×
Saravana Stores

காஷ்மீர் பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றம் : மேஜை மீது ஏறி, அவை காவலர்களை தாக்கியதால் பரபரப்பு!!

ஸ்ரீநகர் : காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு தகுதி வழங்கக் கோரி பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு தகுதிக் கோரி அவாமி இத்தேஹாத் கட்சி (ஏஏபி) தலைவர் ஷேக் குர்ஷித் பிடித்து இருந்த பதாகையை பாஜகவினர் பிடுங்கி கிழித்து எறிந்தனர்.

சபாநாயகரின் உத்தரவை அடுத்து அவையில் இருந்து வெளியேற்ற முயன்ற காவலர்களையும் பாஜகவினர் தாக்கினர். இந்த நிலையில் 3வது நாளாக காஷ்மீர் சட்டமன்ற அலுவல்களை நடைபெற விடாமல் பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேஜை மீது ஏறி நின்று அவர்கள் முழக்கமிட்டதால் பேரவையில் பெரும் பரபரப்பு நிலவியது. அவையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் உருவானதை அடுத்து குழப்பம் விளைவித்த பாஜக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் அப்துல் ரஹீம் உத்தரவிட்டார். சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் பேரவைக்கு வெளியே சிறிது நேரம் போராடினர். பாஜக எம்எல்ஏக்கள் அரசியலமைப்பை அவமதித்து வருவதாக குற்றம் சாட்டிய அமைச்சர் சதீஷ் சர்மா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை கேட்டுக் கொண்டுள்ளார்.

The post காஷ்மீர் பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றம் : மேஜை மீது ஏறி, அவை காவலர்களை தாக்கியதால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : BJP MLAs ,Kashmir ,Srinagar ,Jammu and ,Kashmir council ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு...