நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாளசாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட தெருக்கள், சாலைகள் சீரமைக்கப்பட்டாலும், குடிநீர் குழாய் பழுது காரணமாக தோண்டப்பட்ட பள்ளங்கள் ஒரு சில இடங்களில் முறையாக மூடப்படாமல் பள்ளங்களுடன் காணப்படுகின்றன. இந்த பள்ளங்களில் சிக்கி இருசக்கர வாகனங்கள், கார்களில் செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாகர்கோவில் 23வது வார்டான ராமன்பிள்ளை தெருவிலும், இதுபோல் சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை முறையாக மூடப்படாமல் உள்ளது. வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த பள்ளம் பெரிய பள்ளமாக மாறிவிடும் பாதிப்பு உள்ளது. இந்த பள்ளம் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் கார்களில் செல்லும் வயதானவர்கள் மிகவும் உடல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல் இந்த தெருவில் வடக்கு பகுதியில்கடைக்கோடியிலிரந்து கே.பி சாலையில் வந்து சேரும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த வடிகால் இருந்த இடம் தெரியாத அளவிற்கு தூர்ந்து போய் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தெருவில் 3 திருமண மண்டபங்கள் உள்ளதால், இங்கு நடைபெறும் திருமண மற்றும் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். எனவே இந்த சாலையில் உள்ள பள்ளங்களை மூடி சரிசெய்வதுடன், மழைநீர் வடிகாலையும் தூர்வாரி சீரமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.