×

கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் 22 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த எட்டியம்மன் கோயில் திறப்பு

* பலகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது, கலெக்டர், எஸ்பி ஆகியோர் சீலை உடைத்து திறந்து வைத்தனர்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் இருதரப்பு மோதலால் 22 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த எட்டியம்மன் கோயில் பலகட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கலெக்டர், எஸ்பி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் 1998ம் ஆண்டு கட்டப்பட்ட எட்டியம்மன் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் கடந்த 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் கோயிலுக்குச் செல்லும் வழி தொடர்பாகவும், சாமி தரிசனம் செய்வது தொடர்பாகவும் பிரச்னை செய்ததையடுத்து அந்த வருடமே கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து கடந்த 9ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக பட்டியலின மக்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே சாமி கும்பிடுவது தொடர்பாக அதிகாரி தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கோயிலில் பூஜை செய்ய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அப்போது பட்டியலின மக்கள் கோயிலுக்குள் பூஜைகள் செய்ய மற்றொரு தரப்பு ஒப்புக்கொண்ட நிலையில், கோயிலில் பூஜை செய்வதற்கான முன்னேற்பாடுகள் காவல்துறை அதிகாரிகளால் செய்யப்பட்டது. அதன்படியே கோயில் நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்றபோது, மாற்று சமூகத்தைச் சேர்ந்த பலர், கோயிலுக்குச் செல்லும் வழியானது பட்டா நிலம் எனக்கூறி பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல வழிவிடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வட்டாட்சியர் சரவணகுமார், டிஎஸ்பி கிரியோசக்தி, இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீண்டும் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது எங்கள் பட்டா நிலத்துக்கு வழி விடமாட்டோம் என ஒரு தரப்பு சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

அடுத்த கட்டமாக, கோயிலுக்குச் செல்ல வேறு வழி உள்ளதா என கேட்டதற்கு, சில பகுதிகள் சேறும், சகதியுமாய் உள்ளது, எனவே அந்த வழியில் செல்ல இயலாது என அரசு அதிகாரிகள் வட்டாட்சியரிடம் தெரிவித்தனர். அதன்பின்பு திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் கோயில் அருகே அந்தபோது ஊர் மக்கள் அனைவரும் ஓடி வந்து கோயில் வாசலில் அமர்ந்தபடி முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள், வட்டாட்சியர் ஆகியோர் கோயிலுக்கு மீண்டும் சீல் வைத்தனர்.

தொடர்ந்து இருதரப்பினரிடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், எஸ்பி சீனிவாச பெருமாள், வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் இரு தரப்பினரிடையே சமாதானம் ஏற்பட்டதையடுத்து சீல் வைக்கப்பட்ட கோயில் மீண்டும் திறக்கப்பட்டது. பின்னர், கோயிலுக்குள் சென்று பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து கோயிலுக்குச் செல்லும் வழியில் தார் சாலை அமைக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். 22 வருடங்களுக்குப் பிறகு கோயில் திறக்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து எட்டியம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் 22 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த எட்டியம்மன் கோயில் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Etiyamman temple ,Vazhulampedu ,Kummidipoondi ,SP ,Ettiamman ,Dinakaran ,
× RELATED பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில்...