×

இந்தியாவிலே சிறப்பு வாய்ந்த விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டை மேம்படுத்தப்படுமா? ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளை களிமண் அதிகளவில் கிடைக்கிறது. இதனை கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 1965ம் ஆண்டு விருத்தாசலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் அரசு பீங்கான் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இந்த பீங்கான் தொழிற்பேட்டையில் டீ கப், வாட்டர் பில்டர், எலக்ட்ரிக் ஹீட்டர், சாமி சிலைகள், தலைவர்கள் சிலைகள், பறவைகள், செடிகள், மரங்கள், பூக்கள், இயற்கை காட்சி பொருட்கள், வாஷ்பேசின், அகல் விளக்குகள், சானிட்டரி பொருட்கள் மற்றும் மின்சாரத்துறைக்கு தேவையான பியூஸ்கேரியர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பீங்கானால் ஆன பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதில் 44 ஏக்கரில் தமிழ்நாடு அரசு பீங்கான் உற்பத்தி நிறுவன நிர்வாகத்தின்கீழ் கற்குழாய் தொழிற்சாலை, பீங்கான் கலைப் பொருட்கள் உற்பத்தி கூடம், செராமிக் மூலப் பொருட்கள் விற்பனை நிலையம், பீங்கான் பொருட்களை சூடேற்றும் கில்லன் உள்ளிட்ட பிரிவுகளும், 56 ஏக்கரில் 61 செராமிக் தொழிற்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாகவும் பீங்கான் பொருட்களை தயாரித்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இங்கு செய்யப்படும் அனைத்து பீங்கான் பொருட்களையும் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி சென்று விற்பனை செய்கின்றனர். இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தியாவில் குஜராத், பீகார், தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே இந்த பீங்கான் தொழிற்பேட்டை இயங்கி வருகிறது.

தமிழகத்தில் பீங்கான் தொழில் விருத்தாசலத்தில் மட்டுமே உள்ளது இப்பகுதியின் சிறப்பு அம்சம். அதுபோல் பீங்கான் தொழில் குறித்த கல்லூரியும் இங்குதான் செயல்பட்டு வருகிறது. ஆனால், படிப்பை முடித்ததும் அந்த தொழில் செய்வதற்கான எந்த வசதியும் இங்கு இல்லாததால் வெளி மாநிலங்களை தேடி இளைஞர்கள் சென்று விடுகின்றனர். பழைய மிஷின்கள் மூலம் தொழில் நடந்து வரும் நிலையில் புதிய மிஷின்கள் கொண்டு வர வேண்டுமென இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தொழிலில் எந்தவித நஷ்டமும் ஏற்படாது. ஏனென்றால் மண்ணால் செய்யப்பட்ட இந்த பொருள் உடைந்த பின்பு, அதை மீண்டும் பொருளாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதால், அவற்றுக்கு தேவையான மெட்டீரியலை அரசு கொடுத்து வந்த நிலையில் கடந்த 2000 ஆண்டில் இருந்து சப்ளையை நிறுத்திவிட்டது. இதனால் பண்ருட்டி, நெய்வேலி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொழில் செய்பவர்களே சென்று வாங்கி வரும் நிலை உள்ளது.

இதனை அரசாங்கம் தலையிட்டு சரியான மூலப் பொருட்கள் (மெட்டீரியல்) வழங்க வேண்டுமெனவும், இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்கம் வங்கி கடன் மற்றும் மானிய விலையில் மூலப் பொருட்கள் வழங்கிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதுபோல் தொழில் ரீதியாக வருபவர்களுக்கு தங்குவதற்கு தேவையான இடவசதி அப்பகுதியில் இல்லை. இதுகுறித்து அரசாங்கம் ஆய்வு நடத்தி போதிய வசதிகளை செய்து கொடுத்தால் இன்னும் இந்த தொழில் மேம்படும் என அப்பகுதி மக்களும், தொழிலாளர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பீங்கான் தொழிற்பேட்டை அமைந்துள்ள பகுதியில் தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் தங்குவதற்கு போதிய இடவசதி இல்லாததால் குடிசை தொழிலாக ஆங்காங்கே புதிய ரக பீங்கான் பொருட்களை உள்ளூர், வெளிமாநிலத்தினர் செய்து வருகின்றனர். தற்போது கார்த்திகை தீபம் நெருங்கி வருவதால், அகல் விளக்குகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைக்காலம் என்பதால் மழை நேரங்களில் மண் காய வைப்பதற்கு மிகவும் சிரமப்படுவதாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

தேவையான, போதுமான மெட்டீரியல் கிடைக்காததால் ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தயார் செய்யப்பட்ட கப் அண்ட் சாசர், உப்பு ஜாடி பூந்தொட்டிகள், மண் குடுவைகள், பொம்மைகள் என பல பொருட்களை வாங்கி வந்து இங்குள்ள கம்பெனிகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே இந்த பீங்கான் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மானிய அளவில் மூலப் பொருளான மண் மற்றும் போதிய அடிப்படை வசதிகளை செய்து தொழிற்பேட்டையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருத்தாசலம் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post இந்தியாவிலே சிறப்பு வாய்ந்த விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டை மேம்படுத்தப்படுமா? ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Neyveli ,Voorathasalam ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால்...