- பாமகவினர்கள்
- மாமல்லபுரத்தில்
- பாமகவின்
- வெங்கடேசன்
- லிங்கபுரம்
- காஞ்சிபுரம் மாவட்டம் சங்கராபுரம்...
- பாமகவினர் சாலை மறியல்
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கூட தங்கும் அறையில் இருந்து தவறி விழுந்து பலியான சிற்பியின் சாவில் மர்ம இருப்பதாக கூறி நீதி கேட்டு பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள லிங்காபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (39). இவர், மாமல்லபுரம் கல்பாக்கம் சாலையில் உள்ள தனியார் சிற்பக்கூடத்தில் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். கடந்த, 15ம் தேதி மாலை சிற்பக்கலை கூடம் அருகே உள்ள ஓய்வு அறை கட்டிடத்தில் அமர்ந்து, சக வேலையாட்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, முதல் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் அடிபட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். காயமடைந்த வெங்கடேசனை சக வேலையாட்கள் மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். வெங்கடேசனின் உறவினர்கள் அவரது சாவில் மர்மம் இருப்பதாக மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, மாமல்லபுரம் போலீஸ் (பொ) இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், நேற்று பாமகவினர் 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் எதிரே திரண்டு வெங்கடேசன் வேலை செய்த சிற்பக்கலை கூட உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என கோசம் எழுப்பியும், நீதி கேட்டும் திடீரென கோவளம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விரைந்து வந்து விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு விசாரணை துரிதப்படுத்தப்படும் என பேச்சு வார்த்தை நடத்தி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். இதையேற்று, சாலை மறியலை கைவிட்டு பாமகவினர் கலைந்து சென்று, இடஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்காக மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் நோக்கி கூட்டமாக சென்றனர். இதனால், கோவளம் சாலையில் அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
The post சிற்பியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பாமகவினர் சாலை மறியல் appeared first on Dinakaran.