×

வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு!

நன்றி குங்குமம் டாக்டர்

பெண்கள் மாதவிடாயின் போது நாப்கின்கள், மென்சுரல் கப்கள், டாம்பூன்கள் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதனை பல நிறுவனங்கள் பலவிதங்களில் தயாரித்து வருகிறது. இது குறித்து கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் எம்மா டிலௌவரியின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இதை எல்லோரும் வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு என்கிறார்கள்.

காரணம், இதுவரை பெண்களால் பயன்படுத்தப்பட்ட மாதவிடாய் பொருட்கள் அந்த நாட்களில் வெளியாகும் ரத்தத்தினைக் கொண்டு சோதிக்கப்படவில்லை. சலைன் நீர் அல்லது சாதாரண நீரை அதில் பயன்படுத்திதான் சோதனை நடைபெற்று வந்தது. மனித ரத்தத்தினைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முக்கியமான நோக்கம் HMB என்று சொல்லக்கூடிய கடுமையான மாதவிடாய் ரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு நாப்கின்கள், டாம்பூன்கள் எவ்வளவு
பலனளிக்கிறது என்பது குறித்துதான்.

அதிக ரத்தப்போக்கு என்றால், ஒருவர் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு நாப்கின்களை மாற்றுவார்கள். ரத்தப்போக்கும் அதிகமாக தென்படும். இதனால் சோர்வு, ரத்தச்சோகை போன்ற பிரச்னைகளை அவர்கள் சந்திப்பார்கள். ஆனால் இது பல பெண்களுக்கு தெரிவதில்லை. காரணம், அவர்களைப் பொறுத்தவரை மாதவிடாய் என்பது கழிவு ரத்தம். அதனால் அதிக ரத்தப் போக்கு ஏற்படும் போது அலட்சியமாக இருந்துவிடுவார்கள். இது குறித்து நடைபெற்ற சோதனையில் 21 வகையான பிராண்டுகள் தயாரிக்கும் மாதவிடாய் பொருட்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் குறிப்பாக இந்தப் பொருட்கள் ரத்தத்தின் சிவப்பு அணுக்களை எவ்வாறு சேகரித்து வைத்திருக்கிறது என சோதித்துள்ளனர்.

அதன்படி 80 மில்லி லிட்டர் ரத்தத்தை வைத்து சோதித்து பார்த்த போது டாம்பூனில் 33வது நாளில் ரத்தம் காலாவதியாகியுள்ளது. அதுவே நாப்கின்களில் 58 நாட்கள் நீடித்து இருந்துள்ளது. இந்தப் பொருட்களில் மென்சுரல் கப்கள் மட்டும் அதிகளவு ரத்தத்தை உள்வாங்கும் திறனை பெற்றிருக்கிறது. அதாவது, 18 முதல் 38 மில்லி லிட்டர் வரை ரத்தத்தை தாங்கும் திறன் கொண்டிருந்தது. அதிகமான ரத்தப் போக்கு உள்ளவர்களை மையப்படுத்தியே இந்த ஆய்வினை செய்து முடித்துள்ளார்கள்.

இந்தியாவில் 1896ம் வருடத்தில் இருந்தே மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் விற்பனையில் உள்ளது. அன்றிலிருந்து பெண்கள் பயன்படுத்தி வரும் பொருட்கள் முறையாக சோதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறியாமலேயே அதை உபயோகப்படுத்தி வந்திருக்கிறோம். மேலும் தற்போது இதில் பல அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அவையும் முறையான சோதனைக்குப் பிறகுதான் பயன்படுத்துவது சரியான தீர்வாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் இந்தப் பொருட்களால் உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தெரிந்து கொள்ளவே மேற்கொள்ளப்பட்டிருப்பதால், இதனை வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த ஆய்வு முடிவுகள் ஒரு புறம் இருந்தாலும் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களால் பிரச்னைகள் இருக்கதான் செய்கின்றன. குறிப்பாக நாப்கின்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள். நாப்கினுடன் டயாக்சின், பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் வாசனை திரவம் போன்ற ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. ஒரே நாப்கினை அதிக நேரம் பயன் படுத்தினால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக கருப்பை புற்றுநோய் உண்டாகக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) எனும் ரசாயனம் சேர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த மாதிரி ரசாயனங்கள் பெண்களுக்கு மட்டுமல்ல சுற்றுச்சூழலுக்கும் கேடு. சிலருக்கு சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தில் அரிப்பு, கருமை மற்றும் அலர்ஜிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மாதவிடாயின் போது, நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின்களை மாற்ற வேண்டும்.

தற்போது ரசாயனமற்ற மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் நாப்கின்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு உள்ளது. அடுத்து மென்சுரல் கப். சிலிகான் மற்றும் ரப்பரைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கப்கள் மூலம் பாதுகாப்பான வழியில் அதில் சேமிக்கப்படும் ரத்தத்தை வெளியேற்றி, கப்களை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு கப் பல ஆண்டுகள் பயன்படுத்தலாம் என்பதால், பொருளாதார ரீதியாகவும் சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்திற்கும் சிறந்தது.

செல்லுலோஸ் மற்றும் பருத்தியைக் கொண்டு தயாரிக்கப்படும் டாம்பூன்களும் சந்தையில் கிடைக்கின்றன. மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் ரத்தப்போக்கினை வெளியேறவிடாமல் இவை கிரகித்துக் கொள்வதால், பெண்களால் தங்களின் அன்றாட வேலையில் எப்போதும் போல இயல்பாக செயல்பட வசதியாக உள்ளது. நீச்சலடிப்பது, குளிப்பது போன்றவற்றை இதை அணிந்து கொண்டே செய்யலாம். மேலும் பருத்தியில் தயாரிக்கப்படும் மாதவிடாய் உள்ளாடைகளும் உள்ளன.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Emma Delauvari ,United States ,Dinakaran ,
× RELATED பெண்ணாதிக்கம் என்பது பெண் சுதந்திரமல்ல…