Union Cabinet ,High Level Committee ,President ,Ram Nath Kovind ,Dinakaran ,
× RELATED எதிர்க்கட்சிகளின் கடும்...