சென்னை: சென்னை மாநில கல்லூரியில் லிப்ட் வசதியுடன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பிரத்தியேக விடுதி கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் எத்தனை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருந்தாலும், சென்னை மாநில கல்லூரிக்கு எப்போதுமே தனித்துவம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையின்போது, மற்ற கல்லூரிகளை பின்னுக்கு தள்ளி மாநில கல்லூரி, மாணவ செல்வங்களிடமிருந்து அதிக விண்ணப்பங்களை பெற்று முதலிடத்தை பெறும். இந்த கல்லூரியில் இடம் கிடைக்காமல் மாணவர்கள் ஏராளமானோர் அலைமோதுவர். நடப்பு கல்வியாண்டில் மட்டும் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால், இந்த கல்லூரியில் இளநிலை படிப்புகளில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வெறும் 1140 மட்டுமே. குறந்த கட்டணத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் தரமான கல்வியை பெறுவதற்கு ஏற்ற இடம் என்பதால் இந்த கல்லூரிக்கு எப்போதுமே மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, பல அரசியல் தலைவர்களை உருவாக்கிய கல்லூரி என்றே இதனை சொல்லலாம்.
இந்த கல்லூரியில் பல்வேறு துறைகள் இருந்தாலும், காது கேளாதோர் மற்றும் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கான பட்ட படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இளங்கலை பட்ட படிப்புகளில் பி.காம்., பி.சி.ஏ.வில் இவர்களுக்கு என்று தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இளங்கலை படிப்புகளை முடித்து, முதுகலை படிப்பை தொடர்வதற்கு ஏதுவாக எம்.காம். படிப்பும் 2022-23ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே அரசு உதவியுடன் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்த படிப்புகளை பயில்வது இங்கு மட்டும் தான். அதன்படி இங்கு 350 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் பலரும் வெளியூர்களில் இருந்து இங்கு உள்ள கல்லூரியின் விடுதியில் தங்கி படிப்பவர்கள்.
பொதுவான விடுதியாக இல்லாமல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென பிரத்தியேக தங்கும் விடுதி கட்டிதரப்படும் என கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி, ஆசியாவிலேயே ரூ.21 கோடியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென பிரத்தியேக விடுதி தயாராகி உள்ளது. 210 பேர் தங்கும் வசதியுடன் மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களுக்கென பிரத்தியேக அறைகள், எளிதாக கையாளக்கூடிய கழிவறைகள், லிப்ட் வசதி மற்றும் சிறப்பு நடைமேடையுடன் இந்த விடுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராமன் கூறுகையில், ‘‘மாநில கல்லூரி என்றாலே மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும்.
காரணம் இங்கு கிடைக்கும் குறந்த கட்டணத்தில் தரமான கல்வி, மற்றும் சிறந்த வளாகம், அடிப்படை வசதிகள் என அனைத்தும் மாணவர்களுக்கு கிடைக்கும். கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் பல குடும்பங்களுக்கு வெளிச்சமாக மாநில கல்லூரி உள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் பல திட்டங்களை இந்த வளாகத்தில் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அதில் மாற்றூ திறனாளிகளுக்கான இந்த பிரத்தியேக விடுதியும் ஒன்று. மேலும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இந்த விடுதி அமைந்திருப்பதால் மாணவர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. தற்போது விடுதியின் மொத்தப்பணிகளும் நிறைவடந்து விட்டது. விரைவில் முதலமைச்சர் தலைமையில் இதன் திறப்பு விழா நடைபெறும். அன்று நமது கல்லூரிக்கு மேலும் ஒரு சிறப்பு சேரும்,’’ என்றார்.
The post மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.