- மேற்கு வங்கம்
- முதல் அமைச்சர்
- மம்தா
- கொல்கத்தா
- மம்தா பானர்ஜி
- RG கர் அரசு மருத்துவமனை
- கொல்கத்தா, மேற்கு வங்காளம்
- தின மலர்
கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் கடும் முட்டுக்கட்டைக்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஜூனியர் டாக்டர்கள் சம்மதித்தனர். மம்தா வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த கொலையில் கொல்கத்தா போலீசார் குற்றவாளியை உடனடியாக கைது செய்தனர். மேலும், இந்த கொலையை மறைக்கவும், விசாரணையை தாமதப்படுத்தவும் முயற்சித்த மருத்துவமனை முன்னாள் தலைவர் சந்தீப் கோஷை சிபிஐ கைது செய்துள்ளது. ஆனாலும், விசாரணையை சரிவர மேற்கொள்ளாத காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை பதவிநீக்கம் செய்யக் கோரி ஜூனியர் டாக்டர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்கள் பணிக்கு திரும்பவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதிலும், அதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமென கூறினர். இதற்கு அரசு தரப்பில் மறுக்கப்பட்டதால் 4 முறை முயற்சித்தும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. கடைசியாக கடந்த 14ம் தேதி மம்தா தனது வீட்டிற்கு ஜூனியர் டாக்டர்களை அழைத்த போதும் அவர்கள் கடைசி நிமிடத்தில் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் திரும்பினர். இந்த நிலையில், 5வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அரசு தரப்பில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. இதுவே கடைசி அழைப்பு என்றும் எச்சரிக்கப்பட்டது. இதில் பங்கேற்க வேண்டுமெனில் அரசு தரப்பை போல தங்கள் தரப்பிலும் பேச்சுவார்த்தையை வீடியோ பதிவு செய்வோம் என்றும், பேச்சுவார்த்தை பேசப்பட்ட விவரங்களை அறிக்கையாக எழுதி இருதரப்பும் கையெழுத்திட வேண்டும் என்றும் ஜூனியர் டாக்டர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதை மம்தா அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து நேற்று இரவு ஒருவழியாக பேச்சுவார்த்தை நடந்தது. காளிகட்டில் உள்ள மம்தா வீட்டில் மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடக்க இருந்த நிலையில், 2 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு தொடங்கியது. ஜூனியர் டாக்டர்கள் தரப்பில் 30 பேர் கொண்ட குழுவினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மம்தா வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். பேச்சுவார்த்தையில், ஜூனியர் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடித்துக் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டுமென மம்தா வலியுறுத்தினார். ஜூனியர் டாக்டர்கள் தங்களின் 5 கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுமென கூறி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
The post பெண் மருத்துவர் கொலை விவகாரம்; மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் ஜூனியர் டாக்டர்கள் பேச்சுவார்த்தை: இறுதி முயற்சியில் சமரசம் appeared first on Dinakaran.