×

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்கா குடியிருப்பு வளாகத்தில் பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் TNIHPL – T.P Solar Ltd இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (செப்டம்பர் 19) தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 870 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள குடியிருப்பு வளாகத்தில் டிபி. சோலார் (T.P Solar Ltd.) நிறுவன தொழிற்சாலையில் பணிபுரியும் 500 பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் (TNIHPL) மற்றும் டாடா பவர் சோலார் லிமிடெட் (T.P Solar Ltd.) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “சிப்காட் நிறுவனமானது, 2022-ம் ஆண்டில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் (TNIFMC) மற்றும் டைடல் நிறுவனத்துடன் (TIDEL) இணைந்து தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் (TNIHPL) என்ற சிறப்பு நோக்க முகமையை தமிழ்நாட்டில் உள்ள தொழில் துறை தொழிலாளர் நலனுக்காக உருவாக்கப்பட்டது.

தற்போது, இச்சிறப்பு நோக்க முகமை, சிறுசேரி (807 படுக்கை வசதிகள்), கங்கைக்கொண்டான் (870 படுக்கை வசதிகள்), சூளகிரி (1495 படுக்கை வசதிகள்), இருங்காட்டுக்கோட்டை (801 படுக்கை வசதிகள்) மற்றும் செய்யாறு (441 படுக்கை வசதிகள்) ஆகிய ஐந்து சிப்காட் தொழிற் பூங்காக்களில் குடியிருப்பு வளாகங்களை ரூ.204.50 கோடி திட்ட மதிப்பீட்டில் மொத்தம் 4,414 படுக்கை வசதிகளுடன் அமைத்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் 2023-2024-ன் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் திருநெல்வேலி மாவட்டம், கங்கைக்கொண்டானில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் பணிபரியும் 1,500 பெண் பணியாளர்கள் தங்குவதற்கு ஏதுவாக ரூ.50.00 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு வளாகம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் குடியிருப்பு வளாகம் ஒன்றினை சுமார் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் 870 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வளாகமானது சுமார் 1.20 இலட்சம் சதுர அடி பரப்பில் தரைதளம் மற்றும் மூன்று அடுக்கு கட்டடமாக ஆறு ஏக்கர் நிலப் பரப்பில் அமைக்கப்படவுள்ளது. இங்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான, உட்புற சாலை, குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம், தெரு விளக்குகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும். மேலும், இங்கு, சமையலறை மற்றும் சாப்பாட்டு வசதிகள், வெளிப்புற விளையாட்டு பகுதி, தொழிலாளர்கள் அறை, ஒவ்வொரு தளத்திலும் பொழுதுபோக்கு அரங்குகள், சலவை அறைகள், உலர்த்தும் பகுதி, மருத்துவ அறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்படும்.

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற் பூங்காவில் அமைந்துள்ள திருவாளர்கள் டிபி. சோலார் (TPSL) நிறுவனம் 313.53 ஏக்கர் நிலப்பரப்பில் சோலார் PV செல் மற்றும் மாட்யூல் உற்பத்தி வசதியை ரூ.4,300 கோடி முதலீட்டில், 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது. அப்பணியாளர்களில், 80 சதவீதம் பெண் பணியாளர்கள் ஆவர்.

திருவாளர்கள் டிபி. சோலார் (TPSL) நிறுவன தொழிற்சாலையில் பணிபுரியும் 500 பெண் பணியாளர்கள், பயன்பெறும் வகையில் சிப்காட் நிறுவனத்தின் சிறப்பு நோக்க முகமையான தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் (TNIHPL) உடன் இணைந்து, சிப்காட் கங்கைக்கொண்டான் தொழிற் பூங்காவில் அமைய உள்ள குடியிருப்பு வளாகத்தில் தங்குவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தொழில்துறை முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர். டி.ஆர்.பி. ராஜா அவர்கள் முன்னிலையில் இன்று (19.09.2024) மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்கா குடியிருப்பு வளாகத்தில் பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் TNIHPL – T.P Solar Ltd இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : TNIHPL ,T.P Solar Ltd ,Gangaikondan Shipkot Industripunga Residential Complex ,Chennai ,Minister ,Industry Investment Promotion ,Trade Department ,T. R. B. DP ,Gangaikondan Chipkot Industripunga, ,Tirunelveli District ,Raja. Solar ( ,T.P ,Gangaikondan Shipkot Industrial Complex ,Dinakaran ,
× RELATED பேருந்து நிறுத்த நிழற்குடைகளை...