சிறப்பு செய்தி
நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதேபோல் உலகளவில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தவகையில் உலக சுகாதார அமைப்பானது (டபிள்யூ.ஹெச்.ஓ) செப்டம்பர் 17ம்தேதி (நேற்று) ‘உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம்’ அனுசரித்து வருகிறது. நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சுகாதாரத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்ைககளை ஊக்குவிக்க வேண்டும். பாதுகாப்பான சுகாதார நடைமுறைகளுக்கு பங்குதாரர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது இந்த நாளின் பிரதான நோக்கமாக உள்ளது.
நடப்பாண்டு (2024) ‘நோயாளிகளின் பாதுகாப்பிற்கான நோய் அறிதலை மேம்படுத்துதல்’ என்ற பொருளில் இத்தினம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து உலகளவில் நோயாளிகளின் பல்வேறு நிலை குறித்த தகவல்களை மருத்துவ மேம்பாட்டு அமைப்புகள் வெளியிட்டன. குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நோயாளிகள் பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. இதுபோன்ற நாடுகளில் ஆண்டு தோறும் நோயாளிகளுக்கு எதிரான பாதகங்கள் 134 மில்லியன் என்ற அளவில் நிகழ்ந்து வருகிறது. இதற்கு காரணம் நோய் அறிதல் குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான். எனவே இதை உணர்த்தும் வகையில் நடப்பாண்டு உலகளாவிய நோயாளிகள் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது என்பது மருத்துவ நிபுணர்களின் கூற்று.
இது குறித்து சமூகநலன் சார்ந்த மருத்துவ மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: இயந்திரமயமாகி விட்ட இன்றயை வாழ்க்கை சூழலில் பல்வேறு விதமான நோய்கள், மனிதர்களை எளிதாக தொற்றிக் கொள்கிறது. இதில் பல நோய்கள் எப்படி உருவாகிறது என்ற ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் கோடிக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திரண்டு வருகின்றனர். இப்படி வருவோருக்கு முதலில் எப்படிப்பட்ட பாதிப்பு வந்துள்ளது என்பதை மருத்துவர் தெளிவாக கண்டு பிடிக்க வேண்டும்.
பிறகு எதனால் இந்த பாதிப்பு வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளவேண்டும். இந்த இரண்டையும் துல்லியமாக கண்டு பிடித்துவிட்டாலே, ஒரு நோயாளி 50 சதவீதம் குணமடைந்து விட்டார் என்று அர்த்தம். பின்னர் அதற்குரிய மருந்து என்ன? அதையும் தாண்டிய சிகிச்சைகள் என்ன? என்பதை முடிவு செய்து சிகிச்சை அளித்தால் நோயை முற்றிலும் குணப்படுத்தி விடலாம். இதைத்தான் நோயாளிகளுக்கான சிறந்த பாதுகாப்பு என்று உலக சுகாதார அமைப்பு விளக்கி வருகிறது. பத்து நோயாளிகளில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது பாதிக்கப்படுகிறார். பாதுகாப்பற்ற கவனிப்பு காரணமாக ஏற்படும் பாதகமான நிகழ்வுகள், உலகம் முழுவதும் இறப்பு மற்றும் இயலாமைக்கான முக்கிய 10 காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. 10நோயாளிகளில் 4பேர், வெளிநேயாளிகளின் சுகாதார பராமரிப்பால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
மருத்துவப்பிழை, மருந்துப்பிழை, மருந்தகப்பிழை, மருத்துவ உபகரண செயல்இழப்பு என்று பல்வேறு நிகழ்வுகளில் ஏற்படும் தோல்வி, நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக மாற்றுகிறது. இவை அனைத்திற்கும் மேலாக, சில நேரங்களில் தனிமனித செயல்பாடுகளும் நோயாளிகளின் பாதுகாப்பான சிகிச்சைக்கு முட்டுக்கட்டையாகி விடுகிறது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். அரசுகளும் இதற்குரிய ஏற்பாடுகளை துரிதகதயில் செய்து தரவேண்டும். இது நோயாளிகள் மட்டுமன்றி சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பாக அமையும். இவ்வாறு தெரிவித்தனர்.
‘‘நோயாளியின் பாதுகாப்பு என்பது சுகாதார பாதுகாப்பின் அடிப்படை கொள்கைளில் ஒன்றாகும். ஆனாலும் இது உலகளாவிய சவாலாக உருவெடுத்துள்ளது. தற்போதைய சூழலில் சுகாதார அமைப்புகளில் பல்வேறு முன்னேற்றங்கள் வந்துவிட்டன. ஆனாலும் கடந்த 15 ஆண்டுகளாக நோயாளிகளின் தீங்கை குறைப்பதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக நோயாளியின் பாதுகாப்பை மையமாக வைத்து மருத்துவமனைகளின் முதலீடு என்பது தற்போது பெரும் இலக்காக உள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுவும் நோயாளிகளின் பாதுகாப்பு என்ற இலக்கை எட்ட முடியாமல் செய்வதற்கு ஒரு முக்கிய காரணம்,’’ என்பது மருத்துவம் சார்ந்த சமூக மேம்பாட்டு ஆர்வலர்களின் ஆதங்கம்.
மருந்தை உடல் ஏற்பது முக்கியம்
ஆரோக்கியத்தை பேணுவதில் மருந்தியல் சிகிச்சை முறை, முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் அறிகுறிகளை குணப்படுத்தவும், முன்னேற்றம் அல்லது எதிர்கால வளர்ச்சியை தவிர்க்கவும் மருந்துகளையே பெருமளவில் நம்பியுள்ளனர். இந்த மருந்துகள் தான் நமது உடல்நலனை காப்பதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதேநேரத்தில் இந்த மருந்துகள் என்பது பாதகமான அல்லது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் அபாயத்தையும் கொண்டுள்ளது. 5முதல் 7சதவீதம் பேர் பாதிக்கப்படுவதற்கு மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகளும் காரணமாகிறது. எனவே சிறந்த மருந்தாக இருந்தாலும் அதனை நோயாளியின் உடல் ஏற்றுக் கொள்கிறதா? என்பதை கண்டறிந்து வழங்குவதும் மிகவும் முக்கியமானது என்கின்றனர் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்கள்.
The post மருத்துவ பிழை, மருந்து பிழை, மருந்தக பிழை, மருத்துவ உபகரண செயல்இழப்புகளால் நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் தவறுகள்: விழிப்புணர்வு நாளில் ஆதங்கம் appeared first on Dinakaran.