திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்து கல்லூரி மாணவர் பலியானதை தொடர்ந்து 4 வார்டுகளில் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இங்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருவாலி பகுதியை சேர்ந்தவர் 24 வயதான கல்லூரி மாணவர். அவர் சில தினங்களுக்கு முன்பு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் பெரிந்தல்மண்ணாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இறந்தார். கோழிக்கோட்டில் அவரது ரத்தம், உமிழ்நீர் மாதிரியை பரிசோதித்ததில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆனாலும் கூடுதல் பரிசோதனைக்காக பூனாவில் உள்ள நுண்ணுயிரி பரிசோதனைக் கூடத்திற்கு ரத்தம், உமிழ்நீர் மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட பரிசோதனையிலும் அந்த மாணவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவரின் வீடு உள்ள திருவாலி உள்பட சுற்றியுள்ள 5 வார்டுகள் தீவிர கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு வெளிநபர்கள் செல்லவோ, அங்கிருந்து தேவையில்லாமல் வெளியே செல்வதற்கோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இங்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருமணம் உள்பட நிகழ்ச்சிகளில் கூடுதல் ஆட்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நிபாவுக்கு பலியான மாணவர் பெங்களூருவில் ஒரு கல்லூரியில் படித்து வந்தார். பெரிந்தல்மண்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு 3 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இந்த மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
The post கேரளாவில் நிபாவுக்கு கல்லூரி மாணவர் பலி: தீவிர கட்டுப்பாடுகள் அமல் appeared first on Dinakaran.